ஐ.நா.சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 25 ஆவது கூட்டத்தொடர் தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது.இக்கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்களும் ஒரு விவாதப் பொருளாக நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ளது.
இதில் முக்கியமாக,
1) ஒடுக்கும் சிங்களத்திடமிருந்து, விடுதலை பெற, ஒடுக்கப்படும் ஈழ தேசிய இனம் நடத்திய, தமிழீழ விடுதலைப் போரை நசுக்க ஏகாதிபத்தியவாதிகளும், இந்திய விரிவாதிக்க அரசும், சிங்களமும் இணைந்து நடத்திய ஈழ தேசிய இனப்படுகொலை யுத்தம், மூடி மறைக்கப்பட்டு,
2) அந்த யுத்தத்தில் மனித உரிமைகளை மீறிய யுத்தக் குற்றங்கள் இரு தரப்பாலும் இழைக்கப்பட்டதாகச் சித்தரிக்கப்பட்டு,
3)இந்த மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை மீது விசாரணை வேண்டுமென்ற நிகழ்ச்சி நிரல் திட்டமிட்டு திணிக்கப்பட்டுள்ளது.
ஏகாதிபத்தியவாதிகள் ஐ.நா.மேடையில் அரங்கேற்றிவரும் இந்த நாடகத்தின் மூன்றாம் அங்கம் இந்த 25 ஆவது கூட்டத்தொடர் ஆகும்.
வருடா வருடம் இந்த சர்வதேசத் திருவிழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக அமைவது சனல் 4 தொலைகாட்சியின் `மனித உரிமை மீறல் ``புதிய`` ஆதாரமாகும்`.நிகழ்ச்சி புளித்து சலித்து போய்விடாமால் உணர்ச்சி புல்லரித்துக் கொண்டிருக்க அல்லது புல்லரிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க இந்த ``புதிய`` ஆதாரங்கள் அவசியமாகின்றன.இவ்வாறு இந்த ஆண்டு வெளி வந்த ``புதிய`` ஆதாரம் மேலே இணைப்பில் உள்ளது.இது குறிப்பாக சிங்கள இராணுவம் யுத்தத்தின் போது நடத்திய காம வெறியாட்டம் பற்றிய சில விநாடிக் காட்சிகளைக் கெளரவமாகக் காட்டியிருக்கின்றது.``தமிழ்ப் புலிகள் ஈவிரக்கமற்ற பயங்கரவாதிகள், ஆயிரக்கணக்கான மக்களின் மரணத்துக்கு பொறுப்பானவர்கள்`` எனப்பிரகடனம் செய்துள்ளது.
இந்த ``புதிய`` ஆதாரங்கள் சனல் 4 தொலக்காட்சிக்கு பிரித்தானிய தமிழர் பேரவையால் கையளிக்கப்பட்டதாக உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ளது.
`தமிழ்ப் புலிகள் ஈவிரக்கமற்ற பயங்கரவாதிகள், ஆயிரக்கணக்கான மக்களின் மரணத்துக்கு பொறுப்பானவர்கள்``, பிரித்தானிய தமிழர் பேரவையின் நிலைப்பாடு என்ன?
இலங்கையில் நடைபெற்ற பொது நலவாய அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமெரன் `மார்ச் 2014 இற்குள் இலங்கை அரசாங்கம் ஒரு நீதி விசாரணையை நடத்தத் தவறினால், ஐ.நா.சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 25 ஆவது கூட்டத்தொடரில் ஒரு சுயாதீன சர்வதேச விசாரணைக்கு தனது அரசாங்கம் அழைப்பு விடுக்கும் எனப் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.ஆனால் பிரித்தானியாவும்,அமெரிக்காவும் மற்றும் மூன்று நாடுகளும் முன்வைத்த தீர்மானம்,சிங்களத்துக்கு மேலும் ஒரு வருடம் அவகாசம் அளித்துள்ளது.
இந்த ஒரு வருடத்தில் ஈழதேசிய இனப்படுகொலையாளன் ராஜபக்ச அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று விடுவான்.ஆட்சித் தலைவன் என்கிற முறையில் மேலும் 5 ஆண்டுகள் யுத்தக்குற்ற தண்டனையில் இருந்து சிறப்பு விதிவிலக்கு பெற்றுவிடுவான்.
ஆக இந்த நாடகத்தில் இன்னும் 5 அங்கங்கள் வரவுள்ளன!
அமெரிக்க கடவுளின் அடியார்களும், ஐ.நா.பக்தர்களும், ஜெனிவாக் காவடியை, பிரதட்டையை தொடர்வார்களாக!
சிங்களம் ஈழதேசிய ஆக்கிரமிப்பை தொடருமாக!
இந்தியா இராணுவப் பயிற்சி அளிக்குமாக!
அமெரிக்கா நிதி அள்ளி குவிக்குமாக!
ஈழத்தமிழன் மீண்டும் ஏமாறுவானாக.
செய்தி விமர்சனம்: சுபா