யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் ஆரம்பமாகியது.
பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் பீடாதிபதிகள் அணிவகுத்து வர, கொடி, குடை, ஆலவட்டங்கள் சகிதம், பிரபுத்துவ மரபு சார்ந்த பண்பாட்டு அணிவகுப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமாகிய நிலையில் விழா அரங்குக்கு வருகைதந்த துணைவேந்தர் அமர்வுகளுக்குத் தலைமை தாங்கிப் பட்டங்களையும், பரிசில்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
பண்பாட்டு அணிவகுப்பு |
19 முதல் வரும் 22 ஆம் திகதி வரை 13 அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு வைபவத்தில் 3,920 மாணவர்கள் பட்டங்களைப் பெறவிருந்தனர்.
இவர்களில் கணிசமான மலையக மாணவ, மாணவியர் பல்வேறு துறைகளில் பட்டதாரிகள் ஆகினர்.
அவர்களில் சிலரின் விபரத் தொகுப்பு.
* லிந்துலை - தங்கக்கலை, கேம்பிரி கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த போல்ராஜ் சபேஷ்ராஜ் (ஹரீஷ்) கட்டிடத் தொழில் நுட்பத்துறையில் சிறப்பு பட்டம் (BET Honors) பயின்று, தனது பட்டத்தைப் பெற்றுள்ளார்.
லிந்துலை - மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தில் 1-11ஆம் வகுப்பு வரை முடித்த இவர், அக்கரப்பத்தனை ஹோல்ப்ரூக் விஞ்ஞான கல்லூரியில் 2016-2018 ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையை முடித்தார். அதன் பின்னர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 4 வருட பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் கட்டிடத் தொழில்நுட்பத்துறையில் சிறப்பு பட்டம் (BET Honors) பயின்று, கடந்த மார்ச் 19ஆம் தேதி தனது பட்டத்தைப் பெற்றுள்ளார்.
* ஹப்புத்தளை தோட்டம் (பழையகாடு) சேர்ந்த வீரமணி பரிமளாதேவி B.A Honour (Economics Special) பட்டம் பெற்றுள்ளார்.
பரிமளாதேவி ஆரம்ப கல்வியை ஹப்புத்தளை இல: 01 தமிழ் மகா வித்தியாலயத்திலும், உயர் தரக் கல்வியை ஹப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரியிலும் பயின்றுள்ளார்.
* புசல்லாவை, ரொச்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் கவிதா B.A Honour (Geography Special) பட்டம் பெற்றுள்ளார்.
இவர் தனது ஆரம்ப கல்வியை புசல்லாவை ரொச்சைல்ட் தமிழ் வித்தியாலயத்திலும், உயர் கல்வியை புசல்லாவை இந்து தேசிய கல்லூரியிலும் பயின்றுள்ளார்.
* இரத்தினபுரி மாவட்ட பலாங்கொடை பிரதேசத்தின் நிலுக்ஷி சுப்பிரமணியம் (B.A) பொதுக் கலைமாமணி பட்டம் பெற்றுள்ளார்.
இவர் தனது ஆரம்ப கல்வியை இ/பலா/ மெத்தகந்த தமிழ் வித்தியாலயத்திலும் உயர்தர கல்வியை இ/பலா/ சீ.சீ தமிழ் மகா வித்தியாலயத்திலும் பயின்றவராவார்.
* புசல்லாவை, சோகம தோட்டம் மேல் பிரிவை சேர்ந்த செல்வி கலைச்செல்வன் சந்திரலேகா, பொறியியல் தொழில்நுட்பம் (Bachelor of Engineering Technology Honours) Specialization in Construction , Second ) பட்டம் பெற்றுள்ளார்.
இவர் புசல்லாவை இந்து தேசிய கல்லூரியின் பழைய மாணவியாவார்.
* கண்டி மாவட்டத்தின் மடுல்கலை மேற் பிரிவை சேர்ந்த செல்வராஜ் செல்வரஞ்சன் முதலாவது கலைமாமணி சிறப்பு புவியியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை க/வ/ குறிஞ்சி தமிழ் வித்தியாலத்திலும், இடைநிலை கல்வியை க/வ/ அபிராமி தமிழ் மகா வித்தியாலயத்திலும் உயர்தரத்தினை மாத்தளை இந்து தேசியக் கல்லூரியிலும் பயின்றவராவார்.
கல்வி முறையும், உடல்-மூளை உழைப்பு வேற்றுமையும், கல்விசார் அதிகாரமும் எவ்வளவுதான் ஜனநாயகம் அற்றவையாகவும், பின்தங்கிப் பிற்போக்கானவையாக இருக்கிற போதும், 200 ஆண்டுகால பிரபுத்துவ தொடர் காலனிய கூலி அடிமைத்தனத்தின்-நிலத்தோடு கட்டுண்ட நிலைமை இன்னமும் நீடித்து நிலைக்க வைக்கப்பட்டிருக்கின்ற மலையக சமூகத்திற்கு இந்தக் கல்வி முன்னேற்றம் மிக அவசியமானதே ஆகும்.
இப்பட்டதாரிகள்-`முன்னணி சக்திகள்`-, நிலத்தோடு கட்டுண்ட கூலி அடிமை முறையின் ஒழிப்புக்கு, நாடாளமன்ற பொறுக்கித்தனத்துக்கு, பெருந்தோட்டக் கம்பனிகள் எனப்படுகின்ற தொடர்காலனிய பண்ணையாளர்களின் கொடும் சுரண்டலுக்கு, மைய அரசின் கொடுங்கோன்மைக்கு எதிரான ஓரு புதிய மலையகத்தின் எழுச்சிக்கு ஒளி வீசுவார்கள் என நம்புவோமாக! வாழ்த்தி வரவேற்போமாக!!🔺