சாஜகான் |
On Financial Resolution and Deposit Insurance Bill, 2017.
டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா குறித்து
வங்கியில் டெபாசிட் இன்ஷ்யூரன்ஸ் சட்டம் என்று ஏதோ வருகிறதாமே... வங்கி திவால் ஆனால் நாம் டெபாசிட் செய்த பணம் அம்போ ஆகி விடுமாமே... இது நிஜமா... இதைப்பற்றி நீங்கள் எழுதுங்கள் என்று இன்பாக்சில் பலர் கேட்டார்கள்.
வங்கி, நிதித்துறை, சட்டம் ஆகியவை தொடர்பான விஷயங்கள் மிகவும் சிக்கலானவை. அதிலும் நமது சட்டங்கள் இருக்கின்றனவே, அவற்றை இயற்றியவர்களே உண்மையில் புரிந்து கொண்டுதான் இயற்றினார்களா என்று சந்தேகப்படும் அளவுக்குக் குழப்பக்கூடியவை. Subject to, Notwithstanding, Read with என்று வேறு சட்டவிதிகளுடன் இணைத்து எழுதப்பட்டிருக்கும். ஒரு சட்டத்தைப் படிக்கும்போது அது வேறெங்கோ இழுத்துக்கொண்டுபோகும். எனக்கும் அந்த அளவுக்கு துறைசார் ஞானம் கிடையாது. எனவே, நான் படித்தவற்றில் புரிந்துகொண்ட அளவில் விளக்குகிறேன்.
அதற்கு முன்னுரையாக மூன்று கதைகள் கீழே தந்திருக்கிறேன்.
கதை-1 : ஓர் ஆலை இருக்கிறது. அதில் 5 பேர் முதலீடு செய்திருக்கிறார்கள். 1 வங்கி கடன் குடுத்திருக்கிறது. 100 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அந்த ஆலை நிதிச் சிக்கலுக்கு ஆளாகி நான்கு மாத சம்பளம் கொடுக்காமல் திடீர் என்று மூடப்பட்டது என்று வைத்துக்கொள்வோம். கடன்கொடுத்த வங்கி அதை சீல் வைக்கிறது. பிறகு ஏலத்துக்கு வருகிறது. அதை யாராவது ஏலத்தில் வாங்குகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஏலத்தின் மூலம் கிடைத்த தொகையில் யாருக்கு முதல் உரிமை, யாருக்கு இரண்டாவது உரிமை என்று சில விதிகள் உண்டு. அதன்படி, தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய சம்பள பாக்கியைத்தான் முதலில் தீர்க்க வேண்டும். அதற்குக் கொடுத்த தொகை போக மீதியிருந்தால் கடன் கொடுத்த வங்கி எடுத்துக்கொள்ளும். அதற்கும் மேலே மீதமிருக்கும் தொகைதான் முதல் போட்ட ஐந்து பேருக்கும் உரிய விகிதத்தில் கிடைக்கும். ஒருவேளை முதல் போட்டவர்களுக்குக் கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம். பிரச்சினையை எளிமையாக விளக்கவே இந்தக் கதையை உதாரணமாக சொல்லியிருக்கிறேன்.
கதை-2: அந்த ஆலையைத் தூக்கி நிறுத்த அரசு கடனுதவிக்கு வழி செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்குப் பெயர் பெயில்-அவுட். அதே போல, ஒரு வங்கி நிதிச் சிக்கலுக்கு ஆளாகிறது என்று வைத்துக் கொள்வோம். பொதுவாக, அரசு உதவிக் கரம் நீட்டுகிறது, அல்லது ஏதாவதொரு அமைப்பின் மூலமாக நிதியுதவிக்கு ஏற்பாடு செய்கிறது என்றால், அதற்குப் பெயர் பெயில்-அவுட். உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு விமான கம்பெனி சிக்கலுக்கு ஆளான போது, ஊழியர்கள் சம்பளத்துக்காக, பெட்ரோலுக்காக இன்னும் கொஞ்சம் வங்கிக் கடன் குடுத்து அரசாங்கம் பெயில்-அவுட் முயற்சி செய்தது உங்களுக்கு நினைவிருக்கும். ஆக, நிதிச் சிக்கலுக்கு உள்ளான நிறுவனத்துக்கு வெளியிலிருந்து நிதியுதவி செய்து அதன் சிக்கலைத் தீர்க்க முயற்சி செய்வதற்குப் பெயர் பெயில்-அவுட்.
கதை-3: வெளியிலிருந்து நிதியுதவி செய்து மீட்பதற்குப் பதிலாக, அந்தக் கம்பெனியிடம் இருக்கும் சொத்துகளை வைத்தே அதை மீட்பதற்கு உதவி செய்வதும் உண்டு. இப்படி, ஒரு நிறுவனத்தின் உள்ளிருந்தே, அதனிடம் இருக்கின்ற நிதியையும் சொத்துகளையும் வைத்தே சிக்கலைத் தீர்க்க முயற்சி செய்தால் அதற்குப் பெயர் பெயில்-இன்.
புதிதாக வர இருக்கிற சட்டத்தில் சர்ச்சைக்குரிய விஷயமாகப் பேசப்படுவது பெயில்-இன்.
நாம் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தை, அல்லது காலமெல்லாம் வேலை செய்து ஓய்வு பெறும்போது கிடைத்த பணத்தை எதிர்காலத் தேவைகளுக்காக முதலீடு செய்கிறோம். பிள்ளைகளின் படிப்புக்காக, கல்யாணத்துக்காக, வயதான காலத்தில் சோற்றுக்கு வழி செய்து கொள்ள இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். முதலீடு செய்ய பல வழிகள் உண்டு. பேராசை பிடித்துப்போய் சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வந்தது போன்ற போலி கம்பெனிகளில் முதலீடு செய்வார்கள் சிலர். மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வார்கள் சிலர். பங்குச் சந்தையில் முதலீடு செய்வார்கள் சிலர். ஆனால், பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்வதில் ஆபத்துகள் உண்டு. உள்ளூர் அரசியல்/பொருளாதார நிலை மட்டுமல்ல, உலகளாவிய சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இவை உயரவோ வீழவோ கூடும். போட்ட பணம் பலமடங்காகத் திரும்பி வரலாம், மொத்தமும் மூழ்கிப் போகலாம்.
எனவே, பணம் பத்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிற, சிக்கலுக்கு ஆளாக விரும்பாத பெரும்பாலான மக்கள் தமது பணத்தை டெபாசிட் செய்வது வங்கிகளில்தான். ஏனென்றால், பெரும்பாலான வங்கிகள் பொதுத்துறை வங்கிகள்தான். தனியார் வங்கிகள் பெரும்பாலும் நகரப் பகுதிகளில் மட்டுமே இயங்குகின்றன. இந்திய வங்கிப் பரிவரத்தனையில் 82 விழுக்காடு பொதுத்துறை வங்கிகளில்தான நிகழ்கிறது. எனவே, வங்கிக்கு ஏதும் சிக்கல் வந்தாலும் அரசு கை கொடுக்கும் என்று நம்புகிறார்கள். காரணம், இந்த வங்கிகள் எல்லாம் தேசியமயமாக்கப்பட்டவை, ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்குகின்றன. அண்மையில் ஸ்டேட் பேங்க் ஆப் பாடியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் போன்ற பல்வேறு வங்கிகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைத்தது இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கைதான்.
ஒரு வங்கி திடீரென நிதிச் சிக்கலுக்கு ஆளாகி, அதில் டெபாசிட் செய்தவர்களுக்கு பணம் திருப்பித்தர முடியாமல் போனால் என்ன செய்வது என்று யோசித்தது அரசு. இன்று அல்ல, அறுபது ஆண்டுகளுக்கு முன்பே யோசித்தது. 1961இல் Deposit Insurance and Credit Guarantee Corporation Act என்ற சட்டத்தை இயற்றியது. இதன்படி, 1 லட்சம் ரூபாய் வரையான டெபாசிட்டை வட்டியுடன் சேர்த்துத் திருப்பித் தருவதற்கான காப்பீடு வங்கிக்குக் கிடைத்தது. வங்கி மூழ்கிப் போனாலும் டெபாசிட் செய்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிச்சயமாகக் கிடைக்கும். ஆனால், 1 லட்சத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்திருந்தால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொகைக்கு இந்த உத்தரவாதம் கிடையாது. எனவே வங்கி மூழ்குமானால் அதனுடன் சேர்ந்து டெபாசிட் பணமும் மூழ்கும்.
மேலே குறிப்பிட்ட டெபாசிட் காப்பீட்டுக்காக, ரிசர்வ் வங்கியின் கீழ் Deposit Insurance and Credit Guarantee Corporation என்ற நிறுவனத்துக்கு இந்திய பொதுத்துறை வங்கிகள் பிரிமியம் தொகையாக 3000 கோடி ரூபாய் செலுத்தி வருகின்றன. ஆனாலும், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு 67 ஆண்டுகளில் வங்கி மூழ்கும் சம்பவம் ஏதும் நிகழவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆக, நீங்கள் ஒரு வங்கியில் எத்தனை லட்சம் ரூபாய் டெபாசிட் செய்திருந்தாலும், அந்த வங்கி மூழ்குமானால், உங்களுக்கு ஒரு லட்சம் மட்டுமே கிடைக்கும் என்ற விதி இன்று புதிதாக வந்ததல்ல, 1961 முதலாகவே இருக்கிறது. அப்படியானால், இப்போது புதிதாக என்ன சர்ச்சை ?
மத்திய அரசு, புதிதாக ஒரு சட்டத்தை இயற்றுவதற்கான மசோதா தயார் செய்திருக்கிறது. அதன் பெயர் Financial Resolution and Deposit Insurance Bill, 2017. அதாவது, நிதிச்சிக்கல் தீர்வு மற்றும் டெபாசிட் காப்பீட்டு மசோதா 2017. இந்த மசோதாவின் வரைவு மக்களின் கருத்துக்காக 2016 செப்டம்பரில் வெளியிடப்பட்டது. ஆனால், மக்கள் கருத்துக்காக இருபது நாட்கள் அவகாசம் மட்டுமே தரப்பட்டது. 2016 அக்டோபர் 14ஆம் தேதியுடன் வரைவு மசோதாவின் மீது கருத்துக்கேட்பது நிறுத்தப்பட்டது. 2017 ஜூன் மாதம் மைய அமைச்சரவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த்து. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் அமர்வு முடிவடைவதற்கு முதல் நாள் நாடாளுமன்றத்தின்முன் வைக்கப்பட்டது. மசோதாவைப் பரிசீலிக்க புதிதாக கூட்டுக்குழு ஒன்றை நியமிக்கவும் அரசு முடிவு செய்தது. நிதித்துறை விவகாரங்களைப் பரிசீலிப்பதற்காக ஏற்கெனவே நிதித்துறை நிலைக்குழு (committee for finance) இருக்கும்போது, தனியாக ஒரு குழு எதற்கு என்று காங்கிரசும் திரிணமுல் காங்கிரசும் எதிர்ப்புத் தெரிவித்தன. அத்துடன் நாடாளுமன்றத் தொடர் முடிந்து விட்டது.
இந்தப் புதிய மசோதாவில் உள்ள சிக்கல் என்னவென்றால், ஏற்கெனவே இருந்து வருகிற – 1961 முதல் ரிசர்வ் வங்கிக்குக் கீழ் இயங்குகிற Deposit Insurance and Credit Guarantee Corporation என்ற அமைப்புக்குப் பதிலாக புதிதாக வேறொரு அமைப்பை இந்தச் சட்டம் உருவாக்குகிறது. அதன் பெயர் Resolution Corporation – தீர்வு வாரியம். வங்கிகள் மட்டுமல்ல, காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தைகள் ஆகியவற்றையும் இது உள்ளடக்கும். நிதி நிறுவன முறைப்படுத்து ஆணையங்கள், நிதியமைச்சகம், ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் இருப்பார்கள்.
அப்படியானால், சிக்கலுக்கு உள்ளாகும் ஒரு வங்கி, ரிசர்வ் வங்கியின் கீழ் வராதா? சிக்கலுக்கு உள்ளாகும் காப்பீட்டு நிறுவனம் Insurance Regulatory and Development Authority (IRDA)-வின் கீழ் வராதா? நிதிச் சிக்கலுக்கு ஆளான பங்குச் சந்தை Securities and Exchange Board of India (SEBI) செபியின் கீழ் வராதா? வரும், ஆனா வராது.
ஆமாம். தீர்வு வாரியம் அல்லது நெறிப்படுத்து நிறுவனங்கள் (வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி, காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏ, பங்குச் சந்தைகளுக்கு செபி), சிக்கலுக்கு உள்ளாகும் நிதி நிறுவனங்களை அவற்றின் சிக்கலைப் பொறுத்து தரப்படுத்தும் – நிறுவனத்தின் முதலீடு, சொத்துகள் மற்றும் பொறுப்புக்கடன்கள், நிர்வாகத் திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தரப்படுத்தும். நெறிப்படுத்து நிறுவனங்கள், தீர்வு வாரியம் ஆகிய இரண்டுக்குமே நிதி நிறுவனங்களை கண்காணித்து தரப்படுத்தும் அதிகாரம் இருக்கும். ஒரே ஆணியைப் பிடுங்க 2 பேர் எதற்கு?
நிறுவனத்தின் நிதிநிலைச் சிக்கலைப் பொறுத்து, குறைந்த ஆபத்து அல்லது மிதமான ஆபத்து என்று தரப்படுத்தப்பட்ட நிறுவனங்கள், ஏற்கத்தக்க ஆபத்து நிலைமைக்குள் இருப்பதாகக் கருதப்படும். நெறிப்படுத்து நிறுவனங்களால் கண்காணிக்கப்படும். அதிக ஆபத்து, தீவிர ஆபத்து நிலையில் இருக்கும் நிறுவனங்கள் என்றால், நெறிப்படுத்து நிறுவனங்கள் / தீர்வு வாரியம் அதனை சரி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சரி செய்யும் நடவடிக்கை என்பதில், அந்த நிறுவனம் முதலீடு திரட்டக்கூடாது, டெபாசிட் வாங்கக்கூடாது, வர்த்தகத்தை விரிவுபடுத்தக்கூடாது போன்றவையும் அடங்கலாம். நிறுவனத்தைத் தூக்கி நிறுத்த முயற்சி செய்யலாம்; குறித்த காலத்துக்குள் முயற்சி நிறைவேறாவிட்டால் மூட வைக்கலாம்.
மேம்போக்காகப் பார்த்தால், இதில் என்ன தவறு, ஒன்றுக்கு இரண்டாக கண்காணிப்பு அமைப்பு இருந்தால் நல்லதுதானே என்று தோன்றும். இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி, காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏ, பங்குச் சந்தைக்கு செபி ஆகிய மூன்று நிறுவனங்கள் ஏற்கெனவே கண்காணிப்பு அமைப்புகளாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அரசியல் தலையீடுகளுக்கு அப்பால் ஓரளவுக்கு சுயேச்சையாகவே செயல்பட்டும் வருகின்றன. இந்த மூன்றும் செய்து வந்த ஒரு பணியை இன்னொரு அமைப்பும் செய்ய வேண்டும் என்றால், இந்த மூன்று அமைப்புகளும் சரியாகச் செயல்படவில்லை என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்? இதுவரை அப்படி ஏதும் சொல்லப்படவே இல்லையே? பின்னே ஏன் எதற்காக இந்த தீர்வு வாரியம்?
எதற்காக இதை முன்வைக்கிறார்கள் என்று பார்த்தால், ஜி-20 கூட்டமைப்பு இப்படியொரு தீர்வு வாரியம் அமைக்குமாறு சொன்னதாம். இந்தியாவும் ஜி-20இல் உறுப்பினராக இருப்பதால் இதை உருவாக்குகிறதாம். ஜெர்மனியும் இங்கிலாந்தும் இதேபோன்ற சட்டங்களை உருவாக்கியுள்ளதாம். ஆனால் இதுவரை பயன்படுத்தவில்லையாம். 2013இல் சைப்ரசில் ஒரே ஒரு வங்கிக்காக பெயில் இன் பயன்படுத்தப்பட்டதாம்.
இந்தச் சட்டத்தில் மற்றொரு முக்கியப் பிரச்சினை உண்டு. ஒரு நிறுவனத்தை தரப்படுத்தும் முடிவை எதிர்த்து அந்த நிறுவனம் மேல்முறையீடு செய்ய எந்த வழியும் இல்லை. தீர்வு வாரியம் நினைத்தால் எந்தவொரு நிறுவனத்தையும் நிதிச்சிக்கலுக்கு உள்ளானதாக தரப்படுத்த முடியும். அப்படிச் செய்யப்பட்ட தகவல் வெளியே தெரிந்தால், அந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்தவர்கள் பதறிப்போய் உடனே தமது டெபாசிட்டுகளை திரும்பப்பெறவே விரும்புவார்கள். திடீரென நிறுவனத்தின்மீது படையெடுப்பார்கள். இது படிநிலைச் சரிவு (கேஸ்கேடிங் எஃபக்ட்) விளைவை ஏற்படுத்தி, சிறிதளவே சிக்கலுக்கு உள்ளாகியிருந்தாலும் அந்த நிறுவனத்தை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கி விடும். ஆனால் அந்த நிறுவனம் மேல்முறையீடு செய்ய வழிகிடையாது!
ஒரு நிறுவனம் தீவிர ஆபத்தில் இருப்பதாகத் தரப்படுத்தப்பட்ட தேதியிலிருந்து அதன் நிர்வாகத்தை தீர்வு வாரியம் தன் கையில் எடுத்துக்கொள்ளும். அதன்பிறகு, மேலே சொன்ன வழிமுறைகளில் எதையும் பயன்படுத்தி, சிக்கலைத் தீர்க்க முயற்சி செய்யும். அந்த நிறுவனத்தின் சொத்துகள் / பொறுப்புக்கடன்களை வேறொரு நிறுவனத்துக்கு மாற்றலாம்; வேறொரு நிறுவனத்துடன் இணைக்கலாம்; இந்த நிறுவனத்தை நிர்வகிக்க புதிதாக ஒரு நிறுவனத்தை உருவாக்கலாம்; பெயில்-இன் செய்யலாம். நிறுவனத்துக்குப் பணம் கொடுத்தவர்களுக்கு திருப்பித்தர நிறுவனத்தையே கலைக்கலாம். தீர்வு வாரியத்துக்கு ஓராண்டு கால அவகாசம் உண்டு. தேவைப்பட்டால், மேலும் ஓராண்டு நீட்டிப்பும் கிடைக்கும்.
இந்த ஒன்று / இரண்டு ஆண்டு காலத்தில், தீர்வு வாரியத்தின் நடவடிக்கைகள் குறித்து எந்த நீதிமன்றத்திலும் யாரும் கேள்வி கேட்க முடியாது! ஒருவேளை இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்வு வாரியம் சிக்கலைத் தீர்க்க முடியவில்லை என்றால், அந்த நிறுவனம் தானாகவே திவால் நிலைமைக்குப் போய்விடும்! இரண்டு ஆண்டுகளுக்குள் சரிசெய்ய முடியாத தீர்வு வாரியத்தின்மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. அது மட்டுமல்ல. தீர்வு வாரியத்தின் செயல்பாடுகளுக்காக ஒரு கட்டணத்தையும் அந்த நிறுவனத்திடமிருந்தே எடுக்கும்! கட்டணம் எவ்வளவாக இருக்கும் என்பதும் தெரியாது.
நிறுவனத்தை கலைப்பது என முடிவானால், பணத்தைத் திருப்பித் தருவதில் அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய யாருக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது குறித்தும் ஒரு பட்டியல் அதில் உண்டு. (கட்டுரையின் துவக்கத்தில் கதை-1இல் நான் குறிப்பிட்ட உதாரணம் பார்க்கவும்.) இந்தப் பட்டியலின்படி, நிறுவனத்துக்குக் கடன் கொடுத்த மற்றவர்களைவிட டெபாசிட் செய்தவர்களுக்கே முன்னுரிமை தரப்படும். அதற்காகவே டெபாசிட் இன்ஷ்யூரன்ஸ் உண்டு. முன்னுரிமைப் பட்டியல் :
1. டெபாசிட் இன்ஷ்யூரன்ஸ்
2. தீர்வு வாரியத்துக்கான கட்டணம்
3. ஊழியர்களுக்கான 24 மாத நிலுவை சம்பளம், உத்தரவாதம் தரப்பட்ட கடன் தொகைகள்
4. ஊழியர்களுக்கு 12 மாத சம்பளம்
5. இன்ஷ்யூர் செய்யப்படாத டெபாசிட்டுகள்
6. உத்தரவாதம் தரப்படாத கடன் தொகைகள்
7. அரசுக்குத் தர வேண்டியவை,
8. கடன்கள், நிலுவைகள்
9. பங்குதாரர்கள் (ஷேர் ஹோல்டர்கள்)
கவனிக்க வேண்டியது என்னவென்றால், இங்கேயும் டெபாசிட் இன்ஷ்யூரன்ஸ்க்கு உட்பட்ட தொகைக்கு மட்டுமே முதல் முன்னுரிமை. ஏற்கெனவே இதேபோன்ற டெபாசிட் இன்ஷ்யூரன்ஸ் இருக்கிறது. எனவே இதில் புதிதாக ஏதுமில்லை. இன்ஷ்யூரன்சின் கீழ் வராத டெபாசிட் தொகைக்கு இந்தச் சட்டத்தில் ஐந்தாவது இடம்தான்! 1961 முதல் இருந்து வருகிற டெபாசிட் இன்ஷ்யூரன்ஸ் திட்டத்தில் உள்ள 1 லட்சம் ரூபாய் என்ற வரம்பு இந்த மசோதாவால் நீக்கப்பட்டதா? ஒரு லட்சத்துக்கும் அதிகமாக ஒருவர் டெபாசிட் செய்திருந்தால் அந்தத் தொகை முழுவதும் கிடைக்க இது வழி செய்கிறதா?
இல்லை. முன்னர் என்ன இருந்ததோ அதுவேதான் இப்போதும் இருக்கிறது. ஆனால் சிறு வித்தியாசம் : முன்னர் ரிசர்வ் வங்கியின் கீழ் டெபாசிட் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம் இருந்தது. இப்போது அந்தப் பணியை எடுத்துக்கொள்ளும் தீர்வு வாரியம், வங்கிகளுக்கு “குறிப்பிட்ட வரம்புக்குள்” டெபாசிட் காப்பீடு வழங்கும். அதாவது, வங்கி மூழ்குமானால், டெபாசிட் செய்தவருக்கு “குறிப்பிட்ட” தொகை கிடைக்கும். முந்தைய சட்டத்தின்படி ஒரு லட்சம் என்பது உச்சவரம்பு. இந்தச் சட்ட மசோதாவில் “ஒரு லட்சம்” என்றும் குறிப்பிடப்படவில்லை, முழுத் தொகை என்றும் தரப்படவில்லை. “குறிப்பிட்ட தொகை” தரப்படும் என்றுதான் கூறப்பட்டுள்ளது. திருப்பித் தரப்படுகிற “ஒரு லட்சம்” அல்லது “குறிப்பிட்ட” தொகைக்கு மேலான டெபாசிட் தொகையை டெபாசிட் செய்தவருக்கு வங்கியின் பங்குகளாக மாற்றித்தரவும் சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. (நிதிச்சிக்கலுக்கு ஆளான வங்கியின் பங்கை வைத்துக்கொண்டு நாக்கு வழிப்பதா என்பது வேறு கதை.)
அதாவது, சமூக ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்த செய்திகள் சரிதான். இது சட்டமான பிறகு, ஒருவேளை வங்கி மூழ்குமானால், டெபாசிட் செய்தவர்களுக்கு முழுத் தொகையும் கிடைக்காது. ஒரு லட்சமாவது கிடைக்குமா அல்லது அதுவும் கிடைக்காமல் போகுமா என்பதும் தெரியாது!
முன்னர் இருந்த சட்டத்தைவிட இது மேம்பட்டது, முன்னர் ஒரு லட்சம்தான் வரம்பு இருந்தது, இப்போது அது உயர்த்தப்படும் என்று சிலர் பேசுகிறார்கள். உண்மையில், சமூக ஊடகங்களில் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்ட பிறகுதான் மைய நிதியமைச்சர் வாயைத் திறந்தார். இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில்தான் இருக்கிறது. இன்னும் நிறைய திருத்தங்கள் செய்யப்படும் என்று திருவாய் மலர்ந்தார். சமூக ஊடகங்களில் பிரச்சினை எழுப்பப்படாமல் போயிருந்தால் அப்படியே சட்ட மசோதாவாக முன்வைத்திருப்பார்கள் என்ற அச்சம் நியாயமானதே. நில கையகப்படுத்தல் மசோதாவை பல முறை அவசரச் சட்டமாக நிறைவேற்றிய அரசு இது என்பதை மறந்து விட முடியாது.
ஆக, இப்போதைக்கு அச்சப்படத் தேவையில்லை. வங்கியில் இருக்கும் உங்கள் பணத்துக்கு எந்த ஆபத்தும் இப்போதைக்கு இல்லை. ஆனால், நிலைக்குழுவின் பரிசீலனையில் இருக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்போது, அது சட்டவடிவம் கொள்ளும்போது, எதிர்க்கட்சிகள் கவனமாக இருக்க வேண்டும். அப்போதும் சமூக ஊடகங்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
வங்கிகளுக்கு என்ன சிக்கல் வந்து விடும்? அது எதற்கு மூழ்கும் என்ற கேள்வி வரக்கூடும். குஜராத்தில் ஒரு கூட்டுறவு வங்கியில் மிகப்பெரிய ஊழல் நடந்தது தவிர, இதுவரை இந்தியாவில் அப்படி ஏதும் நிகழவில்லை. (மாதவ்புரா வங்கி ஊழலில் சம்பந்தப்பட்டவரை விடுவிப்பதில் அமித் ஷா உள்பட பலருக்கும் பங்கு இருந்தது குறித்து ஏற்கெனவே பதிவு எழுதிவிட்டேன்) வங்கிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி எழுத வேண்டுமானால் வங்கிகளின் வாராக்கடன் குறித்தும் எழுத நினைத்திருந்தேன். கட்டுரை மிகவும் நீளமாகி விட்டதால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தொடுகிறேன்.
நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதி ஒரு கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் கூற்றுப்படி : 2013இன் கணக்குப்படி வாராக்கடன் 1,55,890 கோடி. 2017இல் 6,41,057. அதாவது, காங்கிரஸ்-யுபிஏ அரசின் காலத்தில் இருந்த தொகையைவிட மூன்று மடங்கு அதிகம். இந்தக் கணக்காண்டின் ஆறு மாதங்களில் மட்டும் வங்கிகள் ரைட்-ஆஃப் செய்த வாராக்கடன் தொகை 55,356 கோடி. படத்தைப் பார்த்து, எவருடைய ஆட்சியில் அதிகத் தொகை ரைட்-ஆஃப் செய்யப்பட்டது என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.
வாராக்கடன்களில் பெரும்பகுதி உங்களையும் என்னையும் போன்றவர்கள் வாங்கிய சில்லறைக்கடன்கள் அல்ல. அதானிகள், அம்பானிகள், சிங்கானியாக்கள், டாடாக்கள், ஜிண்டால்கள், எஸ்ஸார்கள் வகையறாக்கள் வாங்கி நாமம் போட்டவைதான்.
(ரைட்-ஆஃப் என்பது வாராக்கடன் தள்ளுபடி அல்ல, அது ஒரு டெக்னிகல் சொல்தான் என்று பாடம் எடுக்க யாரும் வர வேண்டாம்.)
================================================= பிற்குறிப்பு
ஏகாதிபத்தியத்தின் கீழ் வங்கிகள் ஆற்றும் புதிய பாத்திரம் குறித்து லெனின்:
``பணச்செலுத்தல்கள் நடந்தேறுகையில் இடைத்தரகராகச் செயல்படுவதே வங்கிகள் ஆற்றும் தலையாய,முதல் நிலையான பணி.இந்தப் பணியைச் செய்து இவை செயலற்ற மூலதனத்தைச் செயல் முனைப்புள்ள, அதாவது இலாபமளிக்கும் மூலதனமாக மாற்றுகின்றன;சகல பண வருமானங்களையும் அவை வசூலித்து அவற்றை முதலாளித்துவ வர்க்கத்தின் கையில் ஒப்படைக்கின்றன.``
லெனின்: ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்
1) மோடி ஆட்சி ஏகாதிபத்திய அழிவுக் காலனியாதிக்கத்துக்கு சேவகம் செய்யும் ஆட்சியாகும்.
2) இதன் உள்நாட்டு சமூகத்தூண்கள் தரகு முதலாளித்துவ பெரு நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள் ஆகும்.
3) அந்நிய நிதி மூலதனத்தினதும்,உள்நாட்டு பிற்போக்கு வர்க்கங்களதும் ஏகபோகத்தை உற்பத்தித் துறையில் நிலை நிறுத்த அது நடுத்தர மற்றும் சிறு குறு தொழில்களையும்-மூலதனத்தையும் ஒழித்து வருகின்றது.
4)கட்டுரையாளர் விபரிக்கும் இம்மசோதா இதன் ஒரு பகுதியே ஆகும்.
--------------------------------------------------------------------------------------------------------------- ENB