SHARE

Thursday, March 07, 2013

பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காத வரையிலும் பாட்டாளி வர்க்கம் முழு விடுதலை அடைய முடியாது.

 
 
சிறப்புக் கட்டுரை
 
உழைக்கும் பெண்களுக்கு
தோழர் - லெனின்

தோழர்களே, மாஸ்கோ சோவியத்துக்கு நடைபெற்ற தேர்தல்கள்  தொழிலாளி
வர்க்கத்தினரிடம் கம்யூனிஸ்ட் கட்சி பலமடைந்து கொண்டிருப்பதை எடுத்துக் காட்டுகின்றன.

உழைக்கும் பெண்கள் தேர்தல்களில் இன்னும் அதிகமாக பங்கு வகிக்க வேண்டும். ஆண்களோடு ஒப்பிடுகின்ற பொழுது பெண்களைத் தாழ்வான நிலையில் வைத்த பழைய, வெறுக்கத்தக்க, முதலாளித்துவ சட்டங்கள் அனைத்தையும் முழுமையாக ஒழித்திருக்கும் அரசாங்கம், உலகத்திலேயே முதல் ஆட்சி, ஒரே ஒரு ஆட்சி சோவியத் அரசே.

இந்த சட்டங்கள் ஆண்களுக்கு விக்ஷேடமான உரிமைகளைக் கொடுத்தன; அதற்கு உதாரணமாகத் திருமண உரிமைகளையும் குழந்தைகளைப் பற்றிய உரிமைகளையும் கூறலாம். குடும்பச் சட்டங்களில் சொத்துக்களைப் பற்றிய பிரச்சனைகளில் ஆண்களுக்கிருந்த விக்ஷேடமான சலுகைகள் எல்லாவற்றையும் உலகத்தில் ஒழித்திருக்கும் முதல் அரசு, ஒரே அரசு உழைக்கும் மக்களின் அரசாகிய சோவியத் அரசுதான். இந்த சலுகைகளை எல்லா முதலாளித்துவ குடியரசுகளும்---அவற்றில் மிக அதிகமான ஜனநாயகத்தன்மை கொண்டவை கூட---- இன்னும் பாதுகாத்து வருகின்றன.

 எங்கே நிலவுடைமையாளர்களும் முதலாளிகளும் வணிகர்களும் இருக்கிறார்களோ அங்கே சட்டத்தின்படி பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்களாக இருக்க முடியாது.

 எங்கே நிலவுடைமையாளர்களும் முதலாளிகளும் வணிகர்களும் இல்லையோ, எங்கே உழைக்கும் மக்களின் அரசாங்கம் இந்த சுரண்டல்காரர்கள் இல்லாத புதிய வாழ்க்கையை நிர்மாணித்துக் கொண்டிருக்கிறதோ அங்கே சட்டப்படி ஆண்களும் பெண்களும் சமமாக இருக்கிறார்கள்.

ஆனால் அது மட்டும் போதுமானதல்ல.

சட்டப்படி சமம் என்று சொல்லிவிட்டால் அது நடைமுறையிலும் சமத்துவம் என்றிருப்பது அவசியமல்ல.

ஒரு உழைக்கும் பெண் ஒரு உழைக்கும் ஆணுக்குச் சமமாக---- சட்டத்தில் மட்டுமல்லாமல் நடைமுறையிலும்----- இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அதற்கு உழைக்கும் பெண் சமூகமயமாக்கப்பட்ட நிறுவனங்களிலும் அரசாங்க நிர்வாகத்திலும் மென்மேலும் அதிகரிக்கும் பாத்திரத்தை வகிக்க வேண்டும்.

நிர்வாகத்தில் பங்கு கொள்வதன் மூலம் பெண்கள் வேகமாக அறிவைப் பெறுவார்கள்;  ஆண்களுக்குச் சமமாக முன்னேற்றமடைவார்கள்.

கம்யூனிஸ்ட் பெண்கள், கட்சியில் இல்லாத பெண்கள் ஆகிய இரு தரப்பிலிருந்தும் அதிகமான உழைக்கும் பெண்களை சோவியத்துக்குத்  தேர்ந்தெடுங்கள். தங்களுடைய வேலைகளை அறிவோடும் பொறுப்புணர்ச்சியோடும் செய்யக் கூடிய நேர்மையான உழைக்கும் பெண்களாக இருந்தால்---- அவர்கள் கட்சியின் உறுப்பினராக இல்லா விட்டாலும்--- அவர்களை மாஸ்கோ சோவியத்துக்குத் தேர்ந்தெடுங்கள்!

 மாஸ்கோ சோவியத்துக்கு இன்னும் அதிகமான உழைக்கும் பெண்களை அனுப்புங்கள் ! பெண்களை அவமானப்படுத்திய பழைய முதலாளித்துவ முறையை, பழைய சமத்துவமற்ற நிலையை எதிர்த்து வெற்றிக்காகப் போராடுவதற்கு மாஸ்கோ பாட்டாளி வர்க்கம் எல்லாவற்றையும்  செய்யத்
தயார், எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறோம் என்று காட்டட்டும் !

பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காத வரையிலும் பாட்டாளி வர்க்கம் முழு விடுதலை அடைய முடியாது.

1920,பிப்ரவரி 21     நூல் திரட்டு தொகுதி 40,  பக்கங்கள் 157-158
சோவியத் ஆட்சியும் சமுதாயத்தில் பெண்கள் நிலையும்  21-22

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...