போர்க் குற்றங்களை விசாரிக்க இராணுவ நீதிமன்றம் அமைப்பு ; 5 பேர் கொண்ட குழுவை இராணுவத் தளபதி நியமித்தார்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக விசாரிப்பதற்கு இராணுவத் தளபதியினால் இராணுவ நீதிமன்றமொன்று அமைக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் கூறப்பட்டது போன்று இறுதிக் கட்ட போரில் பொது மக்கள் கொல்லப்பட்டமை மற்றும சனல் 4 காணொலியில் காண்பிக்கப்பட்ட போர்க்குற்ற ஆவணங்கள் போன்ற விடயங்கள் குறித்து விசாரணை நடத்தவே இந்த நீதிமன்றம் நிறுவப்படவுள்ளது.
இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவினால் நியமிக்கப்பட்டுள்ள 5 பேர் கொண்ட இந்நீதிமன்றக் குழு ஜனவரி மாதம் முதலாம் வாரம் தொடக்கம் அதிகாரம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றக் குழுவிற்கு, தற்போதைய கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றும் மேஜர் ஜெனரல் கிறிசாந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நீதிமன்றத்தின் முதல்கட்ட நடவடிக்கைகள் நீதிவான் நீதிமன்றம் ஒன்றின் அடிப்படை விசாரணைகள் போன்று இடம்பெறும் எனவும் இரண்டாம் கட்டம் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சந்தேகம் இருப்பின் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தகுற்ற நீதிமன்றம் போன்ற மேல் நீதிமன்றுக்கு உள்ள அதிகாரங்கள் இருப்பதால் மரணதண்டனை போன்றவைகூட வழங்கப்படுவதற்கான அதிகாரம் காணப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் உதயன் 16 பெப்ரவரி 2012, வியாழன் 8:55 மு.ப