பொலிஸ் பாதுகாப்புடன் தப்பியோட்டம்!!
நேற்று மாலை(20) கனடா தேசியக் கூட்டமைப்பு ரொறன்ரோவில் நடத்திய பொதுக் கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். எம்.ஏ. சுமந்திரன் பேசிக் கொண்டிருந்த போது பங்கெடுத்திருந்த பலரும் பேச்சைத் தொடரவிடாமல் உரத்த குரலில் கேள்வி எழுப்பத்தொடங்கினார்கள்.
கூட்டத்தில்; பேசிய இராசமாணிக்கம் சாணக்கியன் எந்தக் குறுக்கீடும் இல்லாது பேசி முடித்தார்.
அவையோர் எழுத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும் என்று பலமுறை சொல்லப்பட்டது. இருந்தும் அவற்றைச் செவிமடுக்காது தொடர்ந்து சுமந்திரனை பேச விடாது கூட்டத்தைக் குழப்பினார்கள். இதனால் கூட்டத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டோம். இப்படி நடப்பது இதுவே முதல் தடவை ஆகுமென கனடா தமிழரசு முக்கியஸ்தர் கவலை வெளியிட்டுள்ளார்.
கூட்டம் தொடங்கு முன்னர் சிலர் மண்டபத்துக்கு எதிர்ப்புறமாக போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.
கனடா நாட்டில் அமைதியான முறையில் எதிர்ப்பைக் காட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. கனடா ஒரு சனநாயக நாடு என்ற முறையில் அமைதியான முறையில் எதிர்ப்பைக் காட்ட சட்டம் அனுமதிக்கிறதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தினுள் எம்.ஏ.சுமந்திரன் பேச தொடங்கிய போதே கேள்விகளால் துளைத்தெடுத்தனர் செயற்பாட்டாளர்கள்.
இந்நிலையில் கனேடிய காவல்துறை வரவழைக்கப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் அணியினர்.
அதிக நேரம் சுமார் 100 வரையான தமிழ் இன உணர்வாளர்கள் மண்டபத்துக்கு வழியே பதாதைகளை தாங்கியவாறு எதிர்ப்புப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அதே வேளை மண்டபத்துக்கு உள்ளேயும் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியிருந்தனர்.
(பதிவு இணையம்)