காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் எந்த தரப்பும் பொறுப்புடன் செயற்படவில்லை
Friday, November 10, 2017 - தினகரன்
காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் ஐ.நா வின் மனித உரிமைச் செயற்பாடுகள், குறிப்பாக காணாமலாக்கப்பட்டோர் பற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் செயற்பாட்டு எல்லை பற்றி ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இரு தினங்கள் யாழ்ப்பாணத்தில் நடந்தது. அதில் மனித உரிமைச் செயற்பாட்டாளரான றுக்கி பெர்ணாண்டோ கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து உரையாடல் இடம்பெற்றது. இதன்போது சில விடயங்களை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
1. காணாமலாக்கப்பட்டோர் பற்றிய சரியான எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படவில்லை. அதற்குரிய மதிப்பீடுகளும் செய்யப்படவில்லை. இந்தக் கணக்கெடுப்பில் இதுவரையில் யாரும் வினைத்திறனுடன் செயற்படவும் இல்லை. (தமிழ்க்கட்சிகளும் செயற்பாட்டியக்கங்களும் ஆய்வுப்பரப்பினரும் இதில் உள்ளடக்கம்) இதுவரையான கணக்கெடுப்பை அரசாங்கம், ஐ.நா அமைப்பு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை மேற்கொண்டுள்ளன. இதன்படி அரசாங்கத்தின் கணக்கெடுப்பிலேயே ஆகக்கூடுதலான எண்ணிக்கையானவர்கள் (65000) காணாமலாக்கப்பட்டுள்ளனர் என முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஐ.நா. நிறுவனம் மேற்கொண்ட பதிவிலும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பதிவுகளிலும் மிகக்குறைந்தளவு எண்ணிக்கையே பதிவாகியுள்ளது. மிகச் சீரியஸான ஒரு விவகாரத்திற்குச் சரியான புள்ளிவிவரங்கள் இன்னும் இல்லை.
2. காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் அரசு, புலிகள், ஜே.வி.பி, ஈ.பி.டி.பி, புளொட், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் உள்படப் பல்வேறு தரப்பினர் சம்பந்தப்பட்டிருந்தாலும் பொறுப்புக்கூறுதலில் அதிகமான பங்கு அரசாங்கத்தையே சாருகின்றது. ஆனால், அதை ஏற்றுக்கொள்வதற்கும் அதன் பிறகான நடவடிக்கைகளுக்கும் அரசாங்கத்தரப்பில் எத்தகைய கொள்கைத்திட்டமும் இல்லை. நேர்மையான செயற்பாடும் இல்லை.
3. காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் ஏறக்குறைய 50 வருடங்களாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இதில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் எனச் சகல இனத்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தும் இந்தப் பிரச்சினைக்கான தீர்வு இன்னும் கண்டறியப்படவில்லை. இது குறித்து எந்தவொரு அரசியற் தரப்பும் முறையாகச் செயற்படவில்லை.
4. காணாமலாக்கப்பட்டோர் என்ற விவகாரத்துக்குத் தீர்வு காணப்படாதவரையில் இலங்கையில் நல்லாட்சி நிலவுவதாகவோ, இலங்கையின் நீதித்துறை சிறப்பான முறையில் செயற்படுவதாகவோ கொள்ள முடியாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீண்ட காலமாக தீர்வும் நீதியும் வழங்காதிருக்கும் நாட்டில் நீதியும் ஆட்சியும் சிறப்பானதாக உள்ளது என்று எப்படிச் சொல்ல முடியும்?
5. காணாமலாக்கப்பட்ட உறவினர்களைத் தேடிக்கொண்டு பெருமளவான மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இது குறித்து உரிய பொதுக்கவனம் மக்களிடத்திலே ஏற்படவில்லை. அரசியற் கட்சிகளும் இதைத் தமது பிரதான வேலைத்திட்டத்தில் உள்வாங்கிச் செயற்படவில்லை. அப்படியான பொதுக்கவனம் தீவிர நிலையில் ஏற்பட்டிருந்தால், அது அரசியல் அழுத்தமாகவும் செயற்பாட்டு முறைமையாகவும் மாறியிருக்கும். வளர்ச்சியடைந்திருக்கும். அத்தகைய அழுத்தங்கள் அரசாங்கத்துக்கு பொறுப்புக்கூறலை ஏற்படுத்தியிருக்கும்.
6. காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்துக்குத் தீர்வு காண்பதைத் தவிர்த்து, அதை ஆறப்போடுவதன் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களைக் களைப்படைய வைத்துச் சோர வைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். கடந்த காலத்தில் அது இத்தகைய உத்தியையே மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த விவகாரத்தைக் காலப்போக்கில் மறக்கடிப்பது.
7. காணாமலாக்கப்படுவது என்பது சட்டவிரோதச் செயற்பாடு. நீதிக்கு எதிரானது. ஜனநாயகத்துக்கு விரோதமானது. மனித உரிமைகளுக்கு மாறானது. நாட்டின் அமைதிக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் பங்கத்தை ஏற்படுத்துவது. மக்களுடைய பாதுகாப்பைச் சீர்குலைத்து அவர்களை அச்ச நிலைக்குள் வைத்திருப்பது. இதைத் திட்டமிட்டே அரசாங்கம் உள்படப் பல்வேறு தரப்புகளும் செய்து வந்துள்ளன. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் விடுவதன் மூலமாக ஒரு அச்சநிலையைத் தொடர்ச்சியாகவே பேணுவதற்கு அரசு விரும்புகிறது.
8. இலங்கையின் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் சர்வதேச அளவில் பேசப்பட்டாலும், ஐ.நா. மனித உரிமைப்பேரவையில் தீவிரமாக விவாதிக்கப்பட்டாலும் இன்னும் அது ஒரு அழுத்த நடவடிக்கையாக மாறவில்லை. ஐ.நாவின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர்கள், பிரதிநிதிகள் இலங்கைக்கு நேரடியாக விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களை (சகல பிரதேசங்களுக்கும் சென்று சகல இன மக்களையும்) சந்தித்தபோதும் அரசாங்கம் இன்னும் பொறுப்புக்கூறலை ஏற்கவில்லை. இதற்கான பரிகாரத்தைக் காண்பதற்கான முயற்சிகளும் ஆக்கபுர்வமாக உருவாக்கப்படவில்லை. குறைந்த பட்சமாக இந்த விவகாரத்துக்கான பதிலொன்றை எட்டுவதற்காக கால எல்லையோ, திட்ட வரைபடமோ உருவாக்கப்பட வேண்டும் என்ற அளவுக்குக் கூட அழுத்தங்கள் வழங்கப்படவில்லை.
அப்படி எதையும் ஐ.நா. மனித உரிமைப் பேரவை செய்வதுமில்லை. பதிலாக இந்த விவகாரங்களைக் குறித்த அறிக்கைகளை மட்டுமே அது விடுக்கும். அதை அரசாங்கம் ஏற்கலாம் விடலாம். அவ்வளவுதான். சில சந்தர்ப்பங்களில் மட்டும் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு சில நாடுகள் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதுண்டு. அண்மைய உதாரணம், பிறேசிலில் தங்கியிருந்த இராணுவத்தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா மீது போர்க்குற்ற விசாரணையின் பேரில் நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சித்தது.
9. காணாமலாக்கப்பட்டோரைக் கண்டறியும் முகமாகத் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் குறித்து நாட்டில் உள்ள எந்தச் சக்திகளிடமும் தீர்மானங்களில்லை. அரசாங்கமும் இது குறித்து அக்கறைப்படவில்லை. சர்வதேச சமூகமும் இதைப்பற்றி எந்தப் பதிலையும் சொல்லவில்லை.
இத்தகைய மிகப் பாதகமான ஒரு நிலையிலேயே கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுடைய போராட்டம் 260 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கிளிநொச்சி நகரில் ஏ.9 வீதிக்கு அருகில் உள்ள கந்தசாமி கோயில் வளாகத்தில், ஒரு சிறிய தகரக் கொட்டகைக்குள் ஆண்களும் பெண்களுமாக சுமார் 45 – 60 க்கும் இடையிலானவர்கள் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கொடுமையான ஒரு கோடைகாலத்தையும் மிக மோசமான ஒரு பனிக்காலத்தையும் கழித்து, இப்பொழுது மழைக்காலத்தில் நுழைந்திருக்கிறார்கள். இதற்கிடையில் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் ஐந்து பேர் நோயுற்று மரணமடைந்துள்ளதாக இந்தக் கொட்டகையில் இன்னும் போராடிக் கொண்டிருப்போர் தெரிவித்தனர். அவ்வாறு மரணமடைந்தவர்களின் படங்களையும் விபரங்களையும் அங்கிருப்பவர்கள் சான்றாகக் காட்டினார்கள். மேலும் இந்தப் போராட்டம் நீடிக்குமானால், இன்னும் கூடுதலான உயிரிழப்புகள் நேரக்கூடிய அபாய நிலைமை தென்படுகிறது.
குறிப்பிட்ட போராட்டக் கொட்டகைக்குள் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள். தங்களுடைய பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என்ற கவலையினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள். இது போதாதென்று கடந்த ஒன்பது மாதங்களாக அடிப்படை வசதிகளே இல்லாத இந்தக் கொட்டகைக்குள்ளிருந்து போராடுவதனால் மேலும் களைப்படைந்து போயிருக்கிறார்கள். சிலருக்கு உளச் சோர்வும் உளநிலைப்பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. ஏனையவர்களில் கூடப் பலரும் வருத்தக்காரர்களாகவே உள்ளனர். ஆகவே இனி வரும் நாட்களில் பாதிப்பு அதிகமாக ஏற்படக்கூடிய சாத்தியங்களே தெரிகின்றன.
அப்படி நடக்குமானால், இந்த மக்கள் இரட்டைப் பாதிப்பைச் சந்திப்பவர்களாக மாறப் போகிறார்கள். ஒன்று ஏற்கனவே தங்களுடைய உறவினர்களைக் கண்டறிய முடியாத துயரம் உண்டாக்கிய பாதிப்பு. இரண்டாவது பெரும் சிரமங்களின் மத்தியில் தொடர்ச்சியாகப் போராடி, நோய்வாய்ப்பட்டுப் பாதிப்பது. அல்லது மரணத்தைச் சந்திப்பது.
இந்தப் போராட்டம் நடக்கும்போது, இந்த மக்கள் இந்தக் கொட்டகைக்குள் எந்தத் தீர்வுமே இல்லாமல் மழையிலும் வெயிலிலும் கிடந்து உழலும்போது, இதைப்பற்றிய எந்த அக்கறையுமே இல்லாமல், உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான ஆயத்த வேலைகளில் கட்சிகளும் தலைவர்களும் பரபரப்பாகியுள்ளதைச் சுட்டிக்காட்டவே. அதாவது மக்களை மேலும் ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லை. எந்த நிலையில் எவ்வளவு பிரச்சினைகளோடு மக்கள் வாழ்ந்தாலும் பரவாயில்லை. மறக்காமல் அவர்கள் தமக்கு வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்களிப்பதற்காக உயிர் வாழும் இயந்திரங்களே மக்கள் என்று சிந்திக்கும் மனநிலையைச் சுட்டிக் காட்டவே.
கிளிநொச்சியில் நடக்கும் போராட்டத்தைப் போல, வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி, வவுனியா போன்ற இடங்களிலும் காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் போராட்டங்கள் நடக்கின்றன. இதைவிட திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, மன்னார் போன்ற ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறான மக்கள் தங்களுக்கான தீர்வைக் கோரி, நியாயத்தைக் கேட்டுக் காத்திருக்கிறார்கள். யார் இதற்குப் பதிலளிப்பது? அல்லது இந்த விவகாரத்துக்குப் பதிலே இல்லையா? அல்லது இந்த விவகாரம் பொருப்படுத்தப்பட வேண்டியதே இல்லையா?
நிச்சயமாகப் பதிலளிக்கப்பட வேண்டிய விவகாரம் இது. காணாமலாக்கப்பட்டவர்களில் 95 க்கும் அதிக வீதத்தினர், அரசியல் காரணங்களின் அடிப்படையிலேயே காணாமலாக்கப்பட்டனர். பலர் எந்தத் தரப்பினால் காணாமலாக்கப்பட்டனர், எங்கிருந்து காணாமலாக்கப்பட்டனர், எப்படிக் காணாமலாக்கப்பட்டனர், எப்போது காணாமலாக்கப்பட்டனர் என்ற விவரங்களோடுள்ளவர்கள். சிலருக்கு மட்டுமே வலிமையான ஆதாரங்கள் இல்லை. இன்னொரு தொகுதியினர் – விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் 2009 மேயில் படையினரிடம் உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்கள். இதற்கு ஏராளமான சாட்சியங்கள் உண்டு.
ஆகவே, இந்த விவகாரம் உரிய பொறிமுறைகளின்படி விசாரிக்கப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டியது. நிச்சயமாகத் தீர்வு காணப்படக் கூடியதும் தீர்வு காணப்பட வேண்டியதுமாகும். இதைப்பற்றி அரசிற் தரப்பினர் ஓரளவுக்கு அங்கங்கே பேசியிருந்தாலும் இதை ஒரு தீர்மானமாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வரவில்லை என்பது தவறே.
இதற்கு அரசாங்கம் தன் தரப்பிலிருந்து நடவடிக்கை எடுப்பதாகக் காட்டுவதற்காக, விசாரணைக் குழுக்களை (பரணகம விசாரணைக்குழு) போன்றவற்றை நியமித்திருந்தாலும் பாதிப்புக்கு இவை தீர்வைக் கொடுக்கவில்லை.
எனினும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து முறைப்பாட்டைப் பெற்றுக் கொண்டது என்ற வகையில் இதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதற்கப்பால் எதுவுமேயில்லை. சர்வதேச வற்புறுத்தல்களை எதிர்கொள்வதற்காக காணாமற்போனோர் விவகாரங்களுக்கான அலுவலகம் என்ற ஒன்றைத் தற்போது அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் கடந்த செப்ரெம்பரில் விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதனுடைய நடவடிக்கைகள் திருப்திகரமாக – பாதிப்புக்குத் தீர்வு வழங்குவதாக இருக்கும் என்ற நம்புவதற்கில்லை. இதேவேளை, இந்தப் பணிமனையின் பெயரை நீங்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டும். இது 'காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம்' என்றே குறிப்பிடப்படுகிறது. கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது காணாமல் போனவருக்கும் அரசியற் காரணங்களினால் பலவந்தமாகக் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டோருக்கும் படையினரிடம் கையளிக்கப் பட்டுக் காணாமலாக்கப்பட்டோருக்கும் ஒரே அலுவலகம் தான். அதாவது ஒரே கணக்குத்தான். இதை எப்படி ஏற்றுக்கொள்வது?
இதேவேளை, இந்தப் பிரச்சினைக்கு வேறொரு வகையில் தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. அது கபடத்தனமாது. அதாவது, காணாமலாக்கப்பட்டோர் உயிரோடிருப்பதைப் பற்றிய விவரங்கள் எதுவுமே அரசாங்கத்திடமில்லை. ஆகவே அவ்வாறானவர்களைப் பற்றி மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கு அரசாங்கம் மரணச் சான்றிதழை வழங்கும் என. இதைப்பற்றிய அறிவிப்பை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாகவே தெரிவித்துமிருந்தார்.
ஆனால், தங்களுக்குத் தங்களுடைய பிள்ளைகள், அல்லது கணவன், அல்லது தந்தை, தாய் என காணாமலாக்கப்பட்டவர்களே வேண்டும். அவர்களுடைய மரணச் சான்றிதழ் அல்ல என்று உறவினர்கள் மறுத்து விட்டனர். இதனையடுத்து அரசாங்கம் இதைப்பற்றிய கதையைப் பொதுவெளியில் எடுக்கவில்லை. ஆனால், காணாமலாக்கப்பட்டோருக்கான மரணச் சான்றிதழை வழங்கும் நடவடிக்கைகள் அங்கங்கே நடந்து கொண்டேயிருக்கின்றன. இது தொடர்பான சட்டம் மேலும் இரண்டாண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாண்டுகளுக்கு இதை நீடிப்பதற்கான, வர்த்தமானி அறிவித்தலை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தன வெளியிட்டிருக்கின்றார்.
2010ம் ஆண்டு 19ம் இலக்க இறப்புகளை பதிவு செய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் ஏதிர்வரும் டிசம்பர் 09ம் திகதி முதல் 2019 டிசம்பர் 09ம் திகதி வரை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்படுவதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.
காணாமல் போனதாக கருதப்படும் நபரின் மரணத்தை பதிவு செய்து மரண சான்றிதழை பெற்றுக் கொள்ளும் வகையிலான இந்தச் சட்டம் 2010ம் ஆண்டு டிசம்பர் 09ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து 3 வருடங்கள் என காலஎல்லை அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவை கருதி இரு வருடங்களுக்கொரு தடவை நீடிக்க முடியும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு 19ம் இலக்க இறப்புகளை பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் காணாமல் போனதாக கூறப்படும் நபர் இறந்திருக்கலாம் என கருதப்படும் சந்தர்ப்பத்தில் மரணத்தை பதிவு செய்து உறவினர்கள் மரண சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியும்.2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட ஓழுங்கு விதிகளின் கீழ் ஒருவர் காணாமல் போன ஒரு வருடத்தின் பின்னர் மரணத்தை பதிவு செய்து சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியும். இதுவே அதனுடைய சாராம்ச விதி.
இதில் அரசாங்கம் வெற்றியடையவே போகிறது. ஏனெனில் காணாமலாக்கப்பட்ட அல்லது காணாமல் போன உறுப்பினர் ஒருவரைப் பற்றிய சட்டரீதியான முடிவு ஒரு குடும்பத்திற்கு அவசியமானது.
வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, சொத்து மற்றும் உடமைக் கைமாற்றம், அல்லது ஆளுகை அல்லது பகிர்தல் போன்றவற்றின்போது, குடும்பத்தினரின் வெளிநாட்டுப் பயணங்களின்போது குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்போது எனப் பல தேவைகளிலும் காணாமலாக்கப்பட்டோரைப் பற்றிய சட்டவலுவுடைய ஆவணம் கையளிக்கப்பட வேண்டும். எனவே மக்கள் இதற்காக எப்படியாவது மரணச் சான்றிதழைப் பெற்றே தீர வேண்டும். இது அவர்களுடைய கையறு நிலையிலேயே நடக்கிறது. எனக்குத் தெரிந்தவரையில் 30 க்கு மேற்பட்டவர்கள் அவ்வாறு தங்களுடைய தேவைகளுக்காக மரணச் சான்றிதழைப் பெற்றுள்ளனர். இதை அவர்கள் விரும்பிச் செய்யவில்ல. ஆனால், வேறு வழியுமில்லை. இதைக் கருத்திற் கொண்டே இவ்வாறு மரணச் சான்றிதழ் வாங்குவதற்கான கால எல்லையை அரசாங்கம் நீடிப்புச் செய்து கொண்டிருக்கிறது.
இதில் மேலும் பாதிக்கப்படுவது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரே – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளே.
உண்மையில் இவர்களுடைய நிலைமையைக் கருத்திற் கொண்டு, ஒரு பொருத்தமான திட்டத்தை அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்து, அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தப் பத்தி அதையே நிபந்தனையாக முன்வைக்கிறது.
காணாமலாக்கப்பட்டோரைக் கண்டறியும் நடவடிக்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேவேளை, அதுவரையிலும் சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு “தாபரிப்புச் செலவை” ( நட்ட ஈடோ நிவாரணமோ அல்ல) அரசாங்கம் வழங்க வேண்டும். காணாமலாக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, வயது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இந்தத் 'தாபரிப்புச் செலவு' அமையும். மாதாந்தம் இந்த நிதி குறித்த குடும்பத்துக்கு வழங்கப்படுவது அவசியம். குறித்த குடும்பத்தின் உறுப்பினர் காணாமலாக்கப்பட்டது என்பது, அந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் இல்லாமல் செய்துள்ளது.
ஆகவே அதைக் குறைந்தளவிலாவது நிவர்த்தி செய்யும் வகையில் இந்தத் தாபரிப்புச் செலவு ஈடு செய்யும்.
அத்துடன், வேலைவாய்ப்பு, பிற வாழ்வாதார உதவிகளில் குறித்த குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
இது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரளவுக்கு ஆறுதலளிக்கும். நடைமுறைக்குச் சாத்தியமானது. அத்துடன் அரசாங்கத்தின் பொறுப்புக்கும் கடப்பாட்டுக்கும் உரியதுமாகும்.
இந்தத் தடவை வரவுள்ள வரவு செலவுத்திட்டத்தின்போதே இதை நடைமுறைப்படுத்துவதற்கான – நிதி ஒதுக்கீட்டுக்கான - ஆலோசனைகளை முன்வைக்கலாம். இது குறித்த கடப்பாடு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு. ஆகக்கூடிய பட்ச நியாயம் இதுவாகும்.
துயருற்றோரின் கண்ணீரைத் துடைப்பதும் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலாக இருப்பதும் அவர்களுக்கு உதவுவதும் நீதியின்பாற்பட்ட நடவடிக்கைகளாகும்.
நியாயமாக நடப்பதே அரசியல் மொழியில் அன்பாகும். அதை நெறியாகச் செய்வதே கட்சிகள் – தலைவர்களின் கடமை.
கருணாகரன்- தினகரன்