Monday 1 February 2010

தமிழீழ தனியரசுக்கு பிரித்தானியா வாழ் தமிழ் மக்களும் அமோக ஆதரவு: 99.33 வீத மக்கள் ஆதரவு தெரிவிப்பு
[ திங்கட்கிழ, 01 பெப்ரவரி 2010, 04:17.43 AM GMT +05:30 ]
நேற்றும்(31/01), நேற்று முன்நாளும்(30/01) பிரித்தானியா முழுவதும் நடைபெற்ற வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கமைவாக சுதந்திர தமிழீழத் தனியரசுக்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பின் முடிவுகள் நேற்று மாலை வெளியானது. இதில் 99.33 வீதமான பிரித்தானியா வாழ் தமிழ்மக்கள் தமது விருப்பத்தை தெரிவித்து புதியதோர் வரலாறு படைத்துள்ளனர்.

வாக்கெடுப்பில் 64,692 பேர் கலந்து கொண்டதுடன், 64,256 பேர் (99.33 வீதம்) ஆம் எனவும், 185 பேர் (0.29 வீதம்) இல்லை என்றும் வாக்களித்த அதேநேரம், 251 பேர் (0.38) தகுதியற்ற வாக்குகளையும் அளித்துள்ளனர்.

1976ஆம் ஆண்டு தமிழீழத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழீழத் தனியரசுக்கான ஆணையை மீண்டும் வலியுறுத்தும் வகையில் புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் மீண்டும் தமது வேணவாவை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் நடைபெற்ற வாக்கெடுப்பில் 18 அகவைக்கு மேற்பட்ட இளையோர் முதல் மூதாளர்வரை மிகுந்த உற்சாகத்துடனும், பலத்த எதிர்பார்ப்புடனும் வாக்களித்திருந்தனர்.

சனிக்கிழமை லண்டனிலும், லண்டனிற்கு வெளியே கிளாஸ்கோவில் (Glasgow) இருந்து சவுத்தம்ரன் (Southampton) வரையும் வாக்களிப்பு இடம்பெற்றிருந்த நிலையில், எம்-25 நெடுஞ்சாலைக்கு உட்பட்ட லண்டன் பகுதியில் வாழும் தமிழ் மக்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது நாளாகவும் வாக்களித்திருந்தனர்.

இதனையடுத்து லண்டனின் மத்தியிலுள்ள கிறீன் பார்க்கில் அமைந்துள்ள செறரன் - பார்க் லேன் விடுதியில் நடைபெற்ற முடிவு அறிவிக்கும் நிகழ்வில் பிரித்தானிய ஈழத்தமிழ் மக்களின் அபிலாசை வெளியிடப்பட்டது. இரவு 10:30 மணியளவில் அக வணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வில், பொதுச்சுடரை பேராசிரியர் தீரன் ஏற்றி வைக்க, இளையோரான ராஜி நேசராஜா வாக்கெடுப்பின் பின்னணி பற்றி எடுத்துக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பறி காட்னர் (Barry Gardner), நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா (Shiobhain McDonagah), பேராசிரியர் தீரன் (Prof.Theeran), ஹுகோ சால்ரன் (Hugo Chalton), மொறீசியசைச் சேர்ந்த ராஜ் புத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் றையன் (Joan Ryan), நாடாளுமன்ற உறுப்பினர் அன்றூ பெலிங் (Andrew Pelling), நாடாளுமன்ற வேட்பாளர் அன்றூ சரலம்பஸ் (Andrew Charalambous) ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு கண்காணிப்புக் குழுவின் தலைமைப் பொறுப்பை வகித்த பேராசியர் பிறையன் வுட்றிப் (Bryan Woodriff), மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றிய மைக் கிறிபின் (Mc Griffin) ஆகியோர் தேர்தல் முடிவுகளை மக்களின் அமோக கரவொலியின் மத்தியில் அறிவித்தனர்.

இதனையடுத்து கருத்துக் கணிப்பு ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் தமிழ்த் தேசிய சபையின் சிறீரஞ்சன், ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஜனனி ஜனநாயகம், பிரித்தானிய இளையோர் அமைப்பைச் சேர்ந்த ராஜ் செல்வா ஆகியோர் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு பற்றி உரையாற்றினர்.

தமிழீழத் தனியரசே தமிழ் மக்களிற்கான தீர்வு என 1976ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட “வட்டுக்கோட்டை தீர்மானத்தை” அடிப்படையாக வைத்தே 1977ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது ஆணையை வழங்கியிருந்தனர்.

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் தமிழீழத் தனியரசுக்கான வேணவாவை பன்னாட்டு சமூகத்திற்கு மீண்டும் வெளிப்படுத்தும் வகையில் இந்த “வட்டுக்கோட்டை தீர்மானத்தை” அடிப்படையாக வைத்து வாக்களித்துள்ளனர்.

ஏற்கனவே நோர்வே, பிரான்ஸ், கனடா, யேர்மனி, சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளில் இவ்வாறான வாக்களிப்பு இடம்பெற்றிருப்பதுடன், தமிழீழத் தனியரசுக்கான தமது விருப்பை புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழ் மக்கள் மீண்டும் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...