தேசிய நெருக்கடி குறித்த பொது விவாதத்துக்கும், பொது வாக்கெடுப்புக்கும் போராடுவோம்!
போலித் தேர்தலைப் புறக்கணிப்போம்!!
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை பெறாமல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய அநுரா, நாடாளமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் அறிவித்தார்.
அத் தேர்தல் நாடளாவி நாளை(14-11-2024) நடை பெறவுள்ளது.
ஜனாதிபதி அநுராவின் குறுகிய ஆட்சி நாட்கள், வரவுள்ள ஆண்டுகளில் அரசாங்கத்தின் ஆட்சியின் போக்கை தெளிவாக அடையாளம் காட்டி நிற்கின்றன.
அநுரா ஆட்சி;
1) தனக்கு முந்திய IMF, அதானி ஆட்சியின் பிடிமானத்தை தகர்க்கவில்லை,ஏன் தளர்த்தக் கூடவில்லை.மேலும் அநுரா ஆட்சி பேசும் அ) ஏற்றுமதிப் பொருளாதாரம் ஆ) கல்விச் சீர்திருத்தம் இ) விவசாய சீர்திருத்தம் அனைத்தும் அந்நிய நிதி மூலதனத்துடனும், தொடர் காலனிய அடிமைத்தனத்துடனும், இந்திய விரிவாதிக்கத்துடனும் பின்னிப் பிணைந்த கொள்கைகளாகவே உள்ளன.எந்தச் சுத்தமும் செய்யப்படாத அதே பழைய 76 ஆண்டு கால அசுத்தங்களாகவே உள்ளன.
2) தேசியப் பிரச்சனையை அநுரா ஆட்சி முன்வைக்கும் முறை, `` தேசியப் பிரச்சனை என்று ஒரு பிரச்சனையே இல்லை`` என்கிற ஜே.ஆர்.கால நிலைப்பாடாகவே உள்ளது.கலவரங்களால் காயப்பட்ட வலியும், யுத்தம் எடுத்த பலியும், பயன் படுத்த இயலாத மொழியும், நூலக எரிப்பின் விளைவான பழியும்......என, கடந்தகால தமிழ் சிங்கள அரசியல் வாதிகள் உருவாக்கிய உதிரி உதிரியான சம்பவங்களின் கோர நினைவுகளால் பீடிக்கப்பட்ட ஒரு சமூகம் போல மிகவும் கருணை உணர்வுடன் தேசியப் பிரச்சனை சித்தரிக்கப்படுகின்றது.மேலும் மிகவும் பழக்கமான, பாசிச `நாம் இலங்கையர்` முழக்கம் முன்வைக்கப்படுகின்றது.
இவை இரண்டும் ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்கு எதிரானவை ஆகும். இலங்கை மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிப்பது ஆகும். எனவே இதிலிருந்து தன்னை ஒரு அரசு என்கிற முறையில் தற்காத்துக் கொள்ளும் கவசத்தை அநுரா ஆட்சி தேடிக் கொள்ள வேண்டும்.
3) அதன் பொருட்டு நாடாளமன்றத்தை ஏகபோகமாக்க முயலுகின்றது. இந்தியாவின் பாணியில் `நிலையான ஆட்சி`, கட்சியின் கொள்கைகளை நிறைவேற்ற காலம் தேவை, 2/3 பெரும்பான்மை மற்றும் எதிர்க்கட்சி இல்லாத பாராளமன்றம் என்றெல்லாம் பேசுகின்றது.
4) பயங்கரவாதச் சட்டத்தை நாடாளமன்றம் முடிவு செய்யும் என்கின்றது.
5) அரசியல் அமைப்புத் திருத்தம், ஜனதிபதி ஆட்சி முறை, பயங்கரவாதச் சட்டம் அனைத்தையும் `திருத்தப்` போகின்றது வரப்போகின்ற நாடாளமன்றம். இதற்காகத்தான் தேர்தல் நடத்துகின்றது.தர்க்க ரீதியாக இந்த திருத்தங்கள் ஒடுக்குமுறைக் கருவிகளின் அதிகார வலிமையைக் கூட்டுமே ஒழிய எவ்வகையிலும் குறைக்காது. ஏனெனில் அத்தகைய ஒரு அடக்குமுறை எந்திரம் இல்லாமல் IMF, அதானி ஆட்சியை கட்டிக் காக்க இயலாது.
6) மேலும் முக்கியமாக சர்வதேச முரண்பாடுகள் உலக மறுபங்கீட்டின் மூலம் தமது பிரச்சனைகளுக்கு தீர்வுகாண விளைகின்ற நெருக்கடி தீவிரமடைந்த நாட்களாக இன்றைய நாட்கள் உள்ளன.இந்த உலக மறுபங்கீட்டுச் சேவகத்துக்கும் அத்தகைய ஒரு அடக்குமுறை எந்திரம் அவசியத் தேவை ஆகும்.
இவையே அனுரா அரசு பயணிக்கத் தயாராக உள்ள பாதையாகும்.
ஒடுக்கும் தேசத்து மக்கள் எப்படி எகிறி வாக்களித்தாலும், ஒடுக்கப்படும் தேசத்து மக்கள் எப்படி சிதறி வாக்களித்தாலும் அநுரா அரசு பயணிக்கப் போகும் திசையை அது ஒரு போதும் மாற்றாது.
அனுரா ஜனாதிபதியானதும் ஜனாதிபதி ஆட்சி முறை சுத்தப்படுத்தப் பட்டுவிட்டது, இனி ``நாடாளமன்றத்தைச் சுத்தப்படுத்த திசை காட்டியால் நிரப்புவோம்`` என ஜே.வி.பி. தந்திரமாக முழங்குவது ஏக போக நாடாளமன்றமேயாகும். பாசிச சர்வாதிகார ஆட்சியே ஆகும்.
இந்நிலையில் எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை மீது உலக மறுபங்கீட்டு ஆதிக்கப் போட்டி ஆரம்பித்துவிட்ட சூழ்நிலையில், ஜனநாயக உரிமைகள் மக்களுக்கு அளப்பரிய முக்கியத்துவம் உடையவை ஆகும்.
1) இலங்கையை SOFA உடன்படிக்கைக்கு இணங்க வைக்க அமெரிக்கா தொடர்ந்து நிர்ப்பந்தித்து வருகின்றது.ரொனால்ட் ரம்பின் தேர்தல் வெற்றி இதை மேலும் தீவிரப்படுத்தும்.
2) இந்திய இலங்கை ஒப்பந்தம் அமூலில் உள்ளது. இலங்கை (ஈழ)க் கடலில் இந்தியர் மீன் பிடிப்பதை தடுக்கக் கூடாது என இந்தியா வலியுறுத்துகின்றது. ஒட்டுமொத்த இலங்கைக் கடல் பிராந்தியம் மற்றும் கடல் வளத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகின்றது.
3) IMF, FDI அந்நிய நிதிமூலதன கந்துவட்டி நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியுள்ளது.இது மேலும் தொடர்கின்றது.உபரி வெளியேறுகின்றது, தேசிய மூலதனம் திரள்வதில்லை.
4) இலங்கையில் தேசிய சமத்துவம் இல்லாமையானது அந்நியர் உட்புகுவதற்கு வழிகோலி வருகின்றது.
5) போர்க்கால 30 ஆண்டுகளைக் காட்டிலும், போர் ஓய்ந்த 15 ஆண்டுகளில் தான் நாடு ஒரு பெரும் `தேசிய நெருக்கடிக்குள்` சிக்குண்டுள்ளது.
இலங்கை எதிர் நோக்கும் முக்கிய பிரதான தீவிரமான பிரச்சனைகள் ஒரு தேசிய நெருக்கடியாக விஸ்வரூபம் எடுத்துள்ளன.இதற்கு நாட்டு மக்கள் பெரும் விலை கொடுத்துவருகின்றனர்.
இப்பிரச்சனைகள் குறித்த பிரக்ஞையை உருவாக்க நாடளாவிய விவாதமும் கருத்துக் கணிப்பும் தேவை.அத்தகைய மக்கள் பலம் இல்லாமல் எதிரிகளை எதிர்கொள்வது சாத்தியமல்ல.
இதை நாடாளமன்ற பெரும்பான்மை கொண்டு முடிவு செய்ய முடியாது.முடிவு செய்யக் கூடாது.இதற்கு இடைத் தரகர்கள் இல்லாத நாட்டு மக்களின் நேரடி அனுமதி தேவை.
எனவே,
தேசிய நெருக்கடி குறித்த பொது விவாதத்துக்கும், பொது வாக்கெடுப்புக்கும் போராடுவோம்.
போலித் தேர்தலைப் புறக்கணிப்போம்.
புதிய ஈழப் புரட்சியாளர்கள்-இலங்கை(ஈழம்) 13-11-2024