'இலங்கைச் சட்டமா அதிபர் அதிகாரத்தை தவறாக பிரயோகிக்கிறார்'
சட்டமா அதிபர் பாலித்த பெர்ணாண்டோ
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 நவம்பர், 2013 - 12:28 ஜிஎம்டி
இலங்கையில் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்படும்போதோ விடுதலை அளிக்கப்படும்போதோ சட்டமா அதிபர் (அட்டார்னி ஜெனரல்) தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திவருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றஞ்சாட்டுகின்றது.
நாட்டின் சட்ட ஒழுங்கு தொடர்பாக ஆராயும் பொருட்டு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நியமித்துள்ள குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
எட்டு கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப் பொருளைக் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் அண்மையில் கொழும்பு மேல்நீதிமன்றத்தைக் கோரியிருந்ததாக சட்டத்தரணி லால் விஜேநாயக்க சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அதேபோல, கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டிருந்த சந்தேகநபர்களை வழக்கு விசாரணைகளின்றி விடுதலை செய்வதற்கும் சட்டமா அதிபர் நடவடிக்கைகள் எடுத்திருந்தார் என்றும், எனினும் அதற்கான காரணங்களை அவர் நீதிமன்றத்துக்கு அறிவிக்க வில்லை என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறுகிறது.
'பாதுகாப்பு அமைச்சின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களம்'
சட்டமா அதிபரின் இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் நீதித்துறையின் சுதந்திரம் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியிருப்பதாகவும் அதனால் மக்கள் நீதிமன்றத்தின் மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கை தகர்க்கப்படுவதாகவும் லால் விஜேநாயக்க தெரிவித்தார்.
எனவே, சந்தேகநபர் ஒருவருக்கு எதிரான வழக்கை வாபஸ்பெற வேண்டுமானால் சட்டமா அதிபர் அதற்கான காரணங்களை பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீதியமைச்சின் கீழ் இயங்கிவந்த இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம், தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டமை தொடர்பிலும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விசனம் வெளியிட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் மீது விடுக்கப்படும் அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே தற்போதைய நிலைமை உள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதி லால் விஜேநாயக்க கூறினார்.
இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதி லால் விஜேநாயக்க சுமத்தியுள்ள இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டமா அதிபர் தரப்பின் கருத்துக்கள் உடனடியாக கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
=========================
பிற்குறிப்பு: சட்டமா அதிபர் பாலித்த பெர்ணாண்டோ அவர்களும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும், இச்செய்தியை வெளியிட்ட பி.பி.சி. தமிழோசையும் கூறுவது போல இது சட்டமா அதிபரின் அதிகார துஸ்பிரயோகம் பற்றிய பிரச்சனையல்ல, பாதுகாப்பு அமைச்சின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களம் அல்லது, இராணுவக் கட்டுப்பாட்டில் சட்டத் துறை இயங்கும் அரசுமுறை பற்றிய பிரச்சனை ஆகும்.அரசு முறையைத் தான் ஜனநாயகப்படுத்த வேண்டும், சட்டமா அதிபரையல்ல, இது தமிழீழப் பிரிவினையால் மட்டுமே முடியும்.`தமிழ்த் தேசிய இனத்தைப் படுகொலை செய்து வாழும் சிங்கள தேசம் ஒரு போதும், தான் சுதந்திரமாக வாழ முடியாது`!ENB