இலங்கைத் தமிழரும் இந்தியக் குடியுரிமையும்!
பேரா.எஸ்.இசட்.ஜெய்சிங் ஜனவரி 2, 2020 தீக்கதிர்
1955ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் தொடர்ச்சியாக பல்வேறு ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு குறுகிய கண்ணோட்டத்தில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து மத துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவிற்குள் குடிவந்த இந்துக்கள், சீக்கியர்கள், பார்சியினர், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சமணர்கள் ஆகிய ஆறு மதத்தினருக்கு அவர்கள் வந்து ஐந்து வருடமேயானாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் திருத்த சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. அதே நேரம் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் வந்துள்ள இஸ்லாமியர்களுக்கு இது பொருந்தாது எனவும் கூறப்படுகிறது. சாதி, சமய, பாலின வேறுபாடுகள் இன்றி அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் எனக் கூறும் அரசியல் அமைப்புச் சட்டம் 14 க்கு, மாறாக அதனை மீறும் வகையில் இத்திருத்தம் உள்ளது.
அண்டை நாடுகள் என்ற வகையில் பூடான், மியான்மர், இலங்கை நாடுகளையும் அங்கு பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளானவர்களையும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. சிலருக்கு மட்டுமே சலுகை அளிக்கும் இச்சட்டத் திருத்தம் மிகவும் பாரபட்சமானதும் மதச்சார்பற்ற நாடு என்ற அரசியல் அமைப்பின் உள்ளடக்கத்திற்கே முரணானதும் களங்கம் ஏற்படுத்துவதுமாக காணப்படுகிறது. மதம் உட்பட பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளாகி அடைக்கலம் தேடி இந்தியாவிற்குள் வந்துள்ள பூட்டானிய கிறிஸ்தவர்கள்; மியான்மரின் ரோகிங்கியாக்கள்; இலங்கையின் தமிழர் என மற்ற எவரையும் இவ்வரம்புக்குள் கொண்டுவர இவ்வரசு விரும்பவில்லை. முழுமையாக மதத்தை மட்டுமே அளவுகோலாக கொண்டு பாரபட்சமாக குடியுரிமை பிரச்சனையை தீர்க்க முயல்வதென்பது முன்யோசனையற்ற ஆபத்தான வழி முறையாகும்.1955 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் குடியுரிமைக்கு மதம் தேவைப்படும் அம்சமாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் பாஜகவினர் எல்லாவற்றிற்கும் மதத்தை முன் நிறுத்துவது, மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியையும் பாதிப்படையச் செய்வதாகும். இந்திய தேசத்தை இந்து ராஷ்டிரமாக்குவதற்கான முதல் முயற்சி இது எனக் கருதலாம்.
இலங்கைத் தமிழ் அகதிகள்
2019 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தத் சட்டத்தில் இந்தியாவில் வாழும் இலங்கைத்தமிழ் அகதிகளுக்கு இடமளிக்கப்படாதது கடுமையான கண்டனத்துக்குரியது. 1983 முதல் 36 வருடங்களாக அகதி முகாம்களிலும் வெளியிலும் எந்தவித அடிப்படை உரிமைகளும் இல்லாமல் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இலங்கை சிங்கள பௌத்த பேரினவாத ஆளும் வர்க்கம் உள்ள நாடாகும். அதன் 1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் படி பௌத்தம் மட்டுமே முதன்மை மதம் என குறிப்பிடப்படுகிறது. எனவே 1983 முதல் 2010 வரை தமிழர் மீதான இன தாக்குதல் என்பது பெரும்பான்மை பௌத்தர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டதாகும். எல்லா சந்தர்ப்பங்களிலும் பெரிய பாதிப்புக்கு உள்ளானவர்கள் இந்துக்களாவர். இதில் மிகப்பெரிய தாக்குதல் என்பது 1983 இல் நடத்தப்பட்டதாகும். அக்கலவரத்தில் 3000 பேருக்கு மேல் கொல்லப்பட்டதுடன் 25000 மேற்பட்டவர்கள் காய முற்றனர். வீடுகள், வணிக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப் பட்டு பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களும் அழிவுக்கு உள்ளாயின. எனவே இவ்வாறான கலவரங்களும் உள்நாட்டு யுத்தங்களும் ஏற்படுத்திய கொடிய பாதிப்புகளில் இருந்து தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள கட்டிய துணியோடு குழந்தை குட்டிகளுடன் உயிரைப் பணயம் வைத்து படகுகளில் இந்திய அரசை நம்பி தமிழக கரைகளை அடைந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் இந்துக்களா வர். இன்றும் அவர்கள் அகதிகளாகவே வாழ்கின்றனர்.
இவ்வாறு இந்தியாவை நோக்கி வந்தவர்களை இந்திய தேசம், தமிழக அரசு வரவேற்று அகதி என்ற ‘அந்தஸ்துடன்’ தமிழகம், கேரளா, ஒடிசா என பல்வேறு மாநில முகாம்களில் குடியமர்த்தியது. இன்றைய நிலவரப்படி தமிழ் நாட்டில் இலங்கைத் தமிழ் அகதிகள் 106 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பூர்வீக இலங்கை தமிழர்கள், இந்திய வம்சாவளி தமிழர்கள் என சுமார் 105043 பேர் அகதிகளாக உள்ளனர். இவர்களில் முகாம்களில் 73241 பேரும் வெளி பதிவில் 31802 பேரும் உள்ளனர். 1983 தொடங்கி 36 வருடங்களாக எந்த வித அடிப்படை உரிமைகளும் இல்லாமல், கடுமை யான சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தி மிகக் குறைந்த வசதிகளை மட்டுமே வழங்கி அவர்களை முகாம்களில் இந்த அரசுகள் வைத்திருக்கின்றன. இந்தியா சுதந்திரமடைந்து 72 ஆண்டுகளான நிலையில் இவர்கள் 36 வருடங்கள் சுதந்திரமற்று திறந்த வெளிச் சிறையில் அடைபட்டுக் கிடக்கின்றனர்.
இரண்டாம் தலைமுறையினராக இன்னும் அகதி முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் இவர்கள் தங்களையும் குடியுரிமைக்கு தகுதி உள்ளவர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்த போதும் இந்திய ஆட்சியாளர்கள் அதற்கு செவிமடுக்க வில்லை. இந்தியாவெங்கும் இடதுசாரிக் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் அம்மக்களின் குடியுரிமைக்கான ஆதரவை தெரிவித்து வருகின்றன. முகாமில் உள்ளவர்கள் பொது வெளியில் வந்து போராட முடியாத நிலையில் திருச்சி கொட்டபட்டு அகதி முகாமைச்சேர்ந்த 64 இந்திய வம்சாவளி அகதிகள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் 17.06.19 இல் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்ததை அரசு கவனத்தில் கொள்ளவில்லை. பாஜக தலைவர்கள் அமைச்சர்கள் இலங்கை தமிழ் அகதி களின் வருகையை வரலாற்றை சரிவர புரிந்து கொள்ளா மல் பேசி வருகின்றனர்.
இந்தியாவிற்குள் வந்துள்ள இலங்கை தமிழ் அகதிகளை இரு பிரிவினராக அடையாளப்படுத்தலாம். இலங்கையின் பூர்வீக குடிகளான வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள்; இன்னொரு பிரிவினர், ஆங்கிலேய ஆட்சியில் 1815 அளவில் தமிழ்நாட்டிலிருந்து இலங்கையின் பெருந்தோட்ட வேலைகளுக்காக கொண்டு செல்லப்பட்டவர்களின் வாரிசுகள் ஆவர். இவர்கள் இந்திய வம்சாவளி தமிழ் அகதிகளாவர். 1977 இலங்கை கலவரத்தின் போது மலையக இந்திய வம்சாவழியினர் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், கொழும்பு என பல பகுதிகளுக்கு உயிர் வாழ்வதற்காக இடம்பெயர்ந்து வாழ்க்கையைத் தொடங்கினர். தொடர்ந்து வாழ வழியற்ற நிலையில் 1983 இல் நடந்த பெரும் கலவரம் காரணமாக தமிழகத்தில் தஞ்சமடைந்தனர். இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கு உழைத்த இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் கடந்தகால வரலாறு என்பது சோகமானதாகவே இருந்துள்ளது.
இலங்கை 1948 இல் சுதந்திரமடைந்த உடனேயே 10 லட்சம் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களின் இலங்கை குடியுரிமையும் வாக்குரிமையும் ஒரே நாளில் பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக்கப்பட்டனர். இந்நிலையில் இந்திய- இலங்கை அரசுகள் 1964 இல் சிறிமா -சாஸ்திரி உடன்படிக்கையையும் 1974 இல் சிறிமா - இந்திராகாந்தி உடன்படிக்கையையும் மக்கள் உணர்வுக்கு மாறாக செய்து கொண்டன. இதன்படி, இந்தியா 6 இலட்சம் பேரை ஏற்றுக் கொள்வதெனவும் இலங்கை 3,75,000 பேரை ஏற்றுக்கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது. உடன்படிக்கை அமலாக்கத்தின் முடிவில் இந்திய வம்சாவளி மக்களில் 5,25,000 பேர் மட்டுமே அங்கேயே இந்திய குடியுரிமை பெற்று இங்கு வந்தனர் என்பதனால், நாம் இன்னும் 75000 பேருக்கு குடியுரிமை வழங்கலாம் என்பதனையும் இன்றைய குடியுரிமை பிரச்சனையின்போது கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் பல்வேறு இன, மதக் கலவரங்களின் தொடர்ச்சியாக 1983 ஜூலையில் நடந்த கொடூர கலவரத்தால் உயிருக்குப் பயந்து இந்தியாவிற்கு தஞ்சமென உடைமைகளையெல்லாம் இழந்து வந்த இலங்கைத் தமிழர்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர், இந்தியாவில் இருந்து இலங்கை சென்று அங்கு குடியுரிமை இழந்த தொழிலாளர்களின் வாரிசுகள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே இங்குள்ள அகதிகள் முகாம்களிலும் வெளியிலும் வாழும் அகதிகளில் சுமார் 30000 பேர் இந்திய வம்சாவளியினர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது தங்களின் தாயகத்திலேயே இந்தியர் என்ற அடையாளத்துடன் 36 வருடமாக அகதிகளாக இருக்கி றார்கள் என்பது கொடுமையான நிகழ்வாகும். உண்மை யான தொப்புள்கொடி உறவுகளை திறந்தவெளி சிறைச் சாலையில் அடைத்து துன்புறுத்திக் கொண்டிருக்கிறோம். ஐந்து வருடம் என்ற குறைந்த தகுதியை கொண்டவர்களுக்கு குடியுரிமை அளித்து, 36 வருடங்களை கொண்டவர்களை மறுக்கும் இச்சட்டத் திருத்தம் மிகவும் பாரபட்சமானதாகும். இந்திய வம்சாவளி மலையக மக்கள் எந்தக் காலத்திலும் ‘தமிழ் ஈழத்திற்காக’ அரசை எதிர்த்துப் போராடவில்லை. தமது இருப்பை உறுதிப்படுத்துவதற்காகவே போராடி வந்துள்ளனர். எனவே அகதி முகாம் தமிழர்களின் குடியுரிமைக்கான கோரிக்கைகளை பல்வேறு தளங்களில் இருந்து பரிசீலிக்க வேண்டும்.
இந்திய குடியுரிமைச் சட்டங்கள்
1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் இந்திய குடியுரிமை பெற ஐந்து பிரதான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அதன்படி இந்தியாவில் பிறந்தவர்கள், பெற்றோர் இந்தியர்களாக இருந்தால் குடியுரிமை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. இதனை மட்டும் மேற்கோள் காட்டி இலங்கை அகதிகள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக பாஜக தலைவர்களும் அமைச்சர்களும் சில வலதுசாரிகளும் பொது வெளியில் கூறி வருகின்றனர்.
1986 இல் இச்சட்டம் திருத்தப்பட்டு 1987 க்கு முன் இந்திய மண்ணில் பிறந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை எனக் கூறுகிறது. எனவே இலங்கை அகதிகள் அதன் படி பெற முடியாது. அவ்வாறு பெற 1987 க்குப் பின் பிறந்தவரது பெற்றோரில் ஒருவராவது இந்தியராயிருந்தால் மட்டுமே அவர் குடியுரிமைக்கு தகுதியானவராவார். மேலும் இச்சட்டம், 2003 இல் திருத்தப்பட்டபோது குடியுரிமை கிடைக்க பெற்றோரில் ஒருவர் மட்டும் இந்தியராக இருக்கும் பட்சத்தில் இன்னொருவர் சட்ட விரோதமாக இந்தி யாவில் குடியேறியவராக இருக்கக் கூடாது என்கிறது. எனவே இந்த அனைத்து திருத்த சட்டங்களும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு எதிராக இருக்கின்றன. இலங்கை அகதிகளை சட்ட விரோத குடிகள் என அரசு குறிப்பிடுவதால் இந்திய குடி மகனை திருமணம் செய்து பிறக்கும் குழந்தைக்கும் குடியுரிமை இல்லை என்றாகி விடுகிறது. எனவே கடந்தகால குடியுரிமைச் சட்டங்கள் அவர்களுக்கு பாதகமாக இருப்பதால் 2019 இல் கொண்டுவரப்பட்ட குடி யுரிமைச் சட்டத்தில் மற்ற மூன்று நாடுகளுடன் இலங்கையையும் இணைத்து தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முன்வர வேண்டும்.
இரட்டைக் குடியுரிமை
இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அதிமுகவினராலும் இன்னும் சிலராலும் முன் வைக்கப்பட்டுள்ளது. மேலவையில் இலங்கை அகதிகளுக்கான குடியுரிமையை பெற்றுத்தர முயலாத அதிமுக, தற்போது இரட்டைக் குடியுரிமை பற்றிப் பேசுவது வெறும் அரசியல் நாடகமாகும். ஒரு குடியுரிமை இருந்தால் மட்டுமே மற்றொன்றைப் பெற முடியும் என்ற அடிப்படை விபரம் தெரியாமல் சிலர் பேசுகின்ற னர். இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை இருப்பதாக தெரிய வில்லை. அத்துடன், அது இலங்கை அரசுடன் தொடர்புடை யதாகும். மேலும் எந்த நாட்டு குடியுரிமையும் இல்லாமல் 30000 இந்திய வம்சாவளி அகதிகள் தமிழகத்தில் இருப்பதை மறந்துவிடக் கூடாது. எனவே சாத்தியமற்றதை விடுத்து நடை முறையில் சாத்தியமானதைச் செய்திட முயல வேண்டும்.
வெளி நாடு வாழ்வோருக்கு இந்தியக் குடியுரிமை
OCI(overseas citizenship of india)
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான குடியுரிமையை இலங்கை அகதிகளுக்கு கொடுக்க வேண்டுமெனவும் சிலர் கோருகின்றனர். இது இரட்டைக் குடியுரிமை போன்றதல்ல. இதுவும் ஒருநாட்டின் குடியுரிமை உள்ளவர்களுக்கே வழங்க முடியும். இது இந்தியக் குடியுரிமைக்கு சமமானது அல்ல. அதன்படி ஆயுட்காலம்வரை இங்கு இருக்கலாம். ஆனால் வாக்குரிமை, அரசு வேலை,விவசாய நிலம் வாங்கும் உரிமை என்பன கிடையாது; அரசுப் பதவிகள் பெற முடியாது என பல கட்டுப்பாடுகள் உண்டு. நாடற்ற இந்திய வம்சாவளி அகதிகள் இதனையும் பெற முடியாத நிலையில் பூரண குடியுரிமை வழங்குவதே பொருத்தமாக இருக்கும்.
இரண்டு கட்ட குடியுரிமை
இலங்கைத் தமிழ் அகதிகளை அரசு இரு பிரிவினராக பிரித்து பார்க்க வேண்டும்.
1. இலங்கைத் தமிழர்கள். இவர்கள் இலங்கை குடியுரிமை உள்ளவர்கள்.
2. இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள்.
இவர்கள் இலங்கை குடியுரிமை அற்றவர்கள்.இவர்களில் இந்திய தொப்புள் கொடி தொடர்பான உறவுள்ள இந்திய வம்சாவளி தமிழ் அகதிகளுக்கு இலங்கையில் எந்தவிதமான நில புலன்களும் முகவரியும் இல்லாதிருப்பதால் அவர்களுக்கு முழுமையாக இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். இலங்கை தமிழர்கள் எனப்படு பவர்களைப் பொறுத்தவரையில் இலங்கை அரசுடன் கலந்து விருப்பத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்க வேண்டும். குடியுரிமை மட்டுமே ஒருவரின் அனைத்து உரிமைகளுக்கும் அடித்தளமாக இருக்கும். எனவே இன்றைய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கை சேர்க்கப்படவில்லை என்பதால் இலங்கை அகதிகள் மேற்படி சட்டத்திருத்தத்தின் ஊடாக இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க எந்த வகையிலும் வாய்ப்பு இல்லை. ஆனால் இதன் மூலம் தேசமெங்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதன் அவசி யம் என்பது பேசு பொருளாகி இருப்பதால் எதிர்காலத்தில் அதனைப் பெறுவதற்கான ஒரு சூழல் உருவாகி இருக்கிறது என்று கூறலாம். எனவே இலங்கை மலையக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா கூறுவதைப்போன்று இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை பெறு வதற்கு மாநில - மத்திய அரசுகள் தனி மசோதா கொண்டு வருவது பயனுள்ளதாக இருக்கும்.
கட்டுரையாளர் : முன்னாள் உதவி விரிவுரையாளர், இலங்கை பேராதனை பல்கலைக்கழகம், கண்டி.