![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXcgak3IkxUYBo-HD8HHgxWGjCQdMPq2KsKR9gTT_mK7aaq5iaSYLiiLqQtMf9auP-55MSvpZVncCEpVXEjRtxbQ-Vufqc2QmI3RKHoMmW8G3ztnTPn30VsUmf3fg1h5DnBZffOFAbYuE/s400/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.jpg)
புதினம் [வெள்ளிக்கிழமை, 11 செப்ரெம்பர் 2009, 09:29 பி.ப ஈழம்] [பி.தெய்வேந்திரன்]
சுமார் 3 லட்சம் தமிழ் மக்களை சிறிலங்கா அரசு அடைத்து வைத்துள்ள தடுப்பு முகாம்களுக்கு காலவரையறையற்று தொடர்ந்தும் நிதி வழங்கிக்கொண்டிருக்க முடியாது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
முகாம்களில் உள்ள பொதுமக்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா. கூறுகின்றது.
ஆனால், பொதுமக்களுடன் தங்கியுள்ள விடுதலைப் புலிகளைக் கண்டறிந்து வேறாக்கிய பின்னரே அவர்களை வெளியில் விட முடியும் என்று அரசு தொடர்ந்து கூறிவருகின்றது.
இந்நிலையில் முகாம்களின் செயற்பாடுகளுக்கு நிதி உட்பட உதவிகளை வழங்கிவரும் ஐ.நா.வின் பொறுமை எல்லை கடப்பதாக பிபிசி தெரிவித்துள்ளது.
"உண்மையிலேயே இதற்கு சிறந்த தீர்வு பெரும்பாலான மக்களை முடிந்த வரையில் விரைவாக வெளியே விடுவதுதான்" என்று தெரிவித்தார் ஐ.நா.வின் சிறிலங்காவுக்கான நிரந்தர ஒருங்கிணைப்பாளர் நீல் புனே. செல்வதற்கு இருப்பிடம் இல்லாத மக்கள் வசதியான வேறு இடங்களுக்கு மாற்றப்படலாம் எனவும் அவர் கூறினார்.
விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் எனக் கூறி அரசு தடுத்து வைத்துள்ள சுமார் 10 ஆயிரம் பேரை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் சென்று பார்வையிடுவதற்கு சிறிலங்கா அரசு அனுமதி மறுத்திருப்பதையும் புனே கடுமையாக விமர்சனம் செய்தார்.
இடம்பெயர்ந்தவர்களில் எத்தனை பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பதைத் தீர்மானிப்பதற்கு ஆறு மாதங்கள் முதல் ஒரு வருட காலம் செல்லும் என அண்மையில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலர்கள் இருவரின் நிலை பற்றி ஐ.நா. தலைமையகம் ஆழ்ந்த கவனம் செலுத்தி வருவதாக நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. பேச்சாளர் தெரிவித்தார். அந்த இரு அலுவலர்களும் கடந்த ஜூன் மாதம் முகாம்களுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டனர். தொடர்ந்தும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அரச அதிகாரிகளினால் அவர்கள் மோசமாக நடத்தபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் வந்துள்ளன எனவும் ஐ.நா. பேச்சாளர் கூறினார். அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் என்னவென தெரிவிக்கவில்லையாயின் தமது பணியாளர்களை சிறிலங்கா அரசு விடுவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.