அமெரிக்கா, இந்திய சில்லரை வணிகத்தில் எவ்வளவு வேட்கை கொண்டுள்ளது என்பதை அந்நாட்டின் வெளியுறவுச் செயலரின் பேச்சிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி டிசம்பர் 7ல் நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தவுடன் ஹிலாரி கோபத்தோடு இவ்வாறு பேசுகிறார்;
"மான்டேக் சிங் அலுவாலியாவை விட்டுவிட்டு பிரணாப் முகர்ஜியை நிதி மந்திரியாக ஏன் நியமித்தார்கள்? முகர்ஜியும் அலுவாலியாவும் எப்படி ஒத்துப் போகிறார்கள்?" என்றும் " வர்த்தக அமைச்சர் ஷர்மாவால் முகர்ஜியுடனும் பிரதமருடனும் இணைந்து செயல்பட முடிகிறதா?" என்றும் கோபாவேசத்துடன் கேட்கிறார்.
நட்வர்சிங்கையும் மணிசங்கர் அய்யரையும் ஒழித்துக்கட்டியதுபோல பிரணாப் முகர்ஜியையும் ஒழித்துக்கட்ட அமெரிக்கா விரும்புகிறது போலும். இவ்வாறு ஹிலாரி கோபாவேசப் படுவதற்குக் காரணம், அவரே வால் மார்ட்டில் ஒரு பங்குதாரராக இருந்து கொண்டு பல ஆயிரம் கோடிகளை இலாபமாக பெறுவதுதான்.
அந்நிய முதலீட்டிற்கு இந்திய சில்லரை வணிகத்தை திறந்துவிடும் மன்மோகன் கும்பலின் துரோகத்திற்கு எதிராக வணிகர்கள் நடத்திய நாடுதழுவிய போராட்டம்தான், நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளான பா.ஜ.க மற்றும் இடது வலது போலிக் கம்யூனிஸ்டுக் கட்சிகளும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளான திரினாமுல் மற்றும் திமுகவும் இம்முடிவைத் தற்காலிகமாகத் தடுத்துநிறுத்துவதற்குக் காரணமாக அமைந்தது. எனவே அந்நிய மூலதனத்திற்கு எதிராக நாடுதழுவிய மக்கள் இயக்கங்களைக் கட்டியமைக்க வேண்டும்.
சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை எதிர்த்த போராட்டமானது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளையும், அவர்களின் உள்நாட்டுக் கூட்டாளிகளான தரகுப் பெரு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களையும் எதிர்த்த நாட்டின் விடுதலைக்கான போராட்டமாகும்.
சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு நுழைவது மட்டுமே நாட்டை அடிமைப்படுத்தும் செயலாக பார்க்க முடியாது. மாறாக, நாட்டின் அனைத்து வாழ்வுத்துறைகளிலும் அந்நிய முதலீடுகளை எதிர்த்துப் போராடுவதின் ஒரு பகுதியாகும். உலகமயம் தாராளமயம் தனியார்மயம் போன்ற புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் கொள்கைகளை எதிர்த்தும்,அமெரிக்க - இந்திய இருதரப்பு அரசியல், பொருளாதார, இராணுவ ஒப்பந்தங்களையும் முறியடித்து நாட்டில் ஒரு சுயசார்புப் பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதே நாட்டின் விடுதலைக்கும், நெருக்கடிகளை தீர்ப்பதற்குமான ஒரே வழியாகும். எனவே தொழிலாளர்கள், விவசாயிகள், தேசிய முதலாளிகள் மற்றும் வணிகர்கள் உள்ளிட்ட தேசபக்த சக்திகள் அந்நிய மூலதனத்திற்கு, சில்லரை வணிகத்தை திறந்து விடுவதையும், பிற துறைகள் திறந்து விடப்படுவதையும் எதிர்த்து முறியடிக்க ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும். அத்தகைய ஒரு கூட்டுப் போராட்டமே ஆளும் வர்க்கங்களின் துரோகத்தை முறியடிப்பதற்கான பலமிக்க சக்தியாக அமையும்.
எனவே கீழ்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள மக்களை அறைகூவி அழைக்கிறோம்.
* சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முறியடிப்போம்!
* அந்நிய மூலதனத்திற்கு நாட்டின் அனைத்துத் துறைகளையும் திறந்துவிடும் உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகளை எதிர்த்து அணிதிரள்வோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு.பிப்ரவரி, 2012
மேலும் படிக்க
http://samaran1917.blogspot.com/2012/02/24.html