அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம் அவர்களின் தனிப்பட்ட சேகரிப்பு, நூலக நிறுவனத்திற்கு நன்கொடை!
வரலாற்றின் பக்கங்களைப் பாதுகாப்பதில் ஆவண நன்கொடையாளர்களின் பங்களிப்பு என்பது கடந்த காலத்தைப் பேணுவது மட்டுமல்ல; எதிர்காலத் தலைமுறைகளுக்கான அறிவுச் செல்வத்தை உருவாக்குவதுமாகும்.
ஒருவர் வாழ்ந்த காலம் முடிவடையலாம். ஆனால், அவர் தேடிச் சேகரித்த அறிவும், எழுதிவைத்த சிந்தனைகளும், பாதுகாத்த ஆவணங்களும் காலத்தைக் கடந்து வாழவேண்டும்.
குப்பிளானைச் சேர்ந்த அமரர் சி.அ. யோதிலிங்கம் அவர்கள், இலங்கையின் அரசியலமைப்பு மாற்றங்கள், சர்வதேச அரசியல் போக்குகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாகத் தொடர்ச்சியாக ஆய்வுக்கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி, தமிழ் அறிவுலகிற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியவர். அவரது வாழ்நாள் தேடலின் அடையாளங்களாகத் திகழும் தனிப்பட்ட சேகரிப்புகள் தற்போது பொதுமக்களின் அறிவுப் பயன்பாட்டிற்காகப் பாதுகாக்கப்படவுள்ளன.
அவரது தனிப்பட்ட சேகரிப்பில், இதுவரை நூலக நிறுவனத்தினால் ஆவணப்படுத்தப்படாத 519 நூல்கள், அவரது படைப்புகள் மற்றும் ஏனைய எழுத்தாளர்களின் படைப்புகள் அடங்கிய கோப்புகள் எனப் பெறுமதிமிக்க அறிவுசார் ஆவணங்கள் எண்ணிமப்பாதுகாப்பிற்காக நூலக நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
நூலக நிறுவனத்தின் Emeritus Board Member தமிழினி யோதிலிங்கம் அவர்களே, தனது தந்தையான சி.அ. யோதிலிங்கம் அவர்களின் தனிப்பட்ட சேகரிப்புகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அறிவுச் சேகரிப்புகளைப் பொதுச் சமூகத்தின் பயன்பாட்டிற்காக வழங்கியிருப்பது, அறிவைப் பகிர்ந்துகொள்ளும் உயரிய பண்பாட்டின் வெளிப்பாடாகும். இவற்றுடன், நூலக நிறுவனத்தின் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் கணினி மற்றும் தளபாடங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
தனிப்பட்ட சேகரிப்புகள் பொதுப் பயன்பாட்டிற்கான அறிவுச் செல்வமாக மாறும்போது, அவை காலத்தைக் கடந்து பல தலைமுறைகளுக்குப் பயனளிக்கின்றன. இந்த நன்கொடைக்கு நூலக நிறுவனம் தனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றது.
அறிவைப் பாதுகாப்போம்! வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவோம்!
-தகவலறிக்கை நூலகம்.



No comments:
Post a Comment