தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காக குரல் கொடுத்த
சி. அ.யோதிலிங்கம் காலமானார்
வடக்கு, கிழக்கு, மலையகத் தமிழர்கள், மக்களின், அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்காக குரல் கொடுத்த – ஆய்வு கட்டுரைகளை எழுதிய – விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுத்த தமிழ்த் தேசிய மற்றும் குடிமைச் சமூக செயற்பாட்டாளரான சி. அ. யோதிலிங்கம் காலமானார்.
நேற்று வியாழக்கிழமை ( 8) யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் எட்டு மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்ற சத்திர சிகிச்சையை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானதாக உறவினர்கள் குறிப்பிட்டுகின்றனர்.
சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும், சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளரும், ஓய்வுநிலை ஆசிரியருமான சி. அ. யோதிலிங்கம் குரல் அற்றவர்களின் குரலாகவும், சமூக நீதிக்காகவும், அநீதிக்கு எதிராகவும் அரசியல் போராட்டங்கள்பலவற்றில் முன்னின்று செயற்பட்டவர்.
தமிழ் மக்களின் அரசியல் விடுதலை, மலையக தமிழ் மக்களின் உரிமைகள், அரசியலமைப்பு சார்ந்த பெருமளவு நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
மலையகத் தமிழ் மக்களும் இலங்கையின் அரசியலமைப்பில் தனித்துவமான தேசியஇனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர்களில் சி. அ. ஜோதிலிங்கம் (முதன்மையானவர்*) முக்கியமானவர்.
மலையக தமிழ் மக்களின் அரசியல் அடையாளம், தேசிய இன உரிமைகள், அரசியலமைப்பு அங்கீகாரம் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பாகத் தொடர்ச்சியாகக் கருத்துக்களை முன்வைத்து வந்துள்ளார்.
மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்து அவர்களுக்கான உதவித் திட்டங்களையும் சமூகப் பணிகளையும் அவர் தனது மனைவியுடன் இணைந்து முன்னெடுத்துள்ளார். குறிப்பாக மீறியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் செய்த சேவைகள் அளப்பரியவை.
புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவுடன் மலையகத்தில் பல்வேறு உதவி திட்டங்களை முன்னெடுத்ததுடன், நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் பகுதிகளுக்குச் சென்று பணியாற்றியமையும் அவரது சமூக பங்களிப்பின் முக்கிய அம்சமாகும்.
மலையக சமூக ஆய்வு மையத்துடனான அவரது தொடர்பும் செயற்பாடுகளும் மலையக மக்களின் சமூக, அரசியல் மற்றும் தேசிய அடையாளம் தொடர்பான விடயங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன.
மற்றும் மே தினம் மற்றும் மலையக தேசிய பொங்கல் விழா உள்ளிட்ட நிகழ்வுகள் மற்றும் செயற்பாட்டுகளுடன் அவர் இணைந்து செயலாற்றியுள்ளார்.
மலையக மக்களின் உரிமைகள், அடையாளம் மற்றும் சமூக முன்னேற்றம் தொடர்பான விடயங்களில் சுமார் இரண்டு தசாப்தங்களாக தொடர்ந்து எழுதியும் கருத்துக்களை முன்வைத்தும் வந்துள்ளார்.
மலையக பிரதேச இளைஞர்களிடையே அரசியல் அறிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதிலும் அவர் பங்களித்துள்ளார்.
அரசியலமைப்பு, அதிகார பகிர்வு, மலையக தமிழ்த் தேசியம் உள்ளிட்ட விடயங்களில் இலவச வகுப்புக்களை நடத்தி, இளைஞர்கள் தமது அரசியல் உரிமைகள் மற்றும் சமூகத்தின் எதிர்காலம் குறித்துப் புரிந்துகொள்ள சி. அ. யோதிலிங்கம் உதவியுள்ளார்.
----------------------
* முதன்மையானவர் என்று கூறமுடியாது. சோதிக்கு முன்பே சாந்திக்குமார் இதை கோட்பாட்டு மட்டத்தில் எழுதி விவாதித்து வந்துள்ளார்-தீர்த்தக்கரையில்-சுபா
