ஈழத் தமிழர்களுக்கு மோடியால் நன்மை விளையும் - உருத்திரகுமார்
[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 07:47 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ]
நன்றி: டி.அருள் எழிலன் - ஆனந்த விகடன் - 11 Jun, 2014
'இனப் படுகொலை குற்றவாளிகள்’ என்று 12 பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டிருக்கிறது 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’. இந்தியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்று இலங்கை திரும்பியிருக்கிறார் அதிபர் ராஜபக்க்ஷே. இனி, 'ஈழ விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் அரசின் அணுகுமுறையையே இப்போதைய இந்திய அரசு கைக்கொள்ளுமா?’ என்பதுதான் இலங்கைத் தமிழர்களிடம் எழுந்திருக்கும் கேள்வி. இது தொடர்பாக, நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர்
உருத்திரகுமாரனிடம் பேசினேன்...
''2009-ல் போர் முடிந்தபோது இருந்த சர்வதேச சூழலுக்கும், இன்றைய உலக நாடுகளின் அணுகுமுறைக்கும் வேறுபாடு உள்ளதா?''
''நிச்சயமாக! மாபெரும் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்தபோது, சிறிலங்காவை உலக நாடுகள் பாராட்டின. ஐ.நா-வில் முதல் தீர்மானம், சிறிலங்காவைப் பாராட்டியே நிறைவேற்றப்பட்டது. மேற்கு உலக ஊடகங்கள்,
தமிழர்கள், மனித உரிமை அமைப்புகளின் இடைவிடாத முயற்சிகளால் இனப்படுகொலை ஆதாரங்கள் உலக மக்களின் மனச்சாட்சியை உலுக்கிய பிறகே, உலக நாடுகளின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டது. இன்று, ஜக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைய அலுவலகத்தின் விசாரணைக்கு உள்ளாகும் ஒரு நாடாக சிறிலங்கா மாறியிருக்கிறது.
ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட இந்த மாற்றம் சர்வதேச புவிசார் நலன்களின் அடிப்படையில் அமைந்தாலும் கூட, ஈழ மக்களுக்குச் சாதகமாக இவை மாறும் வாய்ப்புகள் உள்ளன!
ஆனால், அது அத்தனை எளிதல்ல என்பதையும் நாம் அறிவோம்.
சீனாவின் பக்கபலத்துடன் இந்தியாவையும் அமெரிக்காவையும் தனது நலன்களின் அடிப்படையில் அணுக முடியும் என நம்புகிறது சிறிலங்கா. இப்போது சீனா, சிறிலங்கா முழுக்க எங்கும் வியாபித்துவிட்டது. சிறிலங்கா விரும்பினாலும் சீனாவின் பிடியில் இருந்து இனி அது தப்ப முடியாது. இனியும் சிங்கள அரசுடன் உறவாடி,
இலங்கைத் தீவில் இருந்து சீனப்பாம்பை இந்திய மயிலால் கொத்திக் கலைக்க முடியும் என நாம் கருதவில்லை. இந்த நாடுகளின் பரமபத வியூகங்கள் இடையேதான், இலங்கைத் தமிழர்களுக்கு நல்ல விளைவுகளை உண்டாக்க வேண்டும்!''
''இலங்கை மீதான சர்வதேச விசாரணை எப்போது தொடங்கும்?''
''சர்வதேச விசாரணைக்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 'ஐ.நா-வின் இந்த விசாரணையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்’ என்று சிறிலங்கா அறிவித்துள்ளது. இதனால் இலங்கைத் தீவுக்கு வெளியில் இருந்துதான், இந்த விசாரணையை மனித உரிமைகள் ஆணையம் மேற்கொள்ள வேண்டிவரும். அதே நேரம், இந்த விசாரணை முடிவு என்பது மிகவும் கீழ்மட்ட நிலையில் அமைந்துள்ளதே தவிர, ஈழத் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் இந்த விசாரணையின்
மூலமாக வெளிவரும் உண்மைகள், சிங்களத்தை இன அழிப்புக் கூண்டில் ஏற்றத் துணை செய்யும் என்றே நாம் நம்புகிறோம். ஆனாலும், நாம் பல வழிகளிலும் போராட வேண்டியுள்ளது. குறிப்பாக, உலகின் பல நீதிமன்றங்களில் ஈழப் படுகொலைகளுக்கு எதிரான வழக்குகள் தொடரப்பட வேண்டும்!''
''இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று, கடந்த காங்கிரஸ் அரசு பல ஈழ அமைப்புகளையும் பிரமுகர்களையும் இந்தியாவில் தடை செய்ததே. உங்கள் அமைப்புக்கும் அது பொருந்துமா?''
''இல்லை. எங்களைத் தடை செய்யவில்லை!''
''நீங்கள் வெளியிட்டுள்ள இனப்படுகொலை குற்றவாளிகள் பட்டியலில், இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகாவின் பெயர் உள்ளது. ஆனால், ரணில் விக்கிரமசிங்கே பெயர் விடுபட்டுள்ளது. இனக்கொலையாளிகள் என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்?''
''சந்திரிகா குமாரதுங்க சிறிலங்காவின் ஜனாதிபதியாக இருந்தவர் என்ற முறையில், முப்படைகளின் மேன்மைத் தளபதியாகவும் இருந்தவர். ரணில், ராணுவ நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்டது இல்லை. யாழ்குடா நாட்டின் மீதான 'சூரியக்கதிர்’, வன்னி பெரு நிலம் மீதான 'வெற்றி நிச்சயம்’ போன்ற ராணுவ நடவடிக்கைகள், சந்திரிகாவின் தலைமையில் நடந்தவைதான். சந்திரிகாவின் யுத்த முன்னெடுப்புகளின் தொடர்ச்சிதான் ராஜபக்ஷேவின் தலைமையில் உச்சம் பெற்று இன அழிப்புப் போராக முள்ளிவாய்க்காலில்
முடிந்தது. தமிழ் இன அழிப்பு முயற்சிகள் ராஜபக்க்ஷேவால் மட்டும் மேற்கொள்ளப்பட்டவை அல்ல!''
''புலிகளுக்குப் பின்னர் ஈழ ஆதரவாளர்கள் சிதறிவிட்டார்கள். ஒரே குடையின் கீழ், உங்களால் மக்களை அணி திரட்ட முடியவில்லையே?''
''ஈழ மக்கள், தமிழகம் மற்றும் உலக மக்கள் அனைவருமே 'ஈழ விடுதலை’ என்ற ஒற்றைக் கருத்தில் உறுதியோடு இருக்கிறார்கள். தமிழீழ தனி அரசை நோக்கிய பயணத்தில்தான் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து அமைப்புகளும் 'ஐக்கிய முன்னணி’ என்ற பெயரில் இணைவதன் மூலமாகவே, மக்களை ஒரு குடையின் கீழ் திரட்ட முடியும். அது மட்டுமே பூரண வெற்றியளிக்கும். அதை நோக்கியே எங்கள் செயல்பாடுகள்
இருக்கும்!''
''ஆனால், தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்களிடையே உங்களுக்கு ஆதரவு இல்லையே?''
''எங்களுடைய அரசியல் செயல்பாடுகளுக்கு, தமிழகத்தில் பூரண ஆதரவு உள்ளது. தமிழகத்தின் கோரிக்கையும், தமிழகச் சட்டமன்றத் தீர்மானங்களும்,
தமிழக முதல்வரின் கோரிக்கையும், எங்கள் கோரிக்கையும் ஒன்றுதான். எங்கள் அமைப்புக்கான ஆதரவு தளத்தைத் தமிழகத்தில் விரிவுபடுத்தி வருகிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம் தமிழகத்தில் செயற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் அறிவுச் சமூகமும் எமக்கு ஆதரவாக உள்ளது. எதிர்வரும் காலங்களில் தமிழ்நாட்டிலும், இந்தியாவின்
ஏனைய மாநிலங்களிலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவுத் தளம் மேலும் விரிவடையும் என நாம் உறுதியாக நம்புகிறோம்!''
''மோடியின் பதவியேற்பு விழாவில் ராஜபக்க்ஷே கலந்துகொண்டிருக்கிறார். இந்திய அரசு, ஈழத்துக்காகப் போராடும் சக்திகளுக்கு நண்பனாக இருக்குமா?''
''அதற்கான வாய்ப்புகள் இனி அதிகம். ஈழத்தில் தமிழர்களை சிங்கள அரசு ஏன் அழித்தது என்ற உண்மையை, இந்தியாவின் புதிய பிரதமர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. மகாவம்சத்தால் வளர்த்தெடுக்கபட்ட சிங்கள மனப்பான்மை, அடிப்படையில் இந்திய எதிர்ப்பால் கட்டப்பட்டது.
இதற்கு, உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்லலாம். 1898-ல் சுவாமி விவேகானந்தர் சிக்காக்கோவில் இருந்து இலங்கை வந்தபோது, அவரை, சிங்களப் புத்த பிக்குகள் சூழ்ந்துகொண்டு மறித்திருக்கிறார்கள். இதனை சுவாமி விவேகானந்தரே தனது எழுத்துகளில் பதிந்துள்ளார்.
உலகம் போற்றிய ஒரு மகானை சிங்கள புத்த பிக்குக்கள் எதிர்த்தது, சிங்களத்தின் இந்திய இந்து எதிர்ப்பு உணர்வின் ஓர் அடையாளம். ஈழத் தமிழர்களை இந்தியாவின் வரலாற்று நீட்சியாகவே சிங்களவர்கள் பார்க்கிறார்கள்!
தமிழர்களை அழிப்பதன் மூலம், இந்தியாவை இலங்கைத் தீவில் இருந்து அகற்றலாம் என, சிங்களம் எண்ணுகிறது. இந்தப் பார்வையில் ஈழத் தமிழர்களின் தோல்வி என்பது இலங்கையில் இந்தியாவின் தோல்வியாகவே அமையும். இதனைப் புரிந்துகொண்டு சிறிலங்கா தொடர்பான கொள்கைகளை மோடி அரசாங்கம் வகுக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழீழ நிலப்பரப்பு, இந்து மகா சமுத்திர கேந்திரத்தின் முக்கியம் வாய்ந்த இடத்தில் அமைந்திருப்பதால், இந்தியாவின்
பாதுகாப்பும், தமிழர்களின் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாகி இருக்கின்றன.
சிங்களத் தலைவர்கள், நிலைமைகளுக்கு ஏற்ப வளைவதில் வல்லவர்கள். மோடியின் முன்னால் குனிவதுபோல ராஜபக்க்ஷே நடித்திருப்பார். ஆனால், அவரே பின்னால் சென்று சீனாவுடன் சேர்ந்து உதைத்துத் தள்ளலாம்.
இந்திய - ஈழத் தமிழ் மக்கள் உறவில் இடையில் ஏற்பட்ட கசப்புகளை நாம் கடந்து சென்று, புதியதோர் நல்லுறவுப் பாலத்தை பிரதமர் மோடியின் காலத்தில் கட்டி எழுப்ப முடியும் என நம்புகிறோம்!''
''எதன் அடிப்படையில் ஈழத் தமிழர் விவகாரத்தில், முந்தைய காங்கிரஸ் அரசிடம் இருந்து பா.ஜ.க. அரசாங்கம் வேறு அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?''
''காங்கிரஸ் அரசாங்கம், இந்திய நலன்களை தொலைநோக்கில் முன்னிறுத்த தவறி, 'ராஜீவ் காந்தி கொலை’ என்ற ஒரு விஷயத்தை மட்டுமே வைத்து, ஈழத் தமிழர் விவகாரத்தைக் கையாண்டது. இதனால் அறிவுபூர்வமான அணுகுமுறையைவிட உணர்ச்சிமயமான அணுகுமுறையே தலைதூக்கி இருந்தது. விடுதலைப்புலிகளை அழிக்க வேண்டும் என்ற தமது விருப்பம் கைகூட வேண்டும் என்பதற்காக, பெரும் தமிழினப் படுகொலை ஒன்று சிங்களத்தால் நடத்தப்படுவதற்கு, முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் அனுசரணையாக இருந்தது என்பதை எம் மக்கள் மறக்கவில்லை.
மோடி தலைமையிலான புதிய அரசாங்கம், இத்தகைய பழைய சுமைகளைக் கொண்டிருக்கவில்லை. புதிய நிலைமைகளைக் கவனத்தில் எடுத்து இந்தியாவின் பாதுகாப்புக்கும், ஈழத் தமிழர் பாதுகாப்புக்கும் நெருக்கமான உறவுக்கான புற நிலைகள் தற்போது உருவாகி இருப்பதை அது புரிந்துகொள்ள வேண்டும்.
மீண்டும் சொல்கிறேன், இந்திய நலன்களும் ஈழத் தமிழர்களின் நலன்களும் வெவ்வேறானவை அல்ல!''