SHARE

Monday, April 18, 2016

தன் தலைவனைப் பாடுகின்றாள் கலை மகள்!

‘முடி’ந்த காதல் கதை

‘முடி’ந்த காதல் கதை
 மாதவராஜ்


சின்ன வயதில் இருந்தே தாழமுத்துத் தாத்தா தெரியும். தூரத்துச் சொந்தம். பிரியமான மனிதராய்த்தான் இருந்தார். எனக்கு முடி கொட்ட ஆரம்பித்த பிறகுதான் அவரைப் பார்த்தாலே எரிச்சல் வர ஆரம்பித்தது. எப்போது பார்த்தாலும் எதாவது சொல்லி, என் தலையைக் கிண்டல் செய்வதை வழக்கமாய் வைத்திருந்தார். கோபம் கோபமாய் வரும். சுத்தமாய் வெள்ளை முடிதான் அவருக்கு. கொஞ்சம் கூட கொட்டாமல் அடர்த்தியாய் இருந்தது.

அவருக்கு வயது என்ன இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதை அவரே ஒரு விடுகதை போல போடுவதைக் கேட்க வேண்டும். அவருக்கு இருபது வயதில் கல்யாணம் என்பார். கல்யணாம் ஆகி ஒரு வருசத்தில் மூத்த மகள் மங்களம் பிறந்தாள் என்று சொல்லி, மங்களத்துக்கு பதினேழு வயதில் கல்யாணம் என்பார். இரண்டு வருடம் கழித்து அவளுக்கு காத்தவராயன் பிறந்தான் என்பார். அவனுக்கு இருபத்தைந்து வயதில் கல்யாணம் எனத் தொடர்வார். இப்போது காத்தவராயன் மகன் ராஜேஷின் வயதைச் சொல்லி ஒவ்வொன்றாய் கூட்ட ஆரம்பிப்பார். வாழைக்குலை, கத்திரிக்காய், கருப்பட்டிக் கொட்டம் என பார்த்த வியாபாரக் கணக்கெல்லாம் உதவிக்கு வந்து நிற்கும். கடைசியாய் ‘இந்த பங்குனி வந்தா எம்பத்தாறு’ என்று சொல்வார். ஆலமரமாய் இந்த ஊரில் அவர் இருக்க, விழுதுகள் எங்கெங்கோ வேர்பிடித்து இருக்கின்றன. மனைவி,  இரண்டு மகன்கள், சில பேரக் குழந்தைகள் மறைந்து போயிருக்கிறார்கள். 

நம்பவே முடியாது. இந்த வயதிலும் தாழமுத்துத் தாத்தா சைக்கிளில் நாதன்கிணற்றிலிருந்து தளவாய்புரத்திற்கும், தண்டபெத்துக்கும் சைக்கிளிலேயே போய் வந்துவிடுகிறார். ராத்திரியில் ஆறுகட்டை  பேட்டரியோடு, சப்சப்பென்று ரப்பர் செருப்புச் சத்தமிட வாழைத் தோட்டத்துக்கு தண்ணிர் பாய்க்கச் செல்கிறார். மேல்ச்சட்டையோடு அவரைப் பார்த்த ஞாபகம் ஊருக்குள் யாருக்கும் இருக்காது என்றுதான் தோன்றுகிறது. மத்தியானம் சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு செருமலுடன் தாழமுத்து தாத்தா முத்தாலம்மன் பஸ் நிறுத்தத்தின் சிமெண்ட் பெஞ்சில் தோள் துண்டை விரித்துப் படுத்து, வேப்பமரத்தை அண்ணாந்து பார்த்துத்   தூங்கிப்போவார். அப்படியொரு நாளில்தான் அவரது இளவயதின் காதல் கதையைச் சொன்னார்.

“தாத்தா அந்தக் காலத்துல இந்த முடிக்கே பொம்பளப்பிள்ளைய எல்லாம் ஒங்கள மொய்ச்சிருப்பாங்களே” என்று நான் வேடிக்கையாய் கேட்டதிலிருந்துதான் ஆரம்பமானது. என்னையே பார்த்தவர், மெல்லச் 
சிரித்தவாறே “ஆமாம்லே, ஒரு சிலோன்காரி என்னை அப்படிக் காதலிச்சாத் தெரிமா...”  பெரும் ரகசியம் போலச் சொன்னார். கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல், அப்படியே தரையைப் பார்த்து உட்கார்ந்திருந்தவர் மெல்ல ரசித்துத் திரும்பவும் சிரித்துக்கொண்டார். அதைத் தொந்தரவு செய்ய விரும்பாவிட்டாலும், சுவாரசியம் விடவில்லை. “எப்ப தாத்தா..” என்றேன்.

“அப்ப நான் மெட்ராசில ஒரு கமிஷங்கடையில வேலைக்கு இருந்தேன். இருவது இருவத்திரண்டு வயசு போலத்தான் இருக்கும். எப்படி இருப்பேன் தெரிமா! ஒரு நா வீட்டுக்கு வா, கோர்ட்டு சூட்டு போட்டு, டையில்லாம் கட்டி ஒரு போட்டோ எடுத்து வச்சிருக்கேன் பாரு” அவரது முகம் பொங்கிக்கொண்டு இருந்தது.

“கடைக்குப் பக்கத்துல ஒரு பெரிய வீடு. அங்கதான் அவ இருந்தா. என்னப் பாக்கும்போதுல்லாம் சிரிப்பா. நானுஞ் சிரிப்பேன். அவங்க வீட்டுலத்தான் கடைக்குத் தண்ணி பிடிப்போம்.” தொண்டையைச் செருமிக்கொண்டுத் தொடர்ந்தார். “இப்பிடி இருக்கும்போது ஒருநா என்னைப் பாத்து ஒங்க முடி நல்லாயிருக்குன்னுச் சொல்லிப்புட்டா. சட்டுன்னு பதிலுக்கு,  நீயும் ரொம்ப அழகாயிருக்கேன்னு  நாஞ்சொல்லிட்டேன்.” சிரித்துக்கொண்டார். அந்தத் தனிமையில் அவர் குழந்தையாகியிருந்தார். “என்ன பேராண்டி, இந்தக் கெழவன் எவ்ளோ சேட்டை செஞ்சிருக்கான்னு பாக்குறியோ” என மெல்லிய குரலில் கேட்டார். “ச்சே..இல்ல. அப்புறம்..” என்றேன்.

“அப்புறம்தான் அவளப்பத்தித் தெரிஞ்சுது, அவளோட அப்பா அம்மா எல்லாம் சிலோன்ல இருக்குறாங்கன்னும், அவ மெட்ராசுல அவங்க சித்தப்பா வீட்டுல இருந்து டாக்டருக்குப் படிக்கிறான்னும்” என்றார். 

“டாக்டரா...!” எனக் கேட்டேன். குரலிலிருந்த ஆச்சரியம் அவர் எதிர்பார்த்திருக்க வேண்டும். சந்தோஷம் கண்களில் தெரிந்தது. “ஆமாம்லே.. நானும் அவளும் சினிமா, பீச்சுக்கெல்லாம் போயிருக்கோம் தெரிமா” 
என்றார் பெருமையோடு.

அமைதியானவர் அப்படியே மெல்ல அந்த மரத்தடி பெஞ்சில் படுத்துக்கொண்டார். “என்ன தாத்தா, படுத்துட்டீங்க.. சொல்லுங்க“ என்றேன். ஒன்றும் பேசாமல் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தார். தொண்டை 
எலும்பு துருத்திக்கொண்டு மேலும் கீழும் அசைந்து கொண்டிருந்தது. “என்னத்தச் சொல்ல... ம், அப்புறம் ஒருநா அவ சிலோனுக்கு போயிட்டா. அவ்ளோதான். முடிஞ்சுபோச்சு.” என்று ஒருக்களித்துப் படுத்தார். என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவரே எதாவது சொல்வார் என இருந்தேன்.

“போகும் போது, ஒங்க நெனைவா எதாவது தாங்கன்னு சொன்னா. ஏங்கிட்ட என்ன இருந்துச்சு கொடுக்க. எம்முடியைத்தான் கொடுத்தேன்.” எனத் திரும்பியவர் கண்கள் கசிந்துகொண்டு இருந்தன. என்ன நினைத்தாரோ, எழுந்து உட்கார்ந்து “சரி, நீ போய்ட்டு வா பேராண்டி!” என வீட நோக்கி நடக்க ஆரம்பித்தார். தூரத்துச் சந்தில் ஒற்றையாய் அவர் மறைந்து விட்ட பின்னரும், நான் அவரோடு சென்றுகொண்டிருந்தேன்.

இரண்டு நாள் கழித்து, குரும்பூருக்குச் செல்லும் வரும் வழியாக உச்சி வெயிலில் சைக்கிள் அழுத்தி வந்துகொண்டிருந்த தாழமுத்துத் தாத்தாவைப் பார்த்தேன். அருகில் வந்ததும் நிறுத்தி, “பேராண்டி, இன்னிக்கு ஒம்மண்டை ரொம்ப கிளாரடிக்கு. நீயும் எந்தப் பொண்ணுக்காவது  முடியைக் காணிக்கைச் செஞ்சிருக்கலாம்ல” எனச் சிரித்துக்கொண்டே தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்தார். அவரது முடிகள் காற்றில் லேசாக அசைய ஆரம்பித்தன. ஏனோ சந்தோஷமாய் இருந்தது.

தீராத பக்கங்கள்

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...