SHARE

Saturday, November 27, 2021

கரிகால சோழனின் குமுறல் - சேரமான் கவிதை

 கரிகால சோழனின் குமுறல்

- சேரமான்
மென்கட்டிகை வெட்டி,
இனிப்பு உண்டு,
மென்பானம் அருந்தி
இன்று என் பிறந்த நாளைக்
குதூகலமாய் கொண்டாடினீர்கள்.
மகிழ்ச்சி.
'இராஜகோபுரம் எங்கள் தலைவன்' என்றீர்கள்.
'அண்ணனின் பிறந்த நாள்' என ஆடிப் பாடினீர்கள்.
'மன்னவன் பிறந்தான்' என முடிசூட்டினீர்கள்.
மகிழ்ச்சி.
ஆனாலும்
நீங்கள் வெட்டி உண்ட மென்கட்டிகையில்
என் பசி தணியவில்லை.
ஏனென்றால் நான் மூட்டிய
விடுதலை உலையில்
தீ அணைந்து
பன்னிரு ஆண்டுகள் ஆகி விட்டன.
நீங்கள் அருந்திய
மென்பானத்தில்
என் சுதந்திர தாகம் தணியவில்லை.
ஏனென்றால் நான் உருவகித்த
விடுதலை நதி வற்றிப்
பன்னிரு ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
பன்னிரு ஆண்டுகளில்
சாய்நாற்காலிகளில்
நீங்கள் முன்னெடுத்த
இராசதந்திரப் போராட்டம்
இப்போ விண்தொட்டு விட்டது.
என்னைப் போல்
சுடுகாட்டில் படுத்துறங்கி,
காலையில்
எங்காவது ஒரு தோட்டத்தில்
பச்சை மரவள்ளிக் கிழங்கை
அமிர்தமாய் உண்டு
நீங்கள் போராடத் தேவையில்லை.
மெமரி போம் கட்டிலில்
இரவு நித்திரை.
காலையில்
குறோசோனும், கோப்பியும்.
மாலையில் பியரும், வைனும்.
வார இறுதி நாட்களில்
பார்பக்கியூ பார்டி.
இப்படியே
முகநூலில் முற்றுகைப் போர் புரிந்து,
வைபரில் தரையிறங்கி,
வட்ஸ்அப்பில் வழிமறிப்புச் செய்து,
இன்ஸ்ரகிராமில் இத்தாவில் பெட்டி வியூகமிட்டுக்
களமாடும் உங்கள் இராசதந்திரத்தை
எண்ணி நான் வியப்பதுண்டு.
இனியென்ன?
என்னைத் தம்பி
என்று அழைத்தவர்கள்
பேரப்பிள்ளைகள் கண்டு
மறுலோகப் பயணத்திற்குத்
தயாராகின்றார்கள்.
என்னை அண்ணன்
என்று அழைத்தவர்கள்
நரைக்கும் மீசைக்கு
கரும் மை பூசுவதில்
காலத்தைக் கழிக்கிறார்கள்.
என்னை அப்பா
என்று அழைத்தவர்கள்
அப்பாக்கள், அம்மாக்களாகி
அணைந்து போன
விடுதலைத் தீவட்டியை
அடுத்த தலைமுறையிடம்
ஒப்படைக்க வியூகம் வகுக்கிறார்கள்.
எரித்திரியாவில்,
கிழக்குத் தீமோரில்,
கனடாவில்,
உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நான் ஒளிந்திருப்பேன்,
காலம் வரும் போது மீண்டும்
களம் இறங்குவேன்
என்ற நம்பிக்கையில்
நீங்கள் இருப்பதால்
சிரமப்பட வேண்டியதில்லை தானே!
வெளிநாடுகளில் காணிகள் வாங்கி,
பட்டுப் பீதாம்பரம் உடுத்தி,
நீங்கள் கொண்டாடலாம்.
கோத்தபாய வரும் போது
கொடி பிடித்து
அகதி அந்தஸ்து பெறலாம்.
போலிஷ் கடை முன்
துண்டுப் பிரசுரம்
கொடுத்துப் பரப்புரை செய்யலாம்.
பிறகு உங்களுக்கு எங்கே நேரம்?
எனது பிறந்த நாளை
ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட வேண்டும்.
போட்டி போட்டு மாவீரர் நாள் நடத்திப்
பங்கு பிரிக்க வேண்டும்.
அப்படியே முள்ளிவாய்க்கால்
நினைவு நாளில் கவிதை பாடி,
கறுப்பு ஆடியில் கொடி பிடிக்கவே
உங்களுக்கு நேரம் போதாது.
பிறகு உங்கள்
பிள்ளை குட்டிகளுக்கு
எங்கள் வரலாற்றைச்
சொல்லிக் கொடுக்க வேண்டும்.
சனி, ஞாயிறு தினங்களில்
தமிழ்ப் பள்ளிக் கூடங்களில்
பாடத்திட்டங்களுக்கு அடிபட வேண்டும்.
அப்பப்பா,
எத்தனை வேலைப்பளு உங்களுக்கு!
என்வழி வந்து வீழ்ந்தவர்களின்
வித்துடல் மீது போர்க்கப்பட்ட
தேசியக் கொடி
இப்போ உங்கள் தோள்களிலும்,
இடுப்பிலும் கசங்கிக் கிடக்கிறது.
அவர்களின் கல்லறைகள்
மீது சூட்டிய கார்த்திகைப் பூக்கள்
இப்போ உங்கள்
மதுபானப் புட்டிகளை அலங்கரிக்கின்றன.
கஞ்சா அடித்தவர்களும்,
களவெடுத்தவர்களும்,
பொம்பிளைப் பொறுக்கிகளும்
இப்போ தேசிய செயற்பாட்டாளர்கள்.
'முருகன் இறைச்சிக் கடை'
என்று உங்கள் வாணிபத்திற்குப்
பெயர்சூட்ட அஞ்சும் நீங்கள்
ஈழத்தின் பெயரால்
எல்லாத் திருக்கூத்தும் ஆடுவீர்கள்.
நான் வரும் வரை
காத்திருப்பதாகக் கூறி
மக்கள் சொத்தில்
உங்கள் குடும்பங்களைத்
தழைத்தோங்க வைப்பீர்கள்.
என் வழிவந்து வீழ்ந்தோரின்
குடும்பங்களும்,
விழுப்புண்ணெய்தியோரும்
பட்டினி கிடந்தால் என்ன,
செத்து மடிந்தால் என்ன?
இரண்டாயிரம் ஆண்டுகளாக
இறைகுமாரன் வருவான்
எனப் பல கோடி
மக்கள் காத்திருக்கும் போது
எனக்காக இன்னும் ஈராயிரம் ஆண்டுகள்
நீங்கள் காத்திருப்பது தவறில்லை தானே!
என் இனமே,
என் சனமே,
எப்படியோ,
மீட்பர் வருவார்
என்ற நம்பிக்கையில்
தாய்நாடு திரும்பாமல்
இரண்டாயிரம் ஆண்டுகள்
காத்திருந்து
இட்லரிடம் வதைபட்டு
மடிந்த அறுபது இலட்சம்
யூதர்களின் அவலக் கதை
உங்களுக்கு நினைவிருந்தால் சரி.
May be an image of flower, tree and nature

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...