ஈழத் தமிழர்களின் ஜனநாயக உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்
சிங்கள இனவெறி இராஜபட்சே அரசு 2009ஆம் ஆண்டு ஈழத் தமிழின அழிப்புப்போரை முடிவுக்கு கொண்டுவந்த பிறகு ஈழத்தமிழர்களுக்கான ஒரு அரசியல் தீர்வை காண மறுத்து வருகிறது. தமிழர் பகுதிகளான வடக்கையும் கிழக்கையும் இணைத்து தமிழர் தாயகம் என்பதையும் ஏற்க மறுக்கிறது. ஈழத் தமிழர்கள் பகுதிகள் முழுவதும் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. அது மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான தமிழ்மக்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்த மறுப்பதுடன், தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றத்தைத் திட்டமிட்டு நிறைவேற்றி வருகிறது. சிறைபிடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான போராளிகள் கதி என்னவாயிற்று என்பதே தெரியவில்லை. இராஜபட்சே கும்பல் தமிழர்கள் மீது மட்டுமல்லாது தமது ஆட்சிக்கு எதிரான சிங்கள எதிர்க்கட்சியினர், மனித உரிமை அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள் மீது கடும் தாக்குதலை நடத்திவருகிறது. அது இலங்கை முழுவதையும் ஒரு இராணுவ சர்வாதிகார ஆட்சியின் கீழ் கொண்டுவந்துள்ளது.
இலங்கையில் வாழும் ஈழத் தமிழ்த் தேசிய இனச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு என்பது ஈழத்தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை வழங்குவதன் மூலம் மட்டுமே காணமுடியும். அதைவிடுத்து எந்த ஒரு அதிகாரபரவலும் சிங்கள இனவெறி அரசின் கீழ் சாத்தியமே இல்லை. ஆனால் உடனடியாக அம்மக்களின் ஜனநாயக உரிமையை வென்றெடுப்பதுதான் அனைத்திற்கும் முதன்மையானதாக மாறியுள்ளது. வடக்கையும் கிழக்கையும் இணைத்து அதை தமிழர் தாயகமாக அங்கீகரிப்பது, தமிழர் பகுதிகளிலிருந்து சிங்கள இராணுவத்தை திரும்பப் பெறுவது, சிங்கள குடியேற்றங்களை அகற்றுவது, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தமிழர்கள் தங்கள் உரிமையை பெறுவது போன்ற கோரிக்கைகளை உடனடியாக போராடிப் பெறுவது அவசியமாகும். இத்தகைய ஜனநாயக உரிமைகளை பெறுவதற்கு இலங்கையில் வாழும் இரு தேசிய இன மக்களும் ஒன்றிணைந்து போராடுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இவ்வாறு ஈழத்தமிழ் மக்களின் அரசியல் ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்கு உலகெங்கிலுமுள்ள தொழிலாளி வர்க்க இயக்கங்களும், ஒடுக்கப்பட்ட தேசங்களும் ஆதரவளிக்கவேண்டும்.
அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இலங்கைக்கு எதிராக கொண்டுவந்துள்ள தீர்மானம் சிங்கள இன வெறியன் இராஜபட்சே கும்பலை இன அழிப்புப் போர்க்குற்றவாளி என்று அறிவிக்கக் கோருவதல்ல. 2010ஆம் ஆண்டில் டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புகளிலிருந்து உலக மக்களை திசைதிருப்பி, இலங்கையின் மீது அமெரிக்காவின் மேலாதிக்கத்தை கொண்டுவருவதற்கானதேயாகும். குற்றவாளியான இராஜபட்சேவையே நீதிபதியாகக் கொண்டு “கற்றுக்கொண்ட பாடம் மற்றும் மறுசீரமைப்பு” என்ற இலங்கை அரசாங்கம் தயாரித்த அறிக்கையை செயல்படுத்துவது என்பதேயாகும்.
டப்ளின் தீர்ப்பாயம், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இலங்கை அரசுடனான விடுதலைப் புலிகளின் பேச்சு வார்த்தையை சீர்குலைத்ததன் மூலமும், இலங்கை அரசுக்கு ஆயுத மற்றும் பொருளாதார உதவிகள் செய்ததன் மூலமும் இலங்கை அரசின் இன அழிப்புப் போருக்கு துணைபோயின என்று கூறியது. போர் நடக்கும் போது இந்நாடுகள் வேடிக்கைப் பார்த்தன என்றும் எனவே இந்நாடுகள் போர்க் குற்றத்திற்கு துணை போயின என்று குற்றம் சுமத்தியிருந்தது. எனவே இதையெல்லாம் மூடி மறைத்து இலங்கை அரசையும், இராஜபட்சே கும்பலையும் மிரட்டி பணிய வைக்கவே தற்போது அமெரிக்கா மனித உரிமை பேசி இலங்கையில் தலையிடுகிறது. இந்திய அரசாங்கமோ அந்தத் தீர்மானத்திலும் திருத்தம் கொண்டுவந்து ஆதரித்தது. இராஜபட்சேவுக்கு சாதகமாகத்தான் நாங்கள் செயல்பட்டோம் என்று மன்மோகன் சிங் கடிதம் எழுதி தமது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார். மேலும் இந்தப் போரை இந்தியாவிற்காக நாங்கள் நடத்தினோம் என்று இராஜபட்சே கும்பல் கூறியது. இந்திய அரசு போரை முன்னின்று நடத்தியது. இவர்களும் போர்க்குற்றவாளிகளே.
இந்தியாவை பொறுத்தவரை சீனாவின் பக்கம் இலங்கை சாய்ந்துவிடுவதை தடுப்பது ஒன்றுதான் நோக்கமாகும். இந்தத் தீர்மானத்தால் ஈழத் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அரசியல் தீர்வும் கிடைக்கப் போவதில்லை. சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்தியத் தூதுக்குழுவின் நடவடிக்கைகளே இதற்கு நல்லதொரு சான்றாக அமைந்துள்ளது.
மறுபுறம் அமெரிக்காவை எதிர்ப்பதாக கூறும் ரசிய ஏகாதிபத்தியவாதிகளும், சீனாவும் இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடக் கூடாது என்றும், நாடுகளின் இறையாண்மையை காப்பது என்ற ஐ.நா சாசனத்தை மீறக்கூடாது என்றும், அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்ப்பதாகவும் கூறுகின்றன. ஆனால் இவ்வாறுக் கூறிக்கொண்டு மனித உரிமையை மீறி ஒரு இனத்தையே அழித்துவரும் இராஜபட்சேக் கும்பலை இவர்கள் ஆதரிப்பது ஏற்கத் தகுந்தது அல்ல. இவர்களும் இலங்கை மீதான தங்களது செல்வாக்கு மண்டலத்தை விரிவுப்படுத்துவதற்காகத்தான் இலங்கை அரசுக்கு துணைபோகின்றனர்.
எனவே இரண்டு ஏகாதிபத்திய முகாம்களின் சதியை எதிர்த்து இலங்கையில் இரு தேசிய இன மக்களும் இராஜபட்சேவின் இராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்த போராட்டத்திற்கு ஆதரவளிப்பதே ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களின் உடனடிக் கடமையாகும்.
எனவே இவ்வாண்டு மேநாளில், முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மக்கள் தொகையில் ஒரு சதவீதமே உள்ள நிதிமூலதன கும்பல்களையும், ஒடுக்கப்பட்ட நாடுகளின் பிற்போக்கு ஆளும் வர்க்கங்களையும் பாதுகாக்கும் அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகளையும், அவர்களின் எடுபிடிகளின் கூட்டத்தை முறியடிக்கவும், உலகத் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலையை வென்றெடுக்கவும் கீழ்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் ஒன்றுபடுவோம் என அறைகூவி அழைக்கிறோம்.
முழுமையான பிரசுரம் சமரனில்