இஸ்ரேல், வங்கதேசம் போல் `தமிழ் ஈழத் தளம்` அமைய இந்தியா இலங்கையில் தலையிட வேண்டும்- வை.கோ
தினக்குரல் Digital News Team 2021-06-10
இலங்கையின் சீனச் சார்பு மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத் தீர்மானம்;
தமிழ் ஈழம் அமைய பொது வாக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு, வைகோ கடிதம்
உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற நாட்டை யூதர்கள் ஆக்கியது போல் வங்கதேசம் என்ற நாட்டை இந்தியா ஆக்கியது போல் தமிழ் ஈழம் என்ற நாட்டை அமைப்பதற்கு ஐ.நா. மன்றத்தின் மேற் பார்வையில் உலகம் முழுமையும் பல நாடுகளில் பரவி வாழ்கின்ற ஈழத்தமிழர்களிடம் பொது வாக்குப்பதிவு நடத்துவதற்கான முயற்சிகளை இந்திய ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தெற்கு ஆசியாவில், இந்தியப் பெருங்கடலில், இந்தியாவின் ஆளுமையை நிலைநிறுத்துவதற்கு, தமிழ் ஈழம் அமைந்தாக வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கின்றது.
அதற்கான சூழ்நிலைகளை, தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விழைகின்றேன்.
கடந்த காலங்களில், இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய நாடாக இலங்கை இருந்தது இல்லை. அண்டை நாடு என்கின்ற முறையில், இந்தியா இலங்கைக்குக் கூடுதல் முன்னுரிமை வழங்கினாலும் கூட, இக்கட்டான வேளைகளில், அவர்கள் இந்தியாவின் காலை வாரி விடுகின்றார்கள். தாங்கள் ஒரு சீனச் சார்பு நாடு என்பதை, அவர்கள் பலமுறை எடுத்துக் காட்டி இருக்கின்றார்கள்.
மகிந்த இராஜபக்சே, இலங்கைக் குடி அரசின் தலைவராகப் பொறுப்பு ஏற்பதற்கு, இந்தியா மறைமுக ஆதரவு அளித்தது. ஆட்சிப் பொறுப்பு ஏற்ற அவர், அம்பாந்தோட்டை துறைமுகத்தில், சீன நீர்மூழ்கிக் கப்பல் நுழைய ஒப்புதல் வழங்கினார். இந்தியப் பெருங்கடலில், முதன் முறையாக, சீன நீர்மூழ்கிக் கப்பல் நுழைந்தது. அவருக்கு அடுத்து ஆட்சிப் பொறுப்பு ஏற்ற மைத்திரிபால சிறிசேனா, மற்றொரு சீன நீர்மூழ்கிக் கப்பலை, அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய விட்டார். இலங்கைக்கு அளவுக்கு அதிகமான கடன் கொடுத்து, 99 ஆண்டுகள் குத்தகை என்ற பெயரில், அம்பாந்தோட்டை துறை முகத்தை சீனா கைப்பற்றி விட்டது.