ஆட்சி மாற்றத்துக்காக பொன்சேகாவை தமிழ்க் கூட்டமைப்பும் ஆதரிக்க வேண்டும்-மனோ கணேசன்
இன்றைய ஆட்சியை மாற்றியமைத்து புதிய தேசிய அரசை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் எமது செயற்திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
2009-12-04 05:54:09
ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக்காண தமிழ் தேசிய கூட்டமைப்பு இத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என மனோ கணேசன் எம்.பி கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற தனது கட்சியின் நிலைப்பாட்டை தாம் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் வெயிட்ட அறிக்கையிலேயே மனோ கணேசன் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:
தென்னிலங்கைவாழ் தமிழர்கள் எதிரணி பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். வடக்குகிழக்கு தொடர்பில் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகள் தொடரும். தென்னிலங்கை முழுக்க வாழும் தமிழ் மக்கள் ஆட்சிமாற்றத்திற்காக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நியமிக்கப்பட் டிருக்கும் சரத் பொன்சேகாவிற்கு எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
சரத் பொன்சாகாவிற்கு எந்தவித அரசியல் நிபந்தனைகளுமின்றி வாக்களிக்கவேண்டும் என தமிழ் மக்களை நாம் கோரவில்லை. தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவிற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இன்றைய ஆட்சியை மாற்றும் வாக்குகளாகும். யுத்த வெற்றியினை முன்னிலைபடுத்தி தேர்தல்களில் இலகு வெற்றி பெற்றிடலாம் என இந்த அரசு மனப்பால் குடித்தது. ஆனால் யுத்த வெற்றிக்கு காரணமானவரே தேர்தலில் பொது வேட்பாளராக எதிரணியினால் நிறுத்தப்படுவதால் இன்று இந்த அரசு அதிர்ந்துபோய்யுள்ளது. இந்த ஆட்சியை மாற்றுவதற்கு இதைவிட
சிறந்த வழி எதுவும் கிடையாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அழைப்பு
இன்றைய ஆட்சியை மாற்றியமைத்து புதிய தேசிய அரசை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் எமது செயற்திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். வடகிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களான யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இடங்களில் வாழும் தமிழர் தொடர்பல் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு தொடர்ந்தும் நடத்தப்படும். இன்றைய அரசை மாற்றிடவேண்டும் என்ற உணர்வுகள் இன்று வடக்குகிழக்கில் தமிழ் மக்கள் மனங்களில்
ஒலிப்பதாக எமக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த உணர்வுகளை எதிரொலிக்கச் செய்து ஆட்சிமாற்றம் என்ற ஒரே அடிப்படையில் எதிரணி பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை கூட்டமைப்பு ஆதரிக்கவேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
மலையக கட்சிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு
தென்னிலங்கையின் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் மேல்மாகாணத்தில் வாழ்ந்துக்கொண்டிருகும் தமிழ் மக்கள் மத்தியில் இந்த அரசை மாற்ற வேண்டும் என்ற உணர்வு கொந்தளித்துக்கொண்டிருக்கின்றது. எவர் என்ன சொன்னாலும் இதுதான் யதார்த்தம். எனவே நமது மக்களின் எண்ணக்கருத்திற்கு ஏற்ப மலையக கட்சிகள் செயற்பட வேண்டும். ஆட்சி
மாற்றத்திற்காக மலையக கட்சிகள் எதிரணி பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கவேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
தமிழர் போராட்டம்
இந்நாட்டில் இனியொரு ஆயுத போருக்கு இடம் கிடையாது. போர் முடிந்துவிட்டது. ஆனால் போராட்டம் முடியவில்லை. தமிழ் மக்களின் போராட்டத்தின் வடிவம் மாறவேண்டும். அது ஜனநாயக போராட்டமாக முன்னெடுக்கப்படவேண்டும். அதிகாரப் பகிர்வுக்காகவும், நீதி, சமாதானம் ஆகிய நோக்கங்களுக்காகவும் அரசியல் முதிர்ச்சியுடனான சாணக்கியத்துடன் நாம்
காய்நகர்த்த வேண்டும். எமது போராட்டத்தை சிங்கள அரசியல் அணிகளுடன் இணைந்து முன்னெடுக்கும் சந்தர்ப்பங்களை நாம் ஒருபோதும் தவறவிடக்கூடாது.
புலம்பெயர் தமிழர்கள்
இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கும், தமிழர்களின் போராட்ட வடிவத்தின் ஜனநாயக மாற்றத்திற்கும் புலம் பெயர்ந்து வாழுகின்ற தமிழர்கள் ஆதரவு வழங்கவேண்டும். களத்தில் இருந்தபடி நேரடியாக ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கும் தமிழ் தலைமைகளை அடையாளங்கண்டு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
பகிஷ்கரிப்பு எங்களுக்கு உடன்பாடானது அல்ல
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலக்கட்டத்திலிருந்து இன்றுவரையும் தேர்தல் பகிஷ்கரிப்பை நாம் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இந்நிலையில் நாங்கள் வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் கொழும்பில் ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளும் அணியின் அதிகாரம் தமிழ் மக்கள் மீது பாதிப்பை செலுத்துகின்றது. இந்நிலையில் எமது வாக்களிப்piன் மூலமாக அந்த அதிகார அணியை இயன்றவரையில் எமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளவேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. இராமண் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்று தமிழ் மக்கள் தேர்தலில் அக்கறையின்றி இனிமேலும் இருக்கமுடியாது. இங்கே போட்டியிடும் இருவருமே இராவணர்கள் தான். இந்த இராவணர்களில் பெரிய இராவணன் யார்? சின்ன இராவணன் யார்? என்று சிந்தித்து முடிவு செய்யவேண்டிய நிலைமையில் தமிழ் இனம் இருக்கின்றது. இதைத்தவிர நடைமுறை சாத்தியமான மாற்று வழி கிடையாது.
மனசாட்சிப்படி மக்களை வாக்களிக்க கோரமுடியாது
தமிழ் மக்களிடம் தமது சொந்த விருப்பத்தின்படி வாக்களியுங்கள் எனக்கூறிவிட்டு எமது கடமையில் இருந்து நாம் நழுவ முடியாது. தமிழ் மக்களின் பரதிநிதிகள் என்ற முறையில்
மக்களுக்கு தலைமைத்துவம் வழங்கி வழிகாட்டவேண்டிய வரலாற்று கடமையை நாம் நிறைவேற்றுவோம். ஏனைய தமிழ் கட்சிகளும் மக்களுக்கு தெளிவாக வழிகாட்டவேண்டும் என நாம் கோருகின்றோம்.*
SHARE
Subscribe to:
Posts (Atom)
India, Sri Lanka head to a win-win relationship
India, Sri Lanka head to a win-win relationship 《 Asian Age 17 Dec 2024 》 All the signs are pointing to the possibility of a major win for...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...