Tuesday 14 August 2012

உன்னிச்சைத் தாக்குதல்: ``தமது சொந்தப் பூமியில் மீள் குடியேறி வசிக்க முற்படுவதை தடுத்து நிறுத்தும் சதி முயற்சி``


உன்னிச்சையில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்! வதிவிடம்,வர்த்தக நிலையம், வழிபாட்டுத் தலம் தீக்கிரை!



1985-1987 காலப்பகுதியில் உன்னிச்சையில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் உன்னிச்சைப் பகுதியில்
மீளக்குடியமர்ந்துள்ளனர்.தற்காலிகக் குடியிருப்புக்களாக அமைக்கப்பட்ட தகரக் குடில்களில் இவர்கள் வாழ்ந்துவந்துள்ளனர்.இதைத் தொடர்ந்து சில்லறை வியாபாரக் கடையையும்,மத வழிபாட்டுக்காக முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலையும் அமைத்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களுக்கெதிராக சிங்களவர்களை ஏவி கடந்த சனிக்கிழமை (11 ஓகஸ்ட் 2012) நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் விளைவாக ஒரு குடும்பப் பெண் கோடரியினால் வெட்டித் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ளார்.மூன்று வீடுகள், ஒரு கடை
,பள்ளிவாயல் என்பன இரவோடு இரவாக தீ மூட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 12ஆம் இலக்க வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறித்த பெண்ணின் சகோதரன்
காசிம் தெரிவித்தார். குறித்த பெண்ணின் கழுத்துப் பகுதி மற்றும் கைப்பகுதி ஆகியன கடுமையாக கோடாரியினால் கொத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இரவு குறித்த பெண் மயக்க நிலையில் இருந்து தற்போது நினைவு திரும்பியுள்ளதாகத் தெரிவித்தார்.எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சிகிச்சைகள் இன்று வைத்தியர்கள் சமுகமளித்ததன் பின்னரே மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்த அவர் தற்போது வைத்தியசாலையில் பொலிஸார் குறித்த பெண்ணிடம் வாக்கு மூலம் எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இச்சம்பவத்தை பல முஸ்லிம் சமுகத் தலைவர்களும் நிறுவனங்களும் கண்டித்துள்ளன.குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்க வேண்டுமெனக்  கோரியுள்ளன.

மட்டக்களப்பு உன்னிச்சைப் பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும் வன்செயலின் காரணமாக இடம்பெயரந்து மீண்டும் உன்னிச்சைப் பிரதேசத்திற்கு மீளக்குடியேறியுள்ளமையை  இவர்களால் பொறுக்க இயலாமல் இவ்வாறான அடாவடித்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இருநூறுவில்
முஸ்லிம் நலன்புரிச் சங்கத் தலைவர் எம்.எஸ்.அப்துல் கபூர் தெரிவித்தார்.

``கொஞ்சம் கூட ஈவிரக்கம் இல்லாமல் புனித நோன்பு காலத்தில் ஒரு பெண்ணை கோடாரியினால் வெட்டி காய்யப்படுத்தியதுடன் உன்னிச்சை

       சல்மா அமீர் ஹம்சா

பள்ளிவாயலையும் தீ வைத்து எரித்த சம்பவமானது சகலரின் உள்ளங்களையும் காயப்படுத்தியுள்ளது`` என காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்சா தெரிவித்தார்.

உன்னிச்சை சம்பவம் தொடர்பாக சல்மா ஹம்சா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உன்னிச்சையில் முஸ்லிம்கள் 1987ம் ஆண்டு இடம் பெயர்ந்த நாளன்று இடம் பெற்ற மிக கொடூரமான சம்பவம் போன்றே சனிக்கிழமை அதிகாலையும்
உன்னிச்சையில் கொடூர சம்பவம் இடம் பெற்றுள்ளது. புனிதமான நோன்பு காலத்தில் இப் பெண் கோடாரியினால் தாக்கப்பட்டதுடன் உன்னிச்சை
கிராமத்தின் ஜும் ஆ பள்ளிவாயலும் தீ வைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தை எந்த ஒரு மனித நேயமுள்ள சமூகமும் ஏற்றுக்கொள்ள மாட்டாது. யுத்தம் நிறைவடைந்து அமைதிச் சூழ் நிலை நிலவும் இக்கால
கட்டத்தில் யுத்தத்தினால் இடம் பெயர்ந்து காத்தான்குடியில் இருந்த போது சுனாமி அனர்த்தினாலும் பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டும் தமது சொந்தப்
பூமியில் மீள் குடியேறி வசிக்க முற்படும் போது இதை தடுத்து  நிறுத்த எடுக்கும் சதி முயற்சியாக இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என அவ்வறிக்கயில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் இடம் பெற்றுவரும் இந்த வேளையிலும் முஸ்லிம் மக்கள் புனித நோன்பு அனுஷ்டிக்கும் இக்கால கட்டத்திலும் இவ்வாறான ஒரு வழிபாட்டுத்தலத்தையும் முஸ்லிம் பெண்ணொருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஆயுதப்போர் இடம்பெற்று முடிவுக்கு வந்து சமாதான காலம் என அரசாங்கம் அறிவித்த பின்பும் தமிழ் முஸ்லிம் மக்களின் இயல்பு வாழ்வையும் தமிழ்
முஸ்லிம் மக்களின் ஒற்றுமையையும் சீர்குலைப்பதற்காக திட்டமிட்டு இந்த செயலை யார் செய்திருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டத்தின்
முன் நிறுத்தி இவர்களுக்கான தண்டனை வழங்கப்படவேண்டுமென கோரியுள்ளது.

தீக்கிரையாக்கப்பட்ட பள்ளிவாசலை ஹக்கீம், ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டனர். இதன்போது கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான யு.எல்.எம்.என்.முபீன், கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா ஹம்சா, நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறாசபை உறுப்பினரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் ஆகியோரும் சென்று பார்வையிட்டனர்.


முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல்

மேலும் இச்சம்பவம் ``தனிப்பட்ட பிரச்சனை`` என்றும், இது எவ்விதத்திலும் எந்த இனத்தினருடனோ,மதத்தினருடனோ தொடர்புடையதல்ல என
தெரிவித்த பொலிசார், இச்சம்பவத்தைச்சாட்டி இன மத கசப்புணர்வைத் தூண்டும் வண்ணம் செய்திகளை வெளியிடக்கூடாதென இணையங்களை
எச்சரித்தும் உள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுணதீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டுவருவதாக ஊடகச் செய்திகள்
தெரிவிக்கின்றன.

மன்னார் உப்புக்குளம் சம்பவமும், மட்டக்களப்பு உன்னிச்சைச் சம்பவமும், மீள்குடியேற்றம் எதிர் நோக்கும் பிரச்சனைகளை வெளிக்காட்டுகின்றன.
மேலும் இச்சம்பவங்கள் ``யுத்தம் நிறைவடைந்து அமைதிச் சூழ் நிலை நிலவும் காலமாக`` இன்றைய சூழ்நிலை இல்லையென்பதையே காட்டுகின்றன.

இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்ட சிங்களம், தனது இருப்புக்கு இன ஒடுக்குமுறையை ஆதாரமாகக் கொண்டிருக்கும் சிங்களம், அத்தகைய ஒரு
அமைதிச் சூழல் உருவாக அநுமதிக்காது என்பதையும் இச்சம்பவங்கள் விளக்குகின்றன.

எனவே தாக்குதல்தாரிகளைக் கைது செய்து தண்டனைவழங்குவது. மீள்குடியேற்றப் பிரச்சனைகளுக்கு ஜனநாயக ரீதியான தீர்வு காணக்கோருவது, இவற்றுடன் கூடவே இன ஒடுக்குமுறைக்கு முடிவுகட்ட சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரிப் போராடுவதும் புரட்சிகர ஜனநாயக தேசிய சக்திகளின் கடமையாகும்.

நன்றி: ஊடகத் தகவல்கள்.

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...