ஜனாதிபதி மற்றும் இந்திய இராஜதந்திரிகளுக்கு இடையில் பேச்சுவார்தை ஆரம்பம்
இலங்கையில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த இந்தியாவின் மிகப்பெரிய சந்தையை பயன்படுத்திக்கொள்வது குறித்து கவனம்
இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தங்கியிருக்கும் புதுடில்லி ITC MAURYA ஹோட்டலுக்கு வருகைத் தந்த இந்திய நிதி மற்றும் நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், (Dr.S.jayashankar) மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்தியா – இலங்கை பொருளாதார ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்ளல் மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புக்களை விரிவுபடுத்திக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் இந்திய நிதி, நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதேநேரம் இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அதிகளவில் அழைத்து வருவது மற்றும் இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சிநேகபூர்வமாக இடம்பெற்றதோடு, இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியாவின் மிகப்பெரிய சந்தையை பயன்படுத்திக்கொள்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இந்நாட்டின் சுற்றுலா, முதலீடு மற்றும் வலுசக்தி துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவற்கும் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இதன்போது இணக்கம் தெரிவித்தார்.
மீன்பிடித்துறை மற்றும் தேசிய ஒற்றுமை மேம்பாடு உள்ளிட்ட இருநாடுகளுக்கும் அன்னியோன்யமான விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அதனையடுத்து இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் (Shri Ajith Doval) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து வலயத்தின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இதன்போது கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் ஆரவாரமான வரவேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (15) பிற்பகல் 5.30 மணியளவில் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார்.
இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr S.Murugan) , இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, (Santosh Jha), இந்து சமுத்திர வலயத்தின் மேலதிகச் செயலாளர் புனித் அகர்வால் (Puneet Agrawal), இந்திய உபசரணைப் பிரதானி அன்ஷுமன் கவூர் (Anshuman Gaur) உள்ளிட்ட இராஜதந்திரிகள் ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பளித்தனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விஜயம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் சிறப்பாக பிரசாரம் செய்திருந்ததுடன், புதுடில்லி நகரின் பிரதான சுற்றுவட்டாரத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் (Dr. S. Jayashankar), இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் (Shri Ajith Doval) உள்ளிட்டவர்களை இன்று (15) இரவு சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
ஜனாதிபதி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணமாக இன்று (15) பிற்பகல் நாட்டிலிருந்து இந்தியா புறப்பட்டுச் சென்றார்.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 17 ஆம் திகதி வரையில் இந்தியாவில் தங்கியிருப்பார்.
இந்தச் சுற்றுப் பயணத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான இருதரப்பு சந்திப்பில் முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்தியாவின் துணை ஜனாதிபதி ஸ்ரீ ஜக்தீப் தன்கர், (Vice President Of India Shri Jagdeep Dhankhar), இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் (Dr.S.Jayashankar – Minister of External Affairs of India), இந்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நந்தா (J.P. Nanda – Minister of Health), இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல்(Shri Ajith Doval – National Security Advisor of India) உள்ளிட்ட இராஜதந்திரிகள் பலருடனும் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையில் முதலீடு மற்றும் வணிகம் தொடர்புகளை பலப்படுத்தும் நோக்கில் புதுடில்லியில் நடைபெறவிருக்கும் வர்த்தகர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.
அடுத்தபடியாக ஜனாதிபதி புத்தகாயாவிற்கான சுற்றுப்பயணம் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்வர்.
மூலம்; ஜனாதிபதி ஊடகப் பிரிவு.