SHARE

Monday, October 26, 2026

இலங்கையின் செல்வாக்கிலிருந்து விலகிச் செல்லும் காற்றுச் சுழற்சி

 26.10.2026 திங்கட்கிழமை இரவு 9.45 மணி

இலங்கையின் செல்வாக்கிலிருந்து விலகிச் செல்லும் காற்றுச் சுழற்சி
--------------------------------------------

இலங்கையின் பல இடங்களிலும் நிலவிய கனமழையோடு கூடிய மோசமான வானிலை நாளை அதிகாலை முதல் படிப்படியாக வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது திருகோணமலையில் இருந்து வடகிழக்கு திசையில் 270 கி.மீ. தொலைவில் காணப்படும் காற்றுச் சுழற்சி இன்று இரவு மேலும் வட கிழக்கு திசையில் நகர்ந்து இலங்கையின் செல்வாக்கிலிருந்து படிப்படியாக விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக இலங்கையின் பல இடங்களிலும் நிலவிய கனமழையோடு கூடிய மோசமான வானிலை நாளை அதிகாலை முதல் படிப்படியாக வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை (27.10.2026) அதிகாலை முதல் வடக்கு மாகாணம் முழுவதும் மழையற்ற வானிலை நிலவத் தொடங்கும். எனினும் வடக்கு மாகாணத்தின் ஒரு சில இடங்களில் மிதமான தூறல் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஆனால் நாளையும் நண்பகலுக்கு பின்னர் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் சற்றுக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக திருகோணமலையின் இறக்கண்டியிலிருந்து தோப்பூர் வரை சில இடங்களில் சற்று கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
நாளை அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை, உகன, நமல்ஓயா பகுதிகளில் சற்றுக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் ஒரு சில இடங்களில் சற்று மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தென் மாகாணத்தின் பல பகுதிகளுக்கு நாளையும் மிதமானது முதல் சற்று கனமான மழை பதிவாகக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
குறிப்பாக காலி மாவட்டத்தின் கரையோரப் பகுதிகள் இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மேல் மாகாணத்தில் நாளை சில இடங்களில் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. களுத்துறை மாவட்டம் சற்று கனமழை யைப் பெறும் வாய்ப்புள்ளது.
அதேவேளை மத்திய வங்காள விரிகுடாவில் உள்ள தீவிரமான அர்னாப் புயல் எதிர்வரும் 28.10.2026 அதிகாலை/ காலை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள காக்கிநாடா வுக்கு அண்மையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும் போது புயலின் மையம் நோக்கி ஈர்க்கப்படும் ஈரப்பதன் நிறைந்த காற்று அரபிக்கடலில் இருந்து புத்தளம் முதல் மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளினூடாக இலங்கைக்குள் நுழைவதால் இலங்கையின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் 28.10.2026 அன்றும் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அந்த வகையில்......
எதிர்வரும் 28.10.2026 பிற்பகலில் 1.00 மணிக்கு பின்னர் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம் சற்றுக் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 28.10.2026 அன்று புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, கம்பஹா, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் நுவரெலியாவின் சில பகுதிகளுக்கு சற்றுக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 28.10.2026 இரவு 10.00 மணி வரை வடக்கு, கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
- நாகமுத்து பிரதீபராஜா -


இலங்கையின் செல்வாக்கிலிருந்து விலகிச் செல்லும் காற்றுச் சுழற்சி

  26.10.2026 திங்கட்கிழமை இரவு 9.45 மணி இலங்கையின் செல்வாக்கிலிருந்து விலகிச் செல்லும் காற்றுச் சுழற்சி ------------------------------------...