Wednesday, 25 October 2023

காசாவின் சுருக்கமான வரலாறு



காசாவின் சுருக்கமான வரலாறு

இந்தப் போரைப் புரிந்து கொள்ள, காசா பிரதேசத்தின் கடந்த காலத்தைக் கருத்தில் எடுங்கள்

எகனாமிஸ்ட் விளக்குகிறது தி எகனாமிஸ்ட் அக்டோபர் 12, 2023

அக்டோபர் 7 ஆம் தேதி, காசா பகுதியை இயக்கும் போராளிக் குழுவான ஹமாஸ், இஸ்ரேலைத் தாக்கி, 1,300 பேரைக் கொன்றது மற்றும் டஜன் கணக்கான பணயக்கைதிகளைப் பிடித்தது. இஸ்ரேல் இராணுவ வலிமையால் பதிலளித்தது: காசா மீதான தாக்குதல்கள் அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் 1,400 பாலஸ்தீனியர்களைக் கொன்றன. எகிப்து, இஸ்ரேல் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு இடையே 360 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள நிலப்பகுதியின் குடியிருப்பாளர்கள் துன்ப துயரங்களுக்கு புதியவர்கள் அல்ல. 2007 ஆம் ஆண்டு முதல் அவர்கள் மூச்சுத் திணறும் முற்றுகை மற்றும் தொடர்ச்சியான போர்களை சந்தித்தனர். 


காசாவின் வரலாறு அதன் மக்களை எவ்வாறு வடிவமைத்துள்ளது?

நான்கு நூற்றாண்டுகளாக ஒட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த பாலஸ்தீனம், முதல் உலகப் போரின் போது 1917 இல் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. அந்த ஆண்டு பிரிட்டன் பால்ஃபோர் பிரகடனத்தை வெளியிட்டது, பாலஸ்தீனத்தில்  யூத "தாயகத்திற்கு"  தெளிவற்ற ஆதரவை உறுதியளித்தது. போருக்குப் பிறகு பாலஸ்தீனம் பிரிட்டனால் நிர்வகிக்கப்பட்டது, மேலும் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய சியோனிஸ்ட் குடியேற்றம் அதிகரித்தது. யூத மற்றும் அரேபிய குடியிருப்பாளர்களிடையே பதற்றம் அதிகரித்தது, 1936 இல் அரேபியர்கள் கிளர்ச்சி செய்தனர். 1939 வாக்கில் அவர்களின் எழுச்சி அடக்கப்பட்டது-ஆனால் பிரிட்டன் ஐக்கிய நாடுகள் சபைக்கு பிரச்சினையை கையளித்தது, ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனத்தைப் பிரிக்க வாக்களித்தது. பிரிட்டன் விரைவில் வெளியேறியது. 1948 இல் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது.

ஐந்து அரபு நாடுகள் உடனடியாக படையெடுத்த ஒன்பது மாத காலப் போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. சுமார் 750,000 பாலஸ்தீனிய அரேபியர்கள் வேரோடு பிடுங்கப்பட்டனர். மேலும் பலர் அரேபியர்களால் தக்கவைக்கப்பட்ட இரண்டு பாக்கெட்டு நிலத்துண்டுகளுக்குள் முடங்கினர். காசா, எகிப்தின் கட்டுப்பாட்டிலும், மற்றும் மேற்குக் கரை ஜோர்டானால் நிர்வகிக்கப்பட்டும் வந்தன. காஸாவில் நிலைமைகள் மோசமாக இருந்தன: பலர் முகாம்கள், பள்ளிகள் மற்றும் மசூதிகளில் தூங்கினர். அந்தப் பகுதியில் உள்ள அகதிகள் எகிப்துக்குள் நுழையவோ, இஸ்ரேலுக்குத் திரும்பவோ அனுமதிக்கப்படவில்லை. அவர்கள்  நாடற்றவர்களாக அச் சிறு துண்டுக்குள் சிக்குண்டு கிடந்தனர்.

1967 இல், எகிப்து, ஜோர்டான் மற்றும் சிரியாவுடன் நடந்த ஆறு நாள் போரில், ​​இஸ்ரேல் காசா மற்றும் மேற்குக் கரையைக் கைப்பற்றியது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் காசாவில் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டது. 1980 களின் நடுப்பகுதியில் சுமார் 250,000 பாலஸ்தீனியர்கள், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்கள்தொகையில் 10% பேர் தடுத்து வைக்கப்பட்டனர் அல்லது விசாரிக்கப்பட்டனர் என “Enemies and Neighbours: Arabs and Jews in Palestine and Israel, 1917-2017” என்ற தனது நூலில் Ian Black கூறுகின்றார்.  இஸ்ரேல் காசாவில் யூத குடியேற்றங்களை நிறுவியமை, அரபு குடியிருப்பாளர்களை கோபப்படுத்தியது. 1987 இல் பாலஸ்தீனியர்கள் எழுச்சியடைந்தனர், இது முதல் இன்டிஃபாடா அல்லது "அதிர்வு" என்று அறியப்பட்டது, இது பல ஆண்டுகளாக நீடித்த வன்முறை எதிர்ப்புகளின் தொடர்ச்சியான இயக்கமாகும்.

1993 இல் இஸ்ரேலும் பாலஸ்தீனியர்களும் ஓஸ்லோ சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர், இது பாலஸ்தீனிய மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை வழங்குவதற்காகவென செய்யப்பட்ட ஐந்தாண்டு இடைக்கால ஒப்பந்தம் ஆகும். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தொடர்ந்த போதிலும், பாலஸ்தீனிய அதிகார சபை  (pa), என்கிற இப் புதிய அமைப்பானது, காசா மற்றும் மேற்குக் கரையில் மட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது. இஸ்ரேலிய குடியேற்றங்களின் பரந்த விரிவாக்கம் மற்றும் ஜெருசலேமை யார் கட்டுப்படுத்துவது போன்ற கடினமான பிரச்சினைகளில் பேச்சுவார்த்தையாளர்களிடையே  உடன்பாடு எட்டப்பட முடியவில்லை. மேலும் இண்டிபாடாவின் போது தோன்றிய ஹமாஸ், உடன்படிக்கைகளை எதிர்க்க தற்கொலை குண்டுவெடிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டது. சமாதான முன்னெடுப்புகள் தடுமாறின. 2000 இல் பாலஸ்தீனியர்கள் இரண்டாவது இன்டிஃபாடாவில் மீண்டும் கிளர்ந்தெழுந்தனர்.

2005 இல் காஸாவிலிருந்து இஸ்ரேல் பின்வாங்கியது, ஒரு காரணம் என்னவெனில் அதை வைத்திருப்பது மிகவும் செலவு கூடியதாக இருந்தது. ஒரு வருடம் கழித்து ஹமாஸ் பாலஸ்தீன தேர்தலில் பெரும்பான்மையை வென்றது மற்றும் அதன் அரசியல் போட்டியாளரான ஃபத்தாவுடன்(Fatah) கூட்டரசாங்கத்தை அமைத்தது. ஜூன் 2007 இல், ஒரு குறுங்கால உள்நாட்டுப் போருக்குப் பிறகு, போராளிகள் காசாவின் முழுக் கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொண்டனர், மேற்குக் கரையை  இயக்க பாதாவை விட்டுவிட்டார்கள். பதிலடியாக இஸ்ரேலும் எகிப்தும் கடலோரப் பகுதியில் முற்றுகையை விதித்து, காசாவின் பொருளாதாரத்தை கழுத்து நெரித்தன. இஸ்ரேலிய அரசாங்கம் சமீபத்திய ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான வேலை அனுமதிகளை வழங்கியிருந்தாலும், காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் பணம் சம்பாதிப்பதற்காக எல்லையை கடக்க அனுமதித்தாலும்,  நிலைமைகள் சிறிதளவே முன்னேறியுள்ளன. 2022 இல் வேலையின்மை விகிதம் 47% ஆகவும், இளைஞர்களுக்கு 70% ஆகவும் இருந்தது; எட்டு மணி நேர மின்தடை என்பது அன்றாட நிகழ்வாகும்.

முற்றுகையோடு கூட, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் நடத்திய நான்கு போர்களின் விளைவுகளையும் காசா மக்கள் அனுபவித்துள்ளனர். 2008 மற்றும் 2023 க்கு இடையில், இந்த மோதல்கள் மற்றும் பல்வேறு வன்முறை வெடிப்புகளால் காசாவில் 5,360 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், மற்றும் 63,000 பேர் காயமடைந்தனர். சமீபத்திய மோதல் இன்னும் அதிக துயரத்தையே அனுமானிக்கிறது. இஸ்ரேல் அந்த பகுதியில் "முழு முற்றுகையை" விதித்துள்ளது, எரிபொருள், மின்சாரம் மற்றும் உணவுக்கான எட்டுதலை கட்டுப்படுத்துகிறது. ஒரு தரை வழிப் படையெடுப்பு தவிர்க்க  இயலாததாகத் தோன்றுகிறது. காசாவில் உள்ள பொதுமக்கள் ஏற்கனவே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், அவற்றையெல்லாம் மீறிய மிக மோசமான நிலையே வரவுள்ளது. 

குறிப்பு: மூலம் The Economist explains: A short history of Gaza. The Economist Oct 12th 2023 மொழி மாற்றம்: சுபாகிள் (25-10-2023)

How Trump’s tariffs could spark a trade war and ‘Europe’s worst economic nightmare’

How Trump’s tariffs could spark a trade war and ‘Europe’s worst economic nightmare’ European countries could be among those hardest hit if T...