நாடும் நடப்பும்
கஜேந்திரகுமார் புனிதக் கூட்டு சுமந்திரன் சாடல்:
இவ்வளவு காலமும் தாங்கள் மட்டுமே புனிதமானவர்கள் என்று கூறிவந்தவர்கள் கூட்டணி அமைத்துள்ளார்கள்; சுமந்திரன் சாடல்
உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம். ஆனால் இந்த தேர்தல் முறைமையிலே எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து ஆட்சியமைப்பது கடினமான விடயம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனாலும் நாங்கள் முயற்சி செய்கிறோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின்னர் யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
இவ்வளவு காலமும் தாங்கள் மட்டுமே புனிதமானவர்கள் என்று தேர்தலில் போட்டி போட்டுக் கொண்டிருந்தவர்கள் தங்கள் நிலைமையை உணர்ந்து ஒரு சிலரோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இப்படியாகத்தான் பாராளுமன்ற தேர்தலுக்கும் ஒன்பது கட்சி கூட்டு பத்து கட்சிக் கூட்டென பல செய்திகள் கூட்டுகள் வந்தன. தப்பி தவறி ஒருவர் மட்டும் பாராளுமன்ற உறுப்பினராக வந்தார். எந்தவித தாக்கத்தையும் இந்த கூட்டு செலுத்தாது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கிறோம். மிகுதி 12 சபைகளுக்கான வேட்புமனுக்களை நாளை காலை சமர்ப்பிப்போம்.
நிறைந்த போட்டியின் மத்தியிலே வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டியதாக இருக்கிறது. அதனால் சற்று நேரம் தாமதித்து தான் இறுதி செய்து கொண்டிருக்கிறோம்.
கட்சியினுடைய தீர்மானத்தின் படி எந்த ஒரு சபைக்கும் முதல்வரோ தவிசாளரோ அறிவிக்கப்படப் போவதில்லை. தேர்தலுக்கு பிறகு தான் அது சம்பந்தமாக கட்சி முடிவு எடுக்கும்.
உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம். ஆனால் எல்லாருக்கும் தெரிந்த விடயம். இந்த தேர்தல் முறைமையிலே எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து ஆட்சியமைப்பது கடினமான விடயம். ஆனாலும் நாங்கள் முயற்சி செய்கிறோம். அப்படியாக அல்லது பெரும்பான்மை கிடைக்காத இடங்களில் அந்தந்த சபைகளையும் சபைகளில் வேறு யாருக்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது என்பதை பொறுத்து நாங்கள் தீர்மானிப்போம் என்றார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை தேர்தலில் போட்டியிடாது;ஆனந்த சங்கரி அறிவிப்பு
தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையாளர் நாயகத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அனுப்பி வைத்த கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி தவிர்க்க முடியாத காரணத்தினால் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்ய முடியவில்லை என தெரிவிக்கிறோம் என்றுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகம் தொடர்பான வழக்கு- தவிர்க்க முடியாத காரணம்- நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் தமிழ் மக்களின் கையில் இருக்க வேண்டும்; சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் தமிழ் மக்களின் கையில் இருக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியைசச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி தேர்தலைப் பொறுத்த வரை வடக்கு – கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணி சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது. உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் தமிழ் மக்களின் கையில் இருக்க வேண்டும் என்பது தான் எங்களது வேண்டுகோளாக இருக்கிறது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி பெரும்பாலன சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்று வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
உள்ளூராட்சி சபை அதிகாரம் என்பது வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் தங்களை தாங்கள் ஆளக் கூடிய வகையில் வாக்களிக்க வேண்டும்
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள 300, 400 கிலோ மீற்றரில் இருக்கும் தேசிய சக்திகளிடம் கையளிக்காமல் உங்களுடன் இருக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடம் கையளிக்க வேண்டும்.
அதன் மூலமே வடக்கு – கிழக்கின் இருப்பை தக்க வைக்க முடியும் எனத் தெரிவித்தார்.
தேர்தலில் கஜேந்திரகுமார் அணியின் கூட்டணித் திட்டம்
தமிழ்த் தேசிய கட்சிகளை ஒன்றிணைத்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது புதிய கூட்டணியாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் வடக்கு கிழக்கு முழுவதும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். அந்தவகையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இந்த வேட்பு மனுக்கள் இன்று மாலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்தததைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்🔺