Wednesday, 7 March 2012
சிறுமி லக்சினியின் கோரக்கொலை, EPDP இன் மற்றொரு கொடுமை!
வன்புணர்வின் பின் தலையைக் குத்திச் சிதைத்து நெடுந்தீவு சிறுமி லக்சினி கொடூரமாகக் கொலை; உடல்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிப்பு: ஈ.பி.டி.பி. முன்னாள் உறுப்பினர் கைது
நெடுந்தீவைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி ஜேசுதாசன் லக்சினி, கொடூரமாகப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கல்லால் குத்தி தலை சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்று நேற்று நடத்தப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலை தொடர்பான சந்தேகத்தில் ஒருவரை நேற்றுமுன்தினம் இரவே நெடுந்தீவு மக்கள் மடக்கிப் பிடித்துக் கடுமையாகத் தாக்கியவேளை, கடற்படையினரும் பொலிஸாரும் தலையிட்டு அந்த நபருக்கு உயிராபத்து ஏற்படாமல் காப்பாற்றியதுடன் அவரைக் கைது செய்தனர்.
கந்தசாமி ஜெகதீஸ்வரன் (வயது 31) என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஈ.பி.டி.பி. உறுப்பினர் என்று நெடுந்தீவு மக்கள் கூறுகின்றனர். ஆனால் வழக்கம்போல, சந்தேகநபர் தமது கட்சியின் முன்னாள் உறுப்பினர் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஊடகவியலாளர் நிமலராஜன் கொலையில் மூன்றாவது சந்தேகநபர் ஜெகதீஸ்வரன். ஈ.பி.டி.பி. கட்சியின் முன்னணித் தளபதியாக இருந்தவரான நெப்போலியனின் வலதுகரமாகச் செயற்பட்டவர் என்றும் நெடுந்தீவு வாழ் மக்கள் கூறினர்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் "பிஸ்ரல்'' துப்பாக்கியைக் காட்டி பெண் ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றார் என்று கடற்படையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் இவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர். இந்த முறைப்பாடு
தொடர்பில் ஒவ்வொரு வாரமும் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் இவருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.கடந்த இரு நாள்களுக்கு முன்னும் வேறு இரு சிறுமிகளை தனியிடத்துக்கு தவறான நோக்கத்துடன் அணுகினார் என்று இவர் மீது குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையிலேயே இவர் லக்சினியை மிருகத்தனமாக வன்புணர்வு செய்து கொடூரமாகக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தைக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை அங்கு கொண்டுசென்று விடுவதாகக் கூறித் தனது சைக்கிளில் ஏற்றிச் சென்றே இவர் இக் கொடூரத்தைப் புரிந்தார் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
விடயம் தெரிய வந்ததும் ஆத்திரமடைந்த நெடுந்தீவு மக்கள் நெடுந்தீவு பத்தாம் வட்டாரத்தில் உள்ள சந்தேகநபரின் வீட்டுக்குள் புகுந்து அவரை நையப்புடைத்தனர். தாக்கியபடியே கடற்கரை நோக்கி ஜெகதீஸ்வரனை அவர்கள் இழுத்துச்சென்ற போது இடைமறித்த கடற்படையினரும்
பொலிஸாரும் அவரைக் காப்பாற்றிக் கைது செய்தனர். (காணொளி)
"இல்லையேல் நாங்கள் அந்த .......யை அடித்தே கொன்றிருப்போம்'' என்றார் நெடுந்தீவு வாசி ஒருவர்.
சம்பவ இடத்துக்கு நேற்று அதிகாலையிலேயே சென்றுவிட்ட ஊர்காவற்றுறை நீதிவான் ஆர்.எஸ்.எம்.மகேந்திரராஜா சடலத்தைப் பார்வையிட்டு மரண விசாரணை நடத்தினார்.
உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் மரண விசாரணையைத் தொடர்ந்து சிறுமியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நெடுந்தீவு மயானத்தில் நேற்றைய தினமே சிறுமியின் உடல் புதைக்கப்பட்டது.
சந்தேகநபர் நேற்று மாலை நெடுந்தீவுப் பொலிஸாரால் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டார் என்று ஒரு தகவல் தெரிவித்தது.
யாழ் உதயன்
மேலதிக செய்திகள்
* நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தில் 12வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. நெடுந்தீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த லக்சனா இந்த மாணவி நேற்று காலையில் கடைக்கு சென்று வீடு திரும்பாத நிலையில் அவரை பெற்றோர் தேடிய போது கைவிடப்பட்ட வளவு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது சடலத்திற்கு அருகில் வெற்று சாராயப் போத்தல்கள் காணப்பட்டன. அத்துடன் இந்தச் சிறுமியின் உள்ளாடைகள் கிழித்தெறியப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் இந்த மாணவி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பபடுகிறது.நெடுந்தீவு சிறிலங்கா படையினரினதும், ஈ.பி.டி.பியினரதும் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்
============
* கொலை வழக்கின் சந்தேக நபரான 31 வயதான கந்தசாமி ஜேகதீஸ்வரன் (கிருபா) என்னும் நபரை நெடுந்தீவு காவல்துறையினர் நேற்று காலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். மேற்படி வழக்கினை விசாரணக்கு எடுத்துக்கொண்ட நெடுந்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆர்.வி.உதயகுமார் வழக்கினை விசாரணை நடத்திய பின்பு எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட் கிழமை வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)
How Trump’s tariffs could spark a trade war and ‘Europe’s worst economic nightmare’
How Trump’s tariffs could spark a trade war and ‘Europe’s worst economic nightmare’ European countries could be among those hardest hit if T...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...