பசுவை தேசத் தாயாக அறிவித்தால் ஆதரிப்போம்: காங்கிரஸ்
By காந்திநகர்
First Published : 19 March 2016 03:35 AM IST
குஜராத் மாநிலத்தில், பசுவை தேசத் தாயாக அறிவிக்கும் முடிவை பாஜக தலைமையிலான மாநில அரசு எடுத்தால் ஆதரிப்போம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. எனினும், இதுதொடர்பாக பாஜக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு, பசுவை தேசத் தாயாக அறிவிக்கக் கோரி, விவசாயிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அங்கிருந்த 8 விவசாயிகள் பசுவை தேசத் தாயாக அறிவிக்கக் கோரி பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தினர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்லப்பட்டனர். அதில், ஹிந்தாபாய் வம்பாடியா என்ற விவசாயி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம், குஜராத் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை எதிரொலித்தது. அவையில் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்று பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சங்கர்சிங் வகேலா வலியுறுத்தினார். ஆனால், அதற்கு பேரவைத் தலைவர் கண்பத் வசாவா அனுமதி மறுத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்எம்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நிதீஷ் படேல் கூறுகையில், ""மாட்டிறைச்சியை உண்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் மேலிடம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், கேரளத்தில் காங்கிரஸ் எம்எம்ஏ ஒருவர் கடந்த காலத்தில் மாட்டிறைச்சி விருந்து அளித்துள்ளார். எனவே, பசுவதை பற்றி பேசுவதற்கு காங்கிரஸýக்கு உரிமை இல்லை'' என்றார்.
சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் சங்கர்சிங் வகேலா கூறுகையில், ""பசுவை தேசத் தாயாக பாஜக அறிவித்தால், அதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும். வாக்குகளைக் கவர்வதற்காக மட்டுமே பசுப் பாதுகாப்பு பற்றி பாஜக பேசுகிறது'' என்றார்.
கடையடைப்புப் போராட்டம்: இதனிடையே, பசுவை தேசத் தாயாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, "பசு பாதுகாப்பு சமிதி' என்ற அமைப்பின் சார்பில் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, ராஜ்கோட் மாவட்டத்திலும், செளராஷ்டிரம் பகுதியிலும் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இந்தப் போராட்டத்துக்கு, விஹெச்பி, பஜ்ரங் தள், படேல் இடஒதுக்கீட்டுப் போராட்டக் குழு ஆகிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.