கல்லூரி மாணவிகள் 3 பேர் தற்கொலையில் மர்மம்: பெற்றோர் புகார்!
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே தனியார் ஹோமியோபதி கல்லூரி மாணவிகள் 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மர்மம் உள்ளதாக அந்த மாணவிகளின் பெற்றோர் புகார் தெரிவித்து உள்ளனர். அந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் என்னும் இடத்தில் தனியார் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பயின்ற 2-ம் ஆண்டு இயற்கை மருத்துவம் படித்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் நேற்று கல்லூரிக்கு எதிரே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர், 2 மணி நேரம் போராடி மாணவிகளின் உடல்களை கிணற்றில் இருந்து மீட்டனர். அதன்பின் அந்த உடல்களை, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், மாணவி ஒருவரின் பையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், தற்கொலைக்கான காரணம் எழுதப்பட்டிருப்பதாகவும், கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு சரிவர ரசீது தருவதில்லை என்றும், நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்றும், அதை கண்டிக்கும் வகையில் தற்கொலை செய்துகொள்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, இதே கல்லூரியை சேர்ந்த மாணவிகள் சிலர், எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் இயங்கி வரும் இந்த இயற்கை மருத்துவக் கல்லூரியில், மாணவிகளை வேலை செய்யச் சொல்லி வற்புறுத்தியும், சரியாக உணவு வழங்காமல் கல்லூரி நிர்வாகம் கொடுமைப்படுத்தியதாக கூறி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அப்போது ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு டி.சி. வழங்குமாறு விழுப்புரம் ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை மதிக்காத கல்லூரி நிர்வாகம், மாணவிகளுக்கு டி.சி. வழங்க மறுத்துள்ளது.
தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மாணவி சரண்யாவின் பெற்றோர் கூறும்போது, "அங்கே சரியான சாப்பாடு வசதி, அடிப்படை வசதிகள் இல்லை என்று அவள் பலமுறை கூறி வந்தாள். படிப்பு சொல்லிக்கொடுக்க ஆசிரியர்களும் இல்லை. கழிவறையை கூட நாங்கள் தான் சுத்தம் செய்ய வேண்டி உள்ளது என்றாள். அதை நாங்கள் கல்லூரிக்கு சென்று கேட்டால், உடனே எங்கள் மகளை கல்லூரி நிர்வாகத்தினர் திட்டுவதாகவும் அவள் கூறினாள்.
மேலும், எங்கள் மகள் இறப்பு குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் எங்களுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கவில்ல. காவல்துறையில் இருந்து தான் எங்களுக்கு தகவல் வந்தது. அதுவும் உங்கள் மகள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று சொன்னார்கள். இங்கு வந்து பார்த்தால் அவள் தலை உள்ளிட்ட பல இடங்களில் காயங்கள் உள்ளது. அவள் தற்கொலை செய்துகொள்ளும் ஆள் இல்லை. இந்த இறப்பில் மர்மம் உள்ளது" என்று கண்ணீர் வடித்தார்.
இதனிடையே விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சரண்யாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய நிலையில், அந்த கல்லூரி தாளாளர் வாசுகி சுப்பிரமணியனை கைது செய்வதற்காக போலீசார் சென்னை விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாசுகியின் கணவர் சுப்பிரமணியன் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், அங்கு வாசுகி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.