SHARE

Thursday, January 26, 2012

களுத்துறை மாவட்டத் தமிழ்ப் பாடசாலைகளின் நிலைமை


கவனம் செலுத்தப்பட வேண்டிய களுத்துறை மாவட்ட தமிழ்க் கல்வி


Thursday, 26 January 2012 06:06 Hits: 30

களுத்துறை மாவட்டத் தமிழ்ப் பாடசாலைகளின் நிலைமை, அப்பாடசாலைகளில் கற்கும் மாணவ, மாணவியர் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், அவற்றைத் தீர்த்து வைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய செயல் முறைகள் தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டிய கட்டாய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. எவராலும் உரிய முறையில் கண்டுகொள்ளப்படாத நிலைமையே களுத்துறை மாவட்ட தமிழ்ப் பாடசாலைகள் தொடர்பில் நிலவுகின்றது.

களுத்துறை மாவட்டம் மேல் மாகாணத்திற்குற்பட்டதும், அங்குள்ள சகல தமிழ்ப் பாடசாலைகளும் மேல் மாகாண கல்வி அமைச்சின் நிர்வாகத்திற்குட்பட்டதாகவேயுள்ளன. இம் மாவட்டத்தில் தமிழ்ப் பாடசாலைகள் முப்பத்தெட்டும் இருமொழிப் பாடசாலைகள் அதாவது சிங்களம், தமிழ் ஆகிய இருமொழிகளில் கற்பித்தல் இடம்பெறுவதான பாடசாலைகள் இரண்டும், முஸ்லிம் பாடசாலைகள் இருபத்தொன்றும் உள்ளன.

களுத்துறை, மத்துகம, ஹொரணை ஆகிய மூன்று கல்வி வலயங்களுக்குள் இப் பாடசாலைகள் அடங்குகின்றன. தமிழ்ப் பாடசாலைகளைப் பொறுத்தவரை சகல பாடசாலைகளும் தோட்டப் பகுதிப் பாடசாலைகளாகவே உள்ளன. கல்வி நிலையில் முன்னேற்றம் கண்டுள்ள மாவட்டமாகத் தேசிய ரீதியில் இம்மாவட்டம் முதன்மைப்படுத்தப்பட்டுள்ள போதும் தமிழர் கல்வியைப் பொறுத்தவரை மிகவும் பின்தங்கிய நிலையே காணப்படுகிறது. கவனிப்பாரற்ற நிலையில் பிற்படுத்தப்பட்ட கல்வி நிலைகொண்ட தோட்டப் பாடசாலைகள் என்ற நிலையிலிருந்து மீட்சி பெறாத நிலையே தற்போதைய யதார்த்த நிலையாகவுள்ளது.

களுத்துறை கல்வி வலயத்தில் ஆறு தமிழ்ப் பாடசாலைகளும் பதினேழு முஸ்லிம் பாடசாலைகளும் செயற்படுகின்றன. அதேபோல் மத்துகம கல்வி வலயத்தில் பதினாறு தமிழ்ப் பாடசாலைகளும் இருமொழிப் பாடசாலைகள் இரண்டும் முஸ்லிம் பாடசாலைகள் இரண்டுமாக இருபது தமிழ் மொழி மூலப் போதனை வழங்கும் பாடசாலைகள் உள்ளன.

ஹொரணை கல்வி வலயத்தைப் பொறுத்தவரை பதினாறு தமிழ்ப் பாடசாலைகளும் இரண்டு முஸ்லிம் பாடசாலைகளும் உள்ளன.

கல்விக் கொள்கையடிப்படையில் பாடசாலைகள் நான்கு தரங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ன. கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர வகுப்புகளில் கணிதம், கலை, விஞ்ஞானம், வர்த்தகம் ஆகிய நான்கு பிரிவுகளும் கொண்ட பாடசாலைகள் முதற்தரப்பாடசாலைகளாக அதாவது 1 ஏ.பி. (1அஆ) தரத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டத்தில் மேற்படிதரத்தில் ஒரு தமிழ்ப் பாடசாலையும் இல்லை. தமிழ் மொழி மூலமும் போதனை நடைபெறும் இருமொழிப் பாடசாலைகள் இரண்டும் 1 ஏ.பி. தரத்தைக் கொண்டவையாக இருந்த போதிலும் அவற்றில் குறிப்பிட்ட பாட நெறிகள் தமிழில் கற்பிக்கப்படுவதில்லை. இரு மொழிப் பாடசாலைகளின் இரண்டில் ஒரு பாடசாலையில், கலை, வர்த்தகப் பிரிவுகள் மட்டுமேயுள்ள போதும் மற்றைய பாடசாலையில் உயர்தர வகுப்புகள் தமிழ் மூலம் நடைபெறுவதில்லை.

கலை, வர்த்தகப் பிரிவுகளை மட்டும் உயர்தர வகுப்பில் கொண்ட ஒரு பாடசாலை மட்டுமே உள்ளது. மத்துகம கல்வி வலயத்திற்குட்பட்ட சென்.மேரீஸ் கல்லூரி அதாவது இருமொழிப் பாடசாலை கலை, வர்த்தகப் பிரிவு கொண்டதாக இருப்பதுடன் ஹொரணை கல்வி வலயத்திலுள்ள மில்லகந்த தமிழ் மகாவித்தியாலயமும் அதே தரத்தைக் கொண்ட மாவட்டத்தின் ஒரே தமிழ்ப் பாடசாலையாயுள்ளது. இப்பாடசாலை பாடசாலைத் தரப்படுத்தலின் கீழ் 1 சீ (1இ) தரத்திலடங்குகின்றது.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணதர வகுப்புகள் வரை கொண்ட பாடசாலைகள் டீ.2 (கூ.2) தர வரிசையிலும் ஆரம்பப் பாடசாலைகள் டீ.3 (கூ.3) தர வரிசையிலும் அடங்குகின்றன.

களுத்துறை கல்வி வலயத்தினுள்ள தமிழ்ப் பாடசாலைகள் ஆறில் மூன்று தரம் டீ.2. பாடசாலைகளாகவும் ஏனைய மூன்று டீ.3 தரங் கொண்ட ஆரம்பப் பாடசாலைகளாகவும் உள்ளன. மத்துகம கல்வி வலயத்திலுள்ள பதினாறு தமிழ்ப் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகள் கொண்ட ஒரு தமிழ்ப் பாடசாலையும் இல்லை. இக் கல்வி வலயத்திலுள்ள பதினாறு தமிழ்ப் பாடசாலைகளில் பதின் மூன்று பாடசாலைகள் ஆரம்பப் பாடசாலைகளாகச் செயற்படுவதுடன் ஏனைய மூன்று பாடசாலைகளில் மட்டும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண வகுப்புகள் வரை நடைபெறுகின்றன.

ஹொரணை கல்வி வலயத்திலுள்ள பதினாறு தமிழ்ப் பாடசாலைகளில் மில்லகந்த தமிழ் மகாவித்தியாலயம் மட்டுமே உயர்தர வகுப்புகளில் கலை, வர்த்தக பாடங்கள் கற்பிக்கப்படும் பாடசாலையாகவுள்ளது. ஏனைய பதினைந்து பாடசாலைகளில் பதினொரு பாடசாலைகள் ஆரம்பப் பாடசாலைகளாக இயங்குவதுடன் ஏனைய நான்கு பாடசாலைகளில் மட்டும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர வகுப்புகள் வரை கற்பித்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து இம்மாவட்டத்திலுள்ள முப்பத்தெட்டு தமிழ்ப் பாடசாலைகளில் இருபத்தாறு பாடசாலைகள் ஆரம்பப் பாடசாலைகளாக இருப்பது வெளிப்படுகின்றது. ஏனைய பாடசாலைகள் பன்னிரெண்டில் பதினொரு பாடசாலைகள் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர வகுப்புகள் கொண்டவையாகவும் ஒரு பாடசாலை மட்டும் உயர் தரவகுப்பில் கலை, வர்த்தகப் பிரிவுகள் கொண்டதாகவும் உள்ளன. உயர்தர வகுப்பில் கணித, விஞ்ஞானப் பிரிவுகள் கொண்ட ஒரு தமிழ்ப் பாடசாலை கூட இம் மாவட்டத்தில் இல்லை. களுத்துறை மாவட்டத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் எண்ணாயிரம் வரையான மாணவ, மாணவியர் கற்கும் அதேவேளை இரண்டாயிரம் வரையான தமிழ், மாணவ, மாணவியர் முஸ்லிம் பாடசாலைகளில் கற்பதும் கணிப்பீட்டின் மூலம் வெளிப்படுகின்றது. மேலும் கணிசமான எண்ணிக்கையான தமிழ்ப் பிள்ளைகள் சிங்கள மொழிப் பாடசாலைகளில் கற்பதும் குறிப்பிடக்கூடிய அளவினரான தமிழ்ப் பிள்ளைகள் பாடசாலைக் கல்வியை முற்றாகவே நாடாதிருப்பதும் இடை நடுவில் கல்வியைக் கைவிடுவதும் தெரிய வந்துள்ளது. இவ்வாறான நிலையில் களுத்துறை மாவட்ட தமிழர் கல்வியை மேம்படுத்த, உயர்த்த வழிவகை காணப்படுவது அவசியமாகின்றது. நாட்டின் தேசியக் கல்விக் கொள்கைக் கிணங்க உரிய, உயரிய கல்வியைப் பெற்றுக்கொள்ளும் அடிப்படை உரிமை களுத்துறை மாவட்ட தமிழ்ப் பிள்ளைகளுக்கும் உண்டு. இருந்த போதிலும் அவர்களது அடிப்படைக் கல்வி தொடர்பாக எவரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

அரசியல் ரீதியாக முற்றாகவே பலமிழந்துள்ள களுத்துறை மாவட்ட தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய எந்தவொரு பயனையும் அனுபவிக்க முடியாதுள்ளனர் என்பதே உண்மை நிலை. பல அரசியல் கட்சிகள் தமது தொழிற்சங்கங்கள் மூலம சந்தா திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனவேயன்றி அடிப்படைத் தேவையான கல்விக்குக் குரல் கொடுப்பதைக் காண முடியவில்லை. தொழிலாளர்களைத் திரட்டிச் சந்தா வசூலிப்பது மட்டுமன்றி அவர்களது அடிப்படைத் தேவைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற் சங்கங்களுக்குண்டு. இதை, அதாவது அரசியல் ரீதியாக அனாதரவாகவுள்ள களுத்துறை மாவட்ட தோட்டத் தொழிலாளர் மத்தியிலே இயங்கும் தொழிற்சங்கங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது அவர்களது கடமையும் கூட.

களுத்துறை மாவட்ட தமிழ்ப் பாடசாலைகளைக் கணிக்கும் போது களுத்துறை கல்வி வலயத்திலுள்ள குளோடன் தமிழ் வித்தியாலயமும் மத்துகம கல்வி வலயத்திலுள்ள கலை மகள் தமிழ் வித்தியாலயமும் ஹொரணை கல்வி வலயத்திலுள்ள றைகம் கீழ்ப்பிரிவு தமிழ் வித்தியாலயமும் ஹல்வத்துர தமிழ் வித்தியாலயமும் 1சீ தரப் பாடசாலைகளாக அதாவத உயர்தர வகுப்பில் கலை, வர்த்தகப் பாடங்கள் கொண்ட பாடசாலைகளாகத் தரமுயர்த்தப்பட வேண்டியதுடன் மேற்படி பாடசாலைகளில் ஒன்றான குளோடன் தமிழ் வித்தியாலயம் உயர்தர வகுப்புகளில் கலை, வர்த்தகப் பிரிவுகள் மட்டுமல்லாது கணித, விஞ்ஞானப் பிரிவுகள் கொண்ட பாடசாலையாகவும் தரமுயர்த்தப்பட வேண்டும்.

குளோடன் தமிழ் வித்தியாலயத்திலுள்ள ஆசிரியர் விடுதி, கட்டிட வசதி, இட வசதிகளைக் கருத்திற்கொண்டு மாணவ விடுதியுடன் கூடிய தரமான பாடசாலையாக இப்பாடசாலையை உருவாக்க முடியும். இது தொடர்பில் கல்வித்துறையினர் கவனம் செலுத்த வேண்டும். இது காலத்தின் தேவையாகவும் உள்ளது. மில்லகந்த தமிழ் வித்தியாலயமும் கணித, விஞ்ஞானத் துறைகள் கொண்ட உயர்தரப் பாடசாலையாக மாற்றக் கூடிய வாய்ப்புள்ளது. ஏற்கனவே, கலை, வர்த்தகப் பிரிவுகள் கொண்ட மேற்படி பாடசாலையில் கணித, விஞ்ஞானப் பிரிவுகள் ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொண்டால் தமிழ் மாணவ, மாணவியர் பெரும் பயன் அடைவர்.

இரு மொழிப் பாடசாலையாக செயற்படும் மத்துகம சென்.மேரிஸ் கல்லூரியின் தமிழ்ப் பிரிவில் அறுநூறுக்கும் அதிகமான மாணவ, மாணவியர் கற்கின்றபோதும் இட வசதி இன்மை பெரும் பிரச்சினையாகவுள்ளது. மேற்படி தமிழ்ப் பிரிவைத் தனிப்பாடசாலையாக இயக்க அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் காலத்தில் பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருந்த போதிலும் தமிழ் மாணவர்களுக்கென்று அதே பாடசாலை வளவில் தனிக்கட்டிடம் நிறுவப்பட்ட போதும் பல வகுப்பறைகள் சிங்கள மொழி மூலமாணவர்களுக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது. மத்துகம சென்.மேரிஸ் தமிழ்ப் பிரிவு தனிப் பாடசாலையாகச் சொந்தக் கட்டிடத்தில் இயங்கச் செய்ய கல்வித்துறையினர் செயற்படுவார்களேயானால் அது தமிழ் மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்குப் பெரும் உதவியாயமையும்.

பொதுவாகவே களுத்துறை மாவட்டத் தமிழ்ப் பாடசாலைகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமை தெரிய வந்துள்ளது. தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கான வளங்கள் தமிழ்ப் பாடசாலைகளுக்கு உரியபடி கிடைக்காமல் திசை திருப்பப்படுவதாகப் பல்லாண்டுகளாகக் குறை கூறப்பட்டு வந்தாலும் அதைச் சீர் செய்ய எவருமே முன்வந்ததாகத் தெரியவில்லை.

ஆரம்பப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், கணிதம், விஞ்ஞானம், தமிழ், இந்து சமயம், வரலாறு, புவியியல், ஆங்கிலம், அழகியற்பாடங்கள், தொழில்நுட்பங்கள் என்று சகல துறைப்பாடங்களுக்குமான ஆசிரிய வெற்றிடங்கள் தமிழ்ப் பாடசாலைகளில் நிலவுகின்றன. அத்துடன் உயர்தர வகுப்புகள் நடைபெறும் இரு பாடசாலைகளிலும் அவ் வகுப்புகளில் படித்துப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவ, மாணவியர் கற்கும் பாடங்களுக்குத் தகைமை வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை. அதனால், மாணவ, மாணவியர் உரிய பாடங்களை உரியபடி கற்க முடியாது திண்டாடுகின்றனர். தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கான ஆசிரிய வளங்கள் உரியபடி பகிரப்படாமையே இதற்கான ஏதுவாயுள்ளது.

பாடசாலை அதிபர்களாகத் தமிழ்ப் பாடசாலைகளில் வேற்று சமூகத்தவர்கள் பலர் செயற்படுவதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியில் போதிய பரிச்சயம் அற்றவர்களால் எவ்வாறு தமிழ்ப் பாடசாலைகளை நிர்வகிக்க முடியும் என்பது புதிராகவுள்ளது. புரிந்துகொள்ளப்படாமலுமுள்ளது.

களுத்துறை மாவட்ட தமிழ்க் கல்வியின், தமிழர் கல்வியின் பின்னடைவுக்கான காரணங்கள் உரிய முறையில் சரியாக ஆராயப்பட்டு தீர்வுகள் எட்டப்பட வேண்டும். இது ஒரு சமூகப் பிரச்சினை என்பது மட்டுமல்ல தேசியப் பிரச்சினை என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். கல்வித் தரத்தில் முன்னிலை வகிக்கும் ஒரு மாவட்டமாகக் கொள்ளப்படும் மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தின் தமிழர் கல்வியின் அடிப்படைத் தேவைகள் உரியபடி வழங்கப்பட்டு அவர்களின் உரிமையான கல்வியைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்ய கல்விப் புலத்தில் அக்கறை கொண்டோர் தயங்காது, தவறாது முன்வர வேண்டும். இதுவே, தமிழர் சமூகத்தின் ஒரு அங்கமான களுத்துறை மாவட்ட தமிழ் மக்களுக்குச் செய்யும் சேவையாகும்.

நன்றி: தினக்குரல்

India, Sri Lanka head to a win-win relationship

India, Sri Lanka head to a win-win relationship 《  Asian Age 17 Dec 2024  》 All the signs are pointing to the possibility of a major win for...