SHARE
Sunday, March 04, 2012
ஐ.நா.மனித உரிமைப் பேரவைப் பிரேரணை இலங்கைக்கு சார்பான பிரேரணையே!
அமெரிக்கா ஐ.நா.வில் கொண்டுவருவது இலங்கையைக் காப்பாற்றும் பிரேரணையே!
இரா.துரைரத்தினம்
அண்மைக்காலமாக ஊடகங்களில் முக்கியமாக தமிழ் ஊடகங்களில் பேசப்படும் பொருள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணையை கொண்டுவரப்போகிறது, சிறிலங்கா பெரும் நெருக்கடியை சந்திக்கப் போகிறது என்பதுதான்.ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா அல்லது அமெரிக்காவின் நேசநாடு ஒன்று முன்வைக்க இருக்கும் பிரேரணை இலங்கைக்கு எதிரானதா? சார்பானதா? என்பதை விளங்கிக்கொள்ளாத பரிதாப நிலையில் தமிழ் ஊடகங்கள் இருக்கின்றனவா? அல்லது சிறிலங்காவின் பிரச்சாரத்திற்கு சாதகமாக செயற்படுகின்றவா என்பது தெரியவில்லை.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா.மனித உரிமை பேரவையில் பிரேரணை கொண்டுவரப்போகிறது, சிறிலங்கா மூக்குடைபடப்போகிறது என அற்பசொற்ப ஆசையில் இருக்கும் எங்கள் தமிழ் மக்களுக்கு நான் சொல்லும் விடயம் கசப்பானதாக இருக்கலாம்.
ஏனெனில் அமெரிக்கா விடுதலைப்புலிகளை காப்பாற்ற கப்பல் அனுப்புகிறது என நம்பியதைப்போல இந்த விடயத்திலும் தமிழ் மக்கள் ஏதோ ஒரு மாயைக்குள் அமெரிக்காவை மலைபோல் நம்பியிருப்பதை உணர முடிகிறது.
அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணை விடுதலைப்புலிகளை காப்பாற்ற தான் கப்பல் அனுப்ப போவதாக அமெரிக்கா சொன்னதாக நான்
கேள்விப்படவில்லை. ஆனால் தமிழர்கள் சிலர்தான் அப்படி ஒரு கதையை எழுப்பிவிட்டு அதை மலைபோல நம்பி இறுதியில் மண்கவ்வினார்கள்.
அதேபோல ஐ.நா.மனித உரிமை பேரவையில் அமெரிக்கா வெட்டி வீழ்த்தப்போகிறது, பண்ணிப்படைக்கப்போகிறது என வருகின்ற செய்திகளைப்பார்த்து நிட்சயம் தமிழ் மக்கள் மலையளவு நம்பிக்கையை வளர்த்து வைத்திருக்கிறார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது.
ஆனால் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட இருக்கும் பிரேரணை இலங்கைக்கு எதிரானது என அமெரிக்காவோ அல்லது இந்த பிரேரணைக்கு ஆதரவு வழங்கலாம் என எதிர்பார்க்கும் நாடுகளோ சொல்லவில்லை.
அமெரிக்காவும் கனடாவும் ஒஸ்ரேலியாவும் தென் ஆபிரிக்காவும் சில விஷயங்களைத் சிறிலங்காவுக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றன.
ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக வரப்போகிற தீர்மானம் எத்தகையது என்பதனை அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். தாம் கொண்டுவர இருக்கும் தீர்மானம் ஐநா நிபுணர் குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது அல்ல, சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராசபக்சவினால்
நியமிக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்பதனை அவர்கள் தெளிவபடுத்தியிருக்கிறார்கள். தாம் இலங்கை தொடர்பாக கோரப்போவது சர்வதேச போர்க்குற்ற விசாரணையோ அல்லது மனித உரிமை
விசாரணையோ அல்ல என்றும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரப்போகிறோம் என்பதனையும் அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சிறிலங்காவுக்கு எதிரானதா?
அமெரிக்காவோ அல்லது அமெரிக்கா நேசநாடு ஒன்றோ கொண்டுவர இருக்கும் பிரேரணையில் கோரியிருப்பது நல்லிணக்க ஆணைக்குழு கூறியிருக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள் என்பதுதான். நல்லிணக்க ஆணைக்குழுவில் கூறப்பட்டிருக்கும் பரிந்துரைகள் எவையும் சிறிலங்கா அரசுக்கு எதிரானதோ அல்லது சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவுக்கு எதிரானதோ அல்லது சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரானதோ அல்ல. அப்படி இருக்கும் போது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நடைமுறைப்படுத்துங்கள் எனக் கூறுவது சிறிலங்காவுக்கு எதிரான
பிரேரணை என எப்படி கொள்ள முடியும்?
சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்ச படிப்பினைகள், மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தன் நோக்கமும், நல்லிணக்க ஆணைக்குழுவின் இலக்கும்.
அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணை சிறிலங்காவுக்கு எதிரானதா அல்லது சிறிலங்காவை காப்பாற்றுவதற்காகவா என்பதை புரிந்து கொள்வதற்கு நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டதன் நோக்கத்தை புரிந்து கொண்டால் போதும். இது மிக இலகுவானதாகும்.
சிறிலங்கா போர்க்குற்றத்தைப் புரிந்ததாக சர்வதேச ரீதியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையடுத்து, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைத்த நிபுணர்குழு அறிக்கை வெளியானதையடுத்து, போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையில் தாம் சிக்கிவிடலாம் என்ற அச்சத்தில் அதிலிருந்து தப்புவதற்காகவும், சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீள்வதற்காகவும் மகிந்த ராசபக்ச நியமித்த ஆணைக்குழுதான் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவாகும்.
தனக்கு மிகவும் நெருக்கமானவர்களையே இந்த ஆணைக்குழுவில் நியமித்திருந்தார். இந்த ஆணைக்குழுவின் முக்கிய நோக்கம் மகிந்த ராசபக்சவையும் அவரது அரசையும், இராணுவத்தையும் காப்பாற்றுவதாகும்.
அந்த இலக்கை மிகக்கச்சிதமாக நல்லிணக்க ஆணைக்குழு நிறைவேற்றியிருந்தது. இறுதிப் போரின் போது பொதுமக்களை பாதுகாப்பதற்கு சிறிலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கைகளை
பாராட்டிதுடன் பொதுமக்கள் இழப்பிற்கு சிறிலங்கா இராணுவம் காரணமல்ல என்ற நற்சான்றிதழையும் வழங்கியிருந்தது. இழப்புக்கள் குற்றங்கள் இழைக்கப்பட்டதாக கருதினால் உள்நாட்டில் விசாரணையை மேற்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்திருந்திருந்தது. சர்வதேச
விசாரணையை நல்லிணக்க ஆணைக்குழு முற்றாக நிராகரித்திருந்தது.
ஆகவே நல்லிணக்க ஆணைக்குழு என்பதும் அதன் பரிந்துரைகள் என்பதும் முழுக்க முழுக்க மகிந்த ராசபக்ச தலைமையிலான அரசை காப்பாற்றுவதற்காக செய்யப்பட்டதாகும். மகிந்த ராசபக்ச அரசை காப்பாற்றுவதற்காக மகிந்த ராசபக்சவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க
ஆணைக்குழு செய்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரும் பிரேரணை எவ்வாறு சிறிலங்கா அரசுக்கு எதிரான பிரேரணை என்று சொல்ல முடியும்?
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள் என்று சொன்னால் அல்லது இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என கோரும் பிரேரணையை அமெரிக்காவோ அல்லது அதன் நேசநாடுகளோ கொண்டுவந்தால் அதை
இலங்கைக்கு எதிரான பிரேரணை என்று கூற முடியும். ஆனால் அமெரிக்கா கொண்டுவர இருக்கும் பிரேரணையோ மகிந்த ராசபக்சவின் அரசை காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துங்கள் என்பதாகும்.
எனவே அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பிரேரணையை கொண்டுவருகிறது என்ற பிரசாரங்களும், அதற்காக இலங்கை எடுத்து வரும் ஆரவார பிரசாரங்களும் அமெரிக்கா, சிறிலங்கா என்ற நண்பர்களின் கூட்டு நாடகமாகும்.
இந்த பிரேரணையை சிறிலங்கா ஏன் தனக்கு எதிரான பிரேரணை என பிரசாரம் செய்கிறது?
அமெரிக்கா இந்த பிரேரணையை கொண்டுவந்து நிறைவேற்றுவதால் மகிந்த இராசபக்ச தலைமையிலான அரசுக்கு ஒரு துளி கூட ஆபத்தோ, நட்டமோ, நெருக்கடியோ ஏற்படப்போவதில்லை. அந்த பிரேரணை வெறும் செயலற்ற பிரேரணையாகவே மாறும். மறுபுறத்தில் சிறிலங்காவை பாராட்டி ஊக்குவிக்கின்ற பிரேரணையாக கூட மாற்றப்பட்டு அது நிறைவேற்றப்படலாம்.
இரண்டு காரணங்களுக்காக சிறிலங்கா இந்த பிரேரணையை தனக்கு எதிரானது என காட்ட முற்பட்டிருக்கிறது.
ஒன்று: உள்நாட்டில் விலைவாசி ஏற்றத்தால் நாட்டுமக்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழக் கூடிய அபாயகரமான கட்டம் காணப்படுகிறது. அரசுக்கு எதிரான மக்களின் மனநிலைகளை மாற்ற வேண்டுமாயின் சிங்கள மக்களின் உணர்வுகளை தட்டிவிட்டு வெற்றிகாண வேண்டும். கடந்த காலங்களில் யுத்தவெற்றிகளை காட்டி சிறிலங்கா அரசாங்கம் விலைவாசி ஏற்றம், வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார நெருக்கடிகளை சமாளித்து வந்தது. போர்வெற்றியை காட்டி அந்த மாயைக்குள் வைத்திருந்ததால் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதை தடுக்க முடிந்தது.
ஆனால் அந்த போர் வெற்றிமாயைகள் கலைந்து மக்கள் விலைவாசி ஏற்றம் வாழ்க்கை செலவு பிரச்சினைக்கு எதிராக போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்.
இதைத் தடுக்க வேண்டுமாக இருந்தால் நாடு சர்வதேச நாடுகளின் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது. அதிலிருந்து மீள வேண்டும், சர்வதேச நாடுகளின் நெருக்கடிகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டும் என மக்களை திசை திருப்ப வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கிறது. இதற்காகவே அரசாங்கத்திற்கு அமெரிக்கா போன்ற மேற்குலக
நாடுகளினால் தமது நாட்டிற்கு நெருக்கடி வந்திருப்பதாக பிரச்சாரங்களை மேற்கொண்டிருக்கிறது.
இரண்டு: போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்தி வரும் மனித உரிமை அமைப்புக்கள், மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் தனது நாட்டிற்கு எதிராக மேற்குலக நாடுகள் பிரேரணையை கொண்டுவருவதாக பிரசாரம் செய்து வருகிறது.
அமெரிக்காவோ அல்லது மேற்குலக நாடுகளோ பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என எண்ணியிருந்தால் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என எண்ணியிருந்தால் ஆகக்குறைந்தது ஐ.நா.நிபுணர்குழு அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும்
பரிந்துரைகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்த வேண்டும் என பிரேரணையை கொண்டு வந்திருக்க வேண்டும்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவை காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறுவதன் உண்மையான பக்கம் என்ன என்றால் சர்வதேச நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவதற்காக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள் என மகிந்த அரசை காப்பாற்ற
முற்பட்டிருக்கிறது.
இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்த போது தமிழ் மக்களும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் அதனை நிராகரித்திருந்தன. உள்ளுரில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளான
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போன்ற அமைப்புக்களும் சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை முற்றாக நிராகரித்திருந்தன.
தமிழ் மக்களாலும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களாலும் முற்றாக நிராகரிக்கப்பட்டிருந்த மகிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்காதா என சிறிலங்கா அரசாங்கம் ஏங்கியிருந்த வேளையில் அதற்கு கைகொடுப்பதற்கு அமெரிக்கா முன்வந்திருக்கிறது.
தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொடுப்பதற்காகவே அமெரிக்கா இந்த நாடகத்தை ஆடுகிறது. சிறிலங்கா நீதிவிசாரணைகளை மேற்கொள்ளும் மனித உரிமையை பேணும்
ஜனநாயக நாடு என்ற அங்கீகாரத்தை சர்வதேச மன்றத்தில் பெற்றுக்கொடுப்பதற்கு அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் மேற்கொள்ளும் நாடகம்தான் இது.
போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறை அமெரிக்காவுக்கு இருந்திருக்குமாக இருந்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்திருக்க வேண்டியது ஐக்கிய நாடுகள் நி்புணர்குழு அறிக்கையைத்தான்.
இறுதிப்போரின் போது விடுதலைப்புலிகளை காப்பாற்ற கப்பல் வருகிறது. தங்கத்தாம்பாழத்தில்தமிழீழத்தை அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் பெற்றுத்தரப்போகின்றன என மாயைக்குள் தமிழ் மக்களை வைத்திருந்தார்களோ அதே போன்றுதான் இப்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்க பிரேரணை கொண்டுவருகிறது என பிரசாரத்தை ஊடகங்கள் மேற்கொண்டுள்ளன. முக்கியமாக தமிழ் ஊடகங்கள் மேற்கொண்டுள்ளன.
அமெரிக்கா கொண்டுவரப்போவது இலங்கைக்கு எதிரான பிரேரணை அல்ல என்பதே உண்மை.
இரா.துரைரத்தினம்
நன்றி தினக்கதிர் இணையம் Published on March 1, 2012-9:13 am
Subscribe to:
Posts (Atom)
India, Sri Lanka head to a win-win relationship
India, Sri Lanka head to a win-win relationship 《 Asian Age 17 Dec 2024 》 All the signs are pointing to the possibility of a major win for...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...