SHARE

Sunday, October 04, 2026

அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

2026 ஒக்டோபர் 04 தமிழ் மிரர்
 

சவூதி அரேபியச் சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை, கருணை மற்றும் மன்னிப்பின் அடிப்படையில் சவூதி அரசும் சவூதி மன்னரும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கொழும்பில் விசேட அமைதி வழி உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கை இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை (04) காலை 9:00 மணி ஆரம்பமானது. இந்த போராட்டம் மாலை 5:00 மணி வரை   இடம்பெற்றும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விளிம்பில் இருக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இலங்கை மைந்தன் சிவராசா அனோஜனை சவூதி அரசு மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இப்போராட்டம் நடத்தப்படுகின்றது.

மேலும், இலங்கை அரசாங்கம், தமிழ், இஸ்லாமிய மற்றும் பௌத்த அமைப்புகள் அனோஜனின் விடுதலைக்காக முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் இருக்கும் நோக்கிலேயே இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டம் குறித்துக் கருத்துத் தெரிவித்த இலங்கை இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் செயலாளர் கலாநிதி என். கே. எஸ். திருச்செல்வம், கொழும்பில் வாழும் தமிழ், இஸ்லாமிய மற்றும் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த அனைத்து மூவின மக்களும் நேரில் வருகை தந்து இந்த அமைதி வழிப் போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நாடு முழுவதிலும் உள்ள சுமார் 1,000 இந்து அமைப்புக்கள் மற்றும் திருக்கோயில்களின் பிரதிநிதிகளிடம் கையெழுத்துக்களைப் பெறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு பெறப்படும் கையெழுத்துக்களை உள்ளடக்கிய மகஜர் தயார் செய்யப்பட்டு, இலங்கை அரசு, சவூதி அரேபிய அரசு, இந்திய அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN) போன்ற சர்வதேச அமைப்புகளுக்கும் முறைப்படி கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஓர் இளைஞனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, கட்சி மற்றும் மத வேறுபாடுகளின்றி அனைத்து மக்களும் திரண்டு வந்து ஆதரவு வழங்குமாறு அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம் 2026 ஒக்டோபர் 04 தமிழ் மிரர்   சவூதி அரேபியச் சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனையை...