SHARE

Sunday, February 04, 2024

பொசுங்கிப்போனது போலிச் சுதந்திரம்! பொது வாக்கெடுப்பு நடத்து!!



பொசுங்கிப்போனது போலிச் சுதந்திரம்!  பொது வாக்கெடுப்பு நடத்து!!

ற்றைக்கு சரியாக 18 மாதங்களுக்கு முன்னால், 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி,  இலங்கை பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்து விட்டதாக பிரதமர் ரணில் உலகத்துக்கு அறிவித்தார்.மே மாதம் கட்டியிருக்க வேண்டிய கடன் தொகை 51 பில்லியன் அமெரிக்க டொலரைக் கட்டத் தவறி விட்டதாவும், ஆகப் பத்து நாட்கள் இறக்குமதிக்குப் போதுமான  2பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவாணியே கையிருப்பில் உள்ளதாகவும் கூறினார்,பிரகடனம் செய்தார்!

இது இலங்கை சுதந்திரமடைந்ததாகச் சொல்லி, தம்மைத் தாமே ஆண்டுவந்த 74 ஆண்டுகளின் விளைவாக நடந்தேறியது. மட்டுமல்ல அபிவிருத்திக்கு இடையூறாக இருந்த ``ஈழப் பயங்கரவாதத்துக்கு`` முடிவுகட்டிய 13 ஆண்டுகளின் பின்னால் நடந்தது.

இப் பொருளாதார வங்குரோத்து நிலை, தன்னியல்பான அறகலய கிளர்ச்சிக்கு வித்திட்டது.

அக்கிளர்ச்சியில், அதைக் கிளர்ச்சி எனச் சொல்லக் கூடிய பல நிகழ்ச்சிகள் நடந்தேறின.

அந்நாட்களின் சிகரமாக மன்னர் கோத்தா அரண்மனையில் இருந்தும், அவர் ஆட்சி செய்த நாட்டிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டார். பிரதமராக இருந்த மன்னரின் சகோதர பிரதானி ராஜபக்ச பதவி விலகினார்.நாடாளமன்றத்தில் அநாதரவாக தனி ஒருவராக இருந்த ரணில் பிரதமராகி பின்னர் நாட்டை ஆளும் சர்வ வல்லமை மிக்க ஜனாதிபதி ஆனார்.இன்றும் இருக்கின்றார்.

பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்ட இக் கிளர்ச்சியைச் சாதித்த மக்கள், அரண்மனையை முற்றுகையிட்ட அந்நாளை `உண்மையான சுதந்திர தினம்` என்றும், நாடாள மன்றத்தில் உள்ள 225 திருடர்களும் பதவி விலகி `மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட புதிய பாராளமன்றம் அமையவேண்டும்-புதிய அரசியல் சட்டம் வரையவேண்டும் என  ஜூலை மாதம் 9ம் திகதி கோரினர்.

இவ்வாறு ஜூலை மாதம் 9ம் திகதியன்று, புதிய சுதந்திரப் போர் பிரகடனம் செய்யப்பட்டது, 1948 போலிச் சுதந்திரம் ( 74 ஆண்டுகளின் பின்னால்) பொசுங்கிப் போனது.

ஆனால் இவற்றுடன் கூடவே தன்னியல்பான அறகலய கிளர்ச்சியும் அடங்கிப்போனது. அதை ரணில் பக்ச ஆட்சிக்கு எதிராக உந்தித் தள்ள முயன்ற போதும் அது நிகழவில்லை.எனினும் நீறு பூத்த நெருப்பாக அது கனன்று கொண்டு இன்றும் இருக்கின்றது.  ரணில் பாசிசக் கரம் கொண்டு அதை நசுக்க முயன்று வருகின்றார்.

இந் நிலை, பல இலட்சம் செலவில் 2023 இல் `சுதந்திர தினம்` கொண்டாடுவதில் இருந்து ரணில் பக்ச பாசிஸ்டுக்களைத் தடுக்கவில்லை.

2024 இல் சுதந்திர தின `பெரு விழாவும்` பல தேர்தல் திரு விழாவும் நடக்கவுள்ளன, அதற்கு நாடு தயாரிக்கப்பட்டுவருகின்றது.

2024 சுதந்திர தின விழாவின் கருப்பொருள் `புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்` என்பதாகும். 75 ஆண்டுகள் கட்டி எழுப்பிய நாடு `பழைய` நாடானது எப்படி?

இச் சூழலில் தேசிய நலன் சார்ந்த, ஜனநாயக,முற்போக்கு சக்திகளின் முன்னால் உள்ள பிரதான கேள்வி, முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட ஈழ விடுதலைப் போரை,அறகலய ஆரம்பித்த புதிய சுதந்திரப் போரை மீளக் கட்டியெழுப்புவது எவ்வாறு? இலங்கையில் ஒரு மக்கள் ஜனநாயக் குடியரசை அமைப்பது எவ்வாறு என்பதே ஆகும்.

0

இதற்கு விடை காணும் பொருட்டு இன்றைய உள்நாட்டு, பிராந்திய, சர்வதேசச் சூழ்நிலையை தனித்தும் அவற்றின் பரஸ்பர இடைத் தொடர்பிலும், இயக்க நிலையிலும் ஆராய்வோம்.

 உள்நாட்டுச் சூழ்நிலை:

இலங்கை, ஆளும் கும்பலின் 74 ஆண்டுகால ஆட்சியின் விளைவாக வங்குரோத்து நிலை அடைந்த போது முதலில் உதவ இந்திய நாடு முன்வந்தது.1983 இல் ஈழத் தமிழ் மக்களுக்கு உதவ  வந்த இந்திய அரசு 1987 இல் வற்புறுத்தி செய்து கொண்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் இலங்கையின் இறையாண்மையின் கடிவாளத்தை தன் கையில் எடுத்துக் கொண்டது. வங்குரோத்து உதவி மூலம் தனது விரிவாதிக்க அரசியல் அதிகாரத்தைச் செலுத்திவருகின்றது.வட கிழக்குத் தமிழரின் 13 வது திருத்த அமூலாக்கக் காவலன் என்பதாக இருந்து, இப்போது மலையகத்துக்கும் காவலனாகிவிட்டது.சீனாவிடமிருந்து இலங்கைக்கும் காவல் அரணாகிவிட்டது.ரணில் பக்ச பாசிசக் கும்பல் அந்நிய முதலீட்டுத் திட்டங்களை அதானி அம்பானி கும்பலுக்கு தாரை வார்த்து வருகின்றது.

இவ்வாறு இந்தியா தனது ஆதிக்கத்துக்கு மட்டுமல்ல அந்நிய நிதிமூலதன ஆதிக்கத்துக்கும் துணை நின்றது. இலங்கையில் IMF இன் கடன் மறு சீரமைப்பு, மற்றும் கடன்களுக்கு பிணை நின்றது.

இதன் மூலம் இலங்கை  IMF இன் கடன் பெற்றது. ஆனால் என்றுமில்லாதவாறு இந்த தவணைக் கடன்களுக்கு IMF பொருளாதார நிபந்தனைகள் மட்டுமின்றி எத்தகைய ஆட்சி நடத்த வேண்டும் என்று அரசியல் நிபந்தனையும் இட்டது.குறிப்பாக ஊழலை ஒழிக்க வேண்டும், அதிக வரி அறவிட வேண்டும் என்றெல்லாம் `சுதந்திர இலங்கைக்கு` ஆணையிட்டது.அதைக் கால நிரலில் கண்காணித்தும் வருகின்றது.

ரணில் பக்சபாசிசக் கும்பல் இவற்றை நிறைவேற்ற, ஆட்சியை மேலும் பாசிச மயப்படுத்தும் பொருட்டு பல புதிய கறுப்புச் சட்டங்களை இயற்றி காட்டுமிராண்டி அடக்குமுறைகளை கட்டவிழ்த்து வருகின்றது.

இவ்வாறு ரணில் பக்சபாசிசக் கும்பல் உள்நாட்டில் IMF, அதானி ஆட்சிக்கு காவல் காத்து வருகின்றது.

பிராந்தியச் சூழ்நிலை

நமது பிராந்தியம் முன்னர் இருந்தது போல் இந்து சமுத்திரப் பிராந்தியமாக இன்று இல்லை. சர்வதேசச் சூழ்நிலை காரணமாக-அமெரிக்க உலக மேலாதிக்கம் காரணமாக- அது இந்தோ பசிவிக் பிராந்தியமாக பரந்து விரிந்து உள்ளது.இதில் இந்திய விரிவாதிக்க அரசு அமெரிக்காவின் தொலை தூர நலத் துணையாளனாக உள்ளது.மேலும் உலகை இன்று வகைப்படுத்தும், வடகோளம்,தென் கோளம் என்ற வகைப்பாட்டில் நாம் தென்கோளத்தில் அடங்குகின்றோம்.விரிவாதிக்க இந்திய அரசு இத் தென் கோளத்தின் தலைவனாகும் பேராசை கொண்டு அலைகின்றது.தென் கோள சிறிய நாடுகள் அனைத்தின் மீதும் தனது செல்வாக்கை நிறுவ, ஒட்டுகின்ற அல்லது ஒட்டாத உறவைப் பேணிவருகின்றது.தென் கோள நாடுகளின் கூட்டமைப்புக்களுக்கு தலைவனாக தலைவிரித்தாடுகின்றது.இதன் பொருட்டு உள்நாட்டில் `இந்திய விரிவாதிக்க பாசிச அரசை` மென்மேலும் இந்துத்துவா மயப்படுத்துகின்றது.ராமர் கோவில் கட்டி முடித்து காந்தி தேசத்தை ராமர் தேசம் ஆக்குகின்றது. இலங்கையில் பிரகடனப் படுத்தாத ஒரு கவர்னர் ஆட்சி நடத்துகின்றது.சேது சமுத்திரத் திட்டத்துக்கு தயாராகுகின்றது. 

சர்வதேசச் சூழ்நிலை

குறைந்த பட்சம் 2007 இல் ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடியில் இருந்து உலக ஏகாதிபத்திய பொருளாதாரத்தால் இன்று வரை மீள இயலவில்லை.எந்த பொருளாதார அரசியல் மீட்பு நடவடிக்கைகளாலும் மீட்க முடியவில்லை. இதனால் உலகமறுபங்கீடு ஒன்றே தீர்வாகிவிட்டது. அதிலும் அது பிரதானமாக யுத்த வடிவத்தை எடுத்துள்ளது.இவை பகுதியான, ஒரு நாட்டுக்கு எதிரான, அல்லது ஒரு பிராந்தியம் தழுவிய ஆக்கிரமிப்பு யுத்தங்களாகும்.இவை உலகப் போரைக் கருக் கொண்டுள்ளன.ஆனால் முழு அளவிலான உலகப்போர் அல்ல.மறு புறம் இவை பனிப்போர் அல்ல இரத்தம் சிந்துகின்ற, 2000 இறாத்தல் குண்டு வீசுகின்ற,பல்லாயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்கின்ற நிஜப் போர்கள் ஆகும். அதேவேளை ஆட்சிக்கவிழ்ப்புகளாவும், மூலவள ஆதாரங்களுக்காகவும், வர்த்தக மோதல்களாகவும், பினாமி அதிகாரங்களாகவும் பனிப்போர்களும் தொடர்கின்றன.பனிப் போரும், சூடான போரும் (Cold and Hot wars) ஒரு சேர நிகழ்கின்றன.எனினும் யுத்தமே பிரதான போக்காக உள்ளது.எந்தளவுக்கு எந்தளவு யுத்தம் முன்னிலை பெறுகிறதோ, அந்தளவுக்கு அந்தளவு அரசுமுறை பாசிச மயப்படுகின்றது.

இச் சர்வதேசச் சூழ்நிலையானது எல்லாத் தனித் தனி நாடுகளிலும், எல்லாப் பிராந்தியங்களிலும், எல்லாப் பிராந்தியக் கூட்டுகள் மீதும் செல்வாக்குச் செலுத்தி அவற்றின் இயக்கப் போக்கை செதுக்கி செல் நெறிப்படுத்துகின்றன.

மேலும் முக்கியமாக இது, இரண்டாம் உலகப் போருக்கும் மூன்றாம் உலகப் போருக்கும் இடைப்பட்ட இக்கட்டம், அதன் இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய மேற்கட்டுமானங்கள் அனைத்தையும் தகர்த்து தரைமட்டம் ஆக்குகின்றது.

ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் கூறுகின்றார்:

Excellencies,

Righting our troubled world depends on effective global action.

Yet the international system is out of date, out of time, and out of step, reflecting a bygone age when many of your countries were still colonized.

The United Nations Security Council is paralyzed by geopolitical divisions.

And its composition does not reflect the reality of today’s world.

It must be reformed.

And the global financial system, including the Bretton Woods Institutions, has failed to provide a global safety net for developing countries in distress, as it was created after the Second World War in a totally different global economic situation.

Yet, amidst all this gloom, there is hope.

Secretary-General's remarks to the Third South Summit-Kampala Uganda 2024 

சிந்தனை வழியில் ஒரு முதலாளித்துவ தாராளவாதி என்கிற முறையில் அவர் அடையாளம் காணும் பிரச்சனைகளை இம்முறைமைக்குள் தீர்க்க முடியும் என்று நம்புகின்றார். அவரே சுட்டிக்காட்டும் முரண்பாடுகளின் பகைமைத் தன்மையை ஒரு தாராளவாத சிந்தனையாளரால் காண இயலாமல் போவதில் வியப்படைய ஏதுமில்லை.

ஆனால் அவரளவுக்கு சர்வதேசிய மோதல்களை அறிந்து எதிர்கொள்ளும் பொறுப்பு நிலையில் உள்ள வேறொரு பதவியை-மனிதரைக் கண்பது அரிது. இதனால்;

1)``இன்றைய பல்வேறு நாடுகள் காலனிகளாக இருந்த போது உருவாக்கப்பட்ட இன்றைய சர்வதேச முறைமை காலத்துக்கொவ்வாது காலாவதியாகிவிட்டது``.

2) ``Bretton Woods உடன்படிக்கை உள்ளிட்டு, இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய உலகப் பொருளாதார நிலைமையில் உருவாக்கப்பட்ட சர்வதேச நிதி அமைப்புகள் வளரும் நாடுகளுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்டன``.

3) ``பூகோள அரசியல் பிரிவுகளால் ஐ.நா.சபை முடக்கப்பட்டுவிட்டது``.

ஆகிய மதிப்பீடுகள் மதிப்பார்ந்த முக்கியத்துவம் உடையவை.

சுருக்கிச் சொன்னால் இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய உலக ஒழுங்கமைப்பு அனைத்தும் இன்று பொருந்தாததாக மாறிவிட்டது.

காரணம் என்னவென்றால் ஏகாதிபத்திய அடிக்கட்டுமானம் எதிர்நோக்கும் நெருக்கடியாகும்.இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய ஒப்பீட்டில் அமைதியாக, சமாதான பூர்வமாக உலகம் மறுபங்கீடு செய்யப்பட்டுவந்த நிலைமை மாறி, ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட பகைமையும் போரும் பாசிசமும் முதன்மை பெறுகின்ற போது, பழைய மேற்கட்டுமானங்கள் பொருந்தாதவை ஆகிவிடுகின்றன.

இப்போக்கு கூர்மையாக ஈராக் போரில் ( 20 மார்ச்சு 2003 முதல் 15 டிசம்பர் 2011 வரை) தலை தூக்கியது.ஈராக் மீதான போரில் இங்கிலாந்து, பாராளமன்றத்தை ஏமாற்றியது.அமெரிக்கா ஐ.நா.வுக்குச் செல்லாமல் பொய்க் காரணம் சொல்லி போர் தொடுத்தது.இதனால் கோபி.அனான் ஈராக் போரை சட்டவிரோதமானது என்று அறிவித்தார். இன்று இஸ்ரேல் போரிலும் `பாலஸ்தீனப் படுகொலை` நேர்ந்ததாக ஐ.நா.நீதிமன்றம் வழக்காடி வருகின்றது.அநேகமாக ஆப்கான், ஈராக் போர் முதல், பிந்திய எல்லாப் போர்களிலும், போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றம், சமூக சுத்திகரிப்பு, சமூகப் படுகொலை போன்ற சர்வதேச சட்ட விரோத குற்றங்கள் இழைக்காத போர்களே இல்லை எனலாம்.Bretton Woods நிதி நிறுவனங்கள் நாடு நாடாக விழுங்கி ஏப்பமிட்டு விட்டன.அந்நியக் கடன் என்பது உலகில் அனைத்து நாடுகளுக்குமான பொதுப் பிரச்சனை ஆகிவிட்டது. அதாவது நிதி மூலதன மற்றும் சட்ட விரோத புல்லுருவி மூலதன, ஊழல் ஊதாரி சூதாடி நிதியாதிக்க கும்பலின்  பிடியில் உலகம் சிக்குண்டுவிட்டது.இந்தப் பொருளாதார ஆதிக்கம் அரசியல் ஆதிக்கமாக வளர்ந்துவிட்டது. ஆட்சிக் கவிழ்ப்பு அரசியல் ஆதிக்கத்தின் ஒரு கருவி ஆகிவிட்டது. மூலதனம் மென்மேலும் சுருங்கி குவிந்து விடுவதால் , `ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும்` ஒன்று கலந்து விடுகின்றன. ஒரு கட்சி இறுதியில் ஒரு மனிதர் என்றாகிவிடுகின்றது. இதன் விளைவாக நாடாளுமன்றம் - தேர்தல் என்பவை பாசிசத்தை ஜனநாயகப் படுத்தும் போலித் திரைகள் ஆகி, நடைமுறையில் காலாவதியாகிவிட்டன.

மூலச்சிறப்புமிக்க முதலாளித்துவ ஜனநாயக நாடுகளிலேயே இது நடந்தேறி வருகின்றது.

முதலாளித்துவ தாராளவாத தொழிற்கட்சியை ரொனி பிளேயர் நியூ லேபர் ஆக்கியபோது அதை கொன்சவேர்ட்டிவ் கட்சியாக மாற்றினார். அது முதல் அக்கட்சிகளிடையே வேறுபாடு இல்லை.போலி நாடாளமன்ற முறைமையை நியாயப் படுத்துவதற்காக அவை இரு கட்சிகளாக உள்ளன.

அமெரிக்கா இதில் ஒரு படி மேலே சென்று, குடியரசுக் கட்சிக்குள் டிரம்ப் ஒரு தனிக்கட்சியை உருவாக்கிக் கொண்டுவிட்டார்.முதலாளித்துவ ஜனநாயகத்தின் அச்சாணிகள் அனைத்தையும் டிரம்ப் நிராகரிக்கின்றார். ஆனாலும் 2024 தேர்தலில் போட்டியிடுகின்றார்.இவர் மீது `கற்பழிப்பு` முதல் கலகம் நடத்தியது வரை 91 கிரிமினல் வழக்குகள் உண்டு!

இந்தியாவில் காங்கிரசும், பா.ஜ.க வும் இந்திய விரிவாதிக்க பாசிசத்தின் இரு முகங்களாகவே உள்ளன.பாபர் மசூதியை இடித்த போதுமட்டுமல்ல, அதில் மீள ராமர் கோவிலைக் கட்டியபோதும் இதை அவை நிரூபித்துள்ளன.

இலங்கையில் யு.என்.பி யும் சுதந்திரக் கட்சியும் அவ்வாறே. மொட்டுக் கட்சி தலை தூக்க இயலாதவாறு தறிக்கப்பட்டுவருகின்றது.தூக்கினால் கூட எஞ்சியவை அதன் துணைக் கட்சிகள் ஆகிவிடும்.பிரேமதாசாவின் புத்திர பாக்கியத்தின்-எதிர்க் கட்சிப்- பிதற்றல்கள் சொல்லி மாளாதவை.தாம் ஆட்சி அமைத்தால் IMF உடன் பேசி IMF திட்டத்தை நாட்டுமக்களுக்கு பயனுள்ளதாக மாற்றுவோம், இணைய தடைச் சட்டத்தால் பாதிக்கப் படுவோருக்கு இலவச சட்ட உதவி வழங்குவோம்....இத்தியாதி...இத்தியாதி!

நிலையான ஆட்சி என்கிறார்களே அப்படி ஒன்று நிர்ணயித்த ஆட்சிக் காலத்துக்கு நீடித்திருப்பதில்லை.ஒன்று அந்த ஆட்சிக் காலத்துக்குள்ளாகவே பல ஆட்சி மாற்றங்கள் நிகழ்கின்றன (ஜப்பான்), அல்லது பல சந்ததிகளுக்கு ஒரு கட்சி அல்லது ஒரு வம்சம் அல்லது ஒரு மனிதர் அதிகாரத்தை நீண்ட கால குத்தகைக்கு எடுத்துக் கொள்கின்றார்(ரசியா), இதையும் தேர்தல் மூலம் புதுப்பித்துக் கொள்கின்றார்! ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் பல `முன்னாள்கள்` ஆட்சிக்கால கிரிமினல் குற்றங்களுக்காக சிறை செல்கின்றனர், ஐரோப்பாவும் விதிவிலக்கல்ல (பிரான்ஸ்)! மத்திய ஆசிய,மத்திய கிழக்கு நாடுகளில் யுத்த மற்றும் எண்ணெய்ப் பிரபுக்கள் அரசாங்கம் இல்லாமலே ஆட்சி செய்கின்றன.சில நாடுகளில் இரண்டு அல்லது பல அரசுகள் உள்ளன.

அதன் எல்லா வடிவங்களிலும் முதலாளித்துவ  நாடாளமன்ற ஜனநாயகம், இந்த நிலையில் தான் உலகெங்கிலும் உள்ளது.

சர்வதேச பிராந்திய உள்நாட்டுச் சூழலின் பரஸ்பர இணைப்பும் இயக்கமும்.

உற்பத்தியின் சமூகமயமானது (உலகமயமானது) உலக நாடுகளை, உலக மக்களை இனியில்லையென்றவாறு ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைத்து விட்டது.

இதனால் உலகின் இன்றைய பிரதான போக்கான உலக மேலாதிக்க, உலக மறுபங்கீட்டு மோதல்களின் விதியால் உலகின் அனைத்து நிகழ்வுகளும் ஆளப்படுகின்றன.இவ் விதியைக் கொண்டல்லாமல் இவ் உலகைப் புரிந்துகொள்ள இயலாது. புரிந்துகொள்ள இயலாது என்றால் மாற்றுவது பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்பது தெளிவு.

உலக மேலாதிக்கத்துக்கான மோதல் அமெரிக்க அணிக்கும் ரசிய சீன அணிக்கும் இடையே மூண்டுள்ளது.இதைச் சார்ந்தே உலக மறுபங்கீடு நிகழ்கின்றது. இவையிரண்டும் பிராந்திய ஆதிக்கத்தை மோதல்களைத் தூண்டுகின்றன. இவ்வாறு தான் இவை பரஸ்பரம் இயங்குகின்றன.

இலங்கையின் நிலை:

இலங்கை அதன் புவியியல் அமைவிடம் காரணமாக, இம்மோதல்களின் உலகளாவிய பல மையப் புள்ளிகளில் ஒரு முக்கிய புள்ளியாக உள்ளது. இதனால் உலக மறு பங்கீட்டு அரசியலின் களமாகவும், உலக மறு பங்கீட்டு போரின் களமாகவும் இரு புறவயத் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது.

இதன் இயக்கு சக்தி இந்திய விரிவாதிக்க அரசாகும்.அரசியல் ரீதியாக இலங்கை இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு பணிந்த ஒரு வெளிவாரி மாநிலமாக உள்ளது.உலக மறு பங்கீட்டு போரின் நோக்கில், அமெரிக்க இந்திய அணியின் போர்த்தளமாக மாற்றப்பட்டுவருகின்றது.

எனவே இருவகையிலும் இலங்கை சுதந்திரமாகவோ சுயாதீனமாகவோ இல்லை.

வங்குரோத்து நிலையில் இருந்து இலங்கையை மீட்டெடுப்பதாக, `புதிய நாட்டைக் கட்டியேழுப்பு`வதாகக் கூறி ரணில் கும்பல் எடுக்கும் பொருளாதார நடவடிக்கைகள் நாட்டை மென்மேலும் அந்நிய நிதி மூலத்தின் சுவாசக் காற்றில் வாழ வைக்கப்படுகின்றது.  IMF கடனை நிறுத்தினால் இலங்கை தனது மூச்சை நிறுத்திவிடும்.  IMF கடன் என்பது அரசியல் நிர்ப்பந்தத்துக்கான ஒரு பொருளாதாரக் கருவி ஆகிவிட்டது.

மறு புறம் சீனா ஏற்கெனவே ஹம்பாந்தோட்டையில் கால் பதித்துவிட்டது. இதன் மூலம் பட்டுப் பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை மாறிவிட்டது.இதை யாரும் வெட்டி எறிய முடியாது.இவ்வாறு அரசியல், அபிவிருத்திக் கோணத்திலும் இலங்கை உலக மறுபங்கீட்டு போர்க் களமாகியுள்ளது.

ஒரு சொல்லில் இலங்கை உலக மறுபங்கீட்டு காலனி ஆகி உள்ளது.

INS ‘Karanj’ – a submarine of the Indian
Navy arrived at the port of Colombo today
(03rd February 2024)

https://www.dailynews.lk/

பிரபுத்துவ மன்னராட்சிக் காலத்தில் அந்நியப் படையெடுப்புகளுக்கு (சோழர்) பலியான, மற்றும் பணியாத ராஜ்ஜியங்களாக இருந்து ( பிரபுத்துவ இனத்துவ தமிழன் கூறும் தன்னுடைய `இறைமை` என்பது இத்தகைய ராஜ்ஜியம் ஒன்றை ஆண்ட மன்னனுக்கு இருந்த ``இறைமை`` யே ஆகும்!), பின்னால் ஐரோப்பிய படையெடுப்புகளின் காலனியாகி, ஐரோப்பியர் பிரியாவிடையின் பின் தொடர் காலனியாகி, இன்று உலக மறுபங்கீட்டு காலனி ஆகியுள்ளது.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு போதும் அது முழுச் சுதந்திர நாடாக  இருந்ததில்லை.அதை அண்டைய (தமிழ்!) மன்னர்களும் அனுமதிக்கவில்லை, ஐரோப்பிய மன்னர்களும் அனுமதிக்கவில்லை. இது தான் இலங்கையின் சுதந்திரத்தின் பொதுவான வரலாறு.

இந்திய நீர்மூழ்கிக் கப்பலின் `பாதுகாப்பில்`, இலங்கை தனது 76வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியதில் வியப்பில்லை!



05-02-2024

America’s “Just War” against Afghanistan: Women’s Rights “Before” and “After” America’s Destructive Wars

  America’s “Just War” against Afghanistan: Women’s Rights “Before” and “After” America’s Destructive Wars The CIA Sponsored Islamic Insurge...