SHARE

Saturday, January 16, 2010

கூட்டமைப்பின் நிலைப்பாட்டை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது

கூட்டமைப்பின் நிலைப்பாட்டை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது
யாழ் உதயன் 2010-01-16 07:24:13
புதுடில்லியில் வைத்து மாவை சேனாதிராஜா தெரிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் போன்றவை தொடர்பான விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவுகள், அணுகு முறைகள் போன்றவற்றை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா நேற்றுப் புதுடில்லியில் வைத்துத் தெரிவித்தார்.

நேற்று மாலை வரை இரண்டு நாள்கள் புதுடில்லியில் தங்கியிருந்து இந்திய அரசுத் தலைமையோடும், அதிகாரிகளோடும் பேச்சு நடத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவில் மாவை சேனாதிராஜாவும் ஒருவர். அவருடன் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் எம்.பிக்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் அந்தப் பேச்சுகளில் பங்குபற்றினர். நேற்று முன்தினம் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா ராவ் மற்றும் வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து விரிவான பேச்சுகளில் ஈடுபட்ட அக்குழுவினர் நேற்றும் இந்திய அரசின் உயர் வட்டாரங்களுடன் கலந்தாலோசனையில் ஈடுபடவிருந்தனர். இதுவரை இடம்பெற்ற சந்திப்புகள் குறித்து மாவை சேனாதிராஜா எம்.பி. நேற்று "உதயனு" க்குக் கூறியவை வருமாறு:

முக்கியமாக மூன்று விடயங்களை இந்தியத் தரப்புக்கு எடுத்துரைத்தோம்.
ஒன்று தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களோடு சேர்ந்து எடுத்த முடிவு, அதன் பின்புலம் போன்றவற்றை விளக்கினோம்.
அடுத்தது தற்போதைய அரசியல் கள நிலைவரம், தமிழ்மக்களின் எண்ணக் கருத்து, நிலைப்பாடுகள், எதிர்பார்ப்புகள், அபிலாஷைகள் என்பவற்றைக் கூறினோம்.
மூன்றாவது இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம், நீதி கிட்டுவதற்காக நாம் எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள், இலக்குகள், அதற்காக இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கும் ஒத்துழைப்பு ஆகியன.

நம்பிக்கை தருவதாக அமைந்தது
இந்த விடயங்களை மிக்க கவனமாக செவிமடுத்த புதுடில்லித் தரப்பு, எங்களுடைய கருத்துகளை உள்வாங்கி ஏற்றுக்கொண்டுள்ளது. மிகவும் ஆரோக்கியமானதாகவும், நம்பிக்கை தருவதாகவும் இந்தத் தொடர்பாடல் இடம்பெற்று வருகின்றமை குறித்து நாம் முழுத் திருப்தி அடைந்துள்ளோம்.இன்று (சனியன்று) நாம் சென்னை திரும்பி, அடுத்த நாள் கொழும்பு செல்வோம். நாளை 17 ஆம் திகதிமுதல் வடக்கு, கிழக்கில் எமது தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முழு மூச்சாக ஒரு வாரத்துக்கு இடம்பெறும். கிழக்கில் முஸ்லிம் தரப்புடன் சேர்ந்து பிரசாரக் கூட்டங்களை நடத்தவும் உத்தேசித்துள்ளோம். வடக்கு, கிழக்குக்கு வெளியிலும் கொழும்பிலும் பிரசாரக் கூட்டங்களை நடத்துவது குறித்துப் பரிசீலித்து வருகின்றோம். என்றார் அவர். இதேநேரம், இலங்கையின் தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் தரப்பு வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள கையோடு, கூட்டமைப்பின் மூத்த தலைவர்களை அரசியல் பேச்சு நடத்துவதற்காக புதுடில்லி அழைத்தமை, இலங்கை அரசுத் தரப்புக்குக் காட்டப்பட்ட தவறான சமிஞ்ஞை என்ற சாரப்பட இவ்விடயத்தைக் கொழும்பு கவனத்தில் எடுத்திருப்பதாக சில வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், இவ்விடயம் தொடர்பில் கொழும்புத் தரப்பில் இருந்து அத்தகைய உத்தியோகபூர்வ கருத்து வெளிப்பாடு ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...