`` ராணுவமயமாக்கத்தின் மூலமாகப் பெரும்பான்மை மக்களை அங்கு குடியேற்றி, அதன் மூலம் தமிழ் மக்களின் அடையாளத்தை அழித்து, ஒரே இனம், ஒரே மதம், ஒரே சமூகம் என்ற சூழலை உருவாக்கி, அதன் மூலமாக எம் சுயாட்சி கோரிக்கையை முற்றிலுமாகத் துடைத்து எறிவதே அரசின் உள்நோக்கம்.`` இரா. சம்பந்தன்
===============================================================
`` இராஜவரோதயம் சம்பந்தன். இலங்கைத் தமிழர்களின் அரசியல் குரல். வடக்கு மாகாணத்தை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். போருக்குப் பின் இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் சர்வதேசம் எடுத்துக்கொண்டிருக்கும் அக்கறைக்கு முக்கியக் காரணம், எண்பதைத் தொடும் நிலையிலும் அசராமல் ஓடிக்கொண்டிருக்கும் சம்பந்தனின் முயற்சிகள். ஒருபுறம் தமிழர்களிடம் சாத்வீகத்தையும் சிங்களர்களிடம் நல்லிணக்கத்தையும் போதித்துக்கொண்டே மறுபுறம் பேரினவாத இலங்கை அரசுக்கு எதிரான தம்முடைய அறப் போராட்டங்களை எல்லைகள் தாண்டி எடுத்துச் செல்கிறார் சம்பந்தன்.``
தி இந்து (சமஸ்)
போருக்குப் பிந்தைய ஐந்தாண்டுகள், கால் நூற்றாண்டுக்குப் பின் நடந்த தேர்தல்… இலங்கையில் தமிழர்கள் நிலைமை எப்படி இருக்கிறது?
தமிழர்கள் ஒவ்வொரு வீட்டிலும் இழப்பை ஏற்படுத்திய போர் இது. எம் மக்கள் தம் வாழிடங்களை, வாழ்வாதாரங்களை, சொந்தங்களை எல்லாவற்றையுமே இழந்தார்கள். யுத்தம் முடிந்தாலும் அது ஏற்படுத்திய பாரிய பாதிப்பிலிருந்து இன்னமும் அவர்கள் வெளிவரவில்லை. அவர்கள் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் இலங்கை அரசினால் இன்னமும் முன்னெடுக்கப் படவில்லை; அரசு சார்பில் அப்படி உதவிகள் என்று செய்யப்பட்டவை மிகவும் அற்ப சொற்பமானவை.
உள்ளபடி, இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் ஆக்கபூர்வமான சில உதவிகள்தான் மக்கள் தலையெடுக்க ஓரளவேனும் உதவுகின்றது. ஒருபுறம் மக்களின் மறுவாழ்வைக் கட்டி எழுப்புவதில் இப்படி அலட்சியம் செய்யும் அரசு, மறுபுறம் போருக்குப் பின் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையிலும்கூட ராணுவ ஆதிக்கத்தை வலுப்படுத்திக்கொண்டே செல்கின்றது. ஏறத்தாழ ஒன்றரை லட்சம் படைப்பிரிவினர் - அதாவது, தமிழர் பகுதியில் நான்கு அல்லது ஐந்து பேருக்கு ஒரு ராணுவ வீரர் என்ற வீதத்திலே - அங்கே ராணுவத்தினர் நிற்கின்றார்கள்.
ராணுவம் எல்லாக் கருமங்களிலும் ஈடுபடுகின்றது. ராணுவம் விவசாயம் செய்கின்றது; வியாபாரம் செய்கின்றது; பலவிதமான போர்வைகளில், எம் காணிகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றது. எவ்வளவோ நெருக்கடிகளுக்கும் சங்கடங்களுக்கும் இடையிலேதான் எம் மக்கள் இருக்கின்றார்கள். சுய மரியாதையுடனும் கௌரவத்துடனும் எம் மக்கள் வாழ்கின்றார்கள் என்று சொல்லும் நிலை இல்லை. இந்த நிலை மாறவேணும்; மாறாவிட்டால், நல்லிணக்கம் ஒருபோதும் உருவாகாது.
இப்படிப்பட்ட சூழலில் உங்கள் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?
ஒரு நியாயமான நிரந்தரமான தீர்வு - ஒருமித்த ஒரு நாட்டுக்குள் சுயாட்சிக்கு இணையான அதிகாரங்கள், உரிமைகளுடன் எம் மக்களும் சரிசமமாக வாழும் நிலை - ஏற்பட வேண்டும். அதுதான் எம் இலக்கு. அவ்விதமான தீர்வு ஏற்படும்வரை தற்காலிகமாக மக்களுக்குத் தேவையான பணிகளை, விமோசனங்களை மாகாண அரசு மூலமாக ஆற்ற வேண்டியது எமது கடமை என்று கருதுகின்றோம். அந்த நோக்கிலேயே மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றோம்.
ஆனால், மாகாண சபை அவ்விதமாகச் செயல்பட எந்தவிதமான வசதிகளும் இலங்கை அரசினால் செய்யப்படவில்லை. தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும்கூட முதல்வரும் ஏனையோரும் எவ்வளவோ முயற்சிகளை எடுத்தும்கூட இலங்கை அரசு செவிசாய்க்கவில்லை.
தமிழர் பகுதியில் மாகாண அரசை வெற்றிகரமாகச் செயல்பட அனுமதிப்பது என்பது, ஒருவகையில் அரசாங்கத்துக்கே நல்லது - ‘நாங்கள் தமிழர்களைச் சமமாகப் பாவிக்கிறோம்’ என்று சர்வதேசத்திடம் பிரச்சாரம் செய்யலாம் - அல்லவா? அதையும் தாண்டி மாகாண சபையை அரசு முடக்குவதன் உள்நோக்கம் என்ன?
ராணுவமயமாக்கத்தின் மூலமாகப் பெரும்பான்மை மக்களை அங்கு குடியேற்றி, அதன் மூலம் தமிழ் மக்களின் அடையாளத்தை அழித்து, ஒரே இனம், ஒரே மதம், ஒரே சமூகம் என்ற சூழலை உருவாக்கி, அதன் மூலமாக எம் சுயாட்சி கோரிக்கையை முற்றிலுமாகத் துடைத்து எறிவதே அரசின் உள்நோக்கம்.
தேர்தலின்போது, “மத்திய அரசிடம் பேசி ராணுவத்தின் ஆதிக்கத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்போம்; காணி, காவல் உரிமைகளை மாகாண அரசின் கீழ் கொண்டுவருவோம்” என்று மக்களிடம் கூறினீர்கள். இப்போது நீங்கள் சொல்வதை எல்லாம்பார்த்தால், மக்களுக்கு அடிப்படை வசதிகளை உருவாக்கிக்கொடுக்கும் அதிகாரம்கூட உங்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்று தோன்றுகிறது. இப்படியே போனால் என்ன செய்யப்போகிறீர்கள்?
நாங்கள் மிகவும் பொறுமையைக் கடைப்பிடிக்கின்றோம். நிதானமாகவே செயல்படுகின்றோம். மீண்டும் வன்முறை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. வன்முறையின் மூலமாக ஒரு தீர்வை ஏற்படுத்தலாம் என்பதை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம். எமது மக்களும் வன்முறையை முற்றாக நிராகரிக்கின்றார்கள். ஆனால், மக்கள் எதிர்பார்க்கும் ஒரு தீர்வு ஏற்படுவது முக்கியம்.
இலங்கைத் தமிழர்களின் நீண்ட போராட்டத்துக்கு நீங்களும் ஒரு சாட்சியம் என்ற வகையில் சொல்லுங்கள்… கடந்து வந்த பாதையில் தமிழர்கள் தரப்பில் தவறவிட்ட வாய்ப்புகள், வீணடித்த வாய்ப்புகள் என்று இன்றைக்கு நீங்கள் எதையெல்லாம் குறிப்பிடுவீர்கள்?
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாங்கள் செயல்பட முன்வந்திருந்தால், அதற்கு முழுமையான ஒத்துழைப்பை நல்கியிருந்தால், ஒரு தீர்வு கிடைத்திருக்கும். அம்மையார் சந்திரிக்கா பண்டாரநாயகாவின் ஆட்சியின் ஆரம்பக் காலத்தில் தமிழ் மக்கள் பிரச்சினையில் மிக ஆக்கபூர்வமான, முற்போக்கான செயல்பாடுகளை அவர் முன்னெடுத்தார். அந்தக் காலகட்டத்தையும் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
அந்த இரு சந்தர்ப்பங்களும் வீணடிக்கப்பட்டதில் பிரபாகரனுக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்போது இது தொடர்பாக பிரபாகரனுடன் நீங்கள் பேசியது உண்டா?
இல்லை. அந்தச் சந்தர்ப்பங்களில் பிரபாகரனை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில்லை. என்றாலும், என் கருத்துகளைப் பரிமாறியிருக்கிறேன். பின்னர், அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்த காலகட்டத்திலும் இது தொடர்பான ஆலோசனைகளைத் தெரிவித்திருக்கிறேன். அந்த ஆலோசனைகளை அவர் உதாசீனப்படுத்தினார் என்று கூற முடியாது. ஆனால், அதன்படி அவர் நடந்துகொள்ளவில்லை.
உண்மையில், பிரபாகரனுடைய அரசியல் திட்டம் என்னவாக இருந்தது? உங்களுக்குப் பிடிபட்டதா? அவருடன் உறவில் இருந்தபோது நீங்கள் இதுபற்றி எல்லாம் பேசியது உண்டா? ஆக்கபூர்வமாக அவர் எதிர்வினையாற்றியது உண்டா?
நாங்கள் நிறையக் கதைத்திருக்கிறோம். எங்களுக்குள் ஒருபோதும் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதாகச் சொல்ல மாட்டேன். அவருடைய அரசியல் திட்டம்பற்றி எனக்குத் தெளிவு கிடையாது. ஆனால், எப்போதும் நான் ஒரு விஷயத்தைக் குறிப்பிடுவது உண்டு. ‘புலிகளின் ராணுவ பலத்தை எல்லோரும் மதிக்கிறார்கள். ஆனால், அந்த ராணுவ பலமானது நம் மக்களின் அரசியல் பலமாக மாற வேண்டும். இல்லாத சூழலில், அந்த ராணுவ பலம், அதற்காகக் கொடுக்கப்பட்ட விலை, தியாகங்கள் யாவும் பெறுமதியற்றுப் போய்விடும்’ என்று சொல்வேன். துரதிர்ஷ்டவசமாக அந்த ஆலோசனை ஏற்கப்படவில்லை.
அடிப்படையில் நீங்கள் ஒரு ஜனநாயகவாதி. பிரபாகரன் போன்ற ஒரு யதேச்சாதிகாரியுடன் எந்த அடிப்படையில் இணைந்து பணியாற்றினீர்கள்?
எங்கள் முழுமையான நோக்கம் மக்கள் நலன். ஒரு முழுமையான தீர்வை அடைய வேண்டும் என்றால், எம் மக்களின் பெயரால் நடத்தப்படும் ஒரு போராட்டத்தில் ஒருமித்துச் செயல்பட வேண்டும் என்று நினைத்தோம். இதுதான் அடிப்படை. அதேசமயம், ஒருபோதும் வன்முறையில் நாங்கள் பங்காளிகளாக இல்லை; ஜனநாயகபூர்வமாகவே செயல்பட்டோம்.
சர்வதேச சமூகம், இந்தியா, இலங்கை, விடுதலைப் புலிகள் என இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் இது தொடர்பான உரையாடலை முன்னெடுக்கப் பாலமாக இருந்தோம். எப்படியும் எம் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று எண்ணியே செயல்பட்டோம். அதுதான் எங்கள் கடமை. அந்தக் கடமையிலிருந்து நாங்கள் தப்பித்துக்கொள்ள முடியாது.
புலிகளின் மிகப் பெரிய தவறுகளாக எவற்றைக் கருதுகிறீர்கள்?
மனித உரிமைகளை அவர்கள் மதித்திருக்க வேண்டும். ஜனநாயகத்தை மதித்திருக்க வேண்டும். இந்தக் குறைகளே சர்வதேச அளவில் அவர்களுடைய பின்னடைவுக்குப் பெரும் காரணமாக அமைந்தன.
ஒருகாலத்தில் தனித் தமீழழம் அனைத்துத் தரப்புத் தமிழர்களின் முழக்கமாகவும் இருந்தது. இப்போது அது சாத்தியமில்லை என்று தெரிந்துவிட்ட நிலையில், இனி தமிழ்ச் சமூகத்தின் முழக்கமாக எது இருக்க வேண்டும்? குறிப்பாக, இந்தியத் தமிழரும் புலம்பெயர் தமிழரும் இலங்கை தமிழருக்கு என்ன செய்ய வேண்டும்?
ஒருமித்த ஒரு நாட்டில் - எப்படி இந்தியா என்கிற ஒருமித்த நாட்டுக்குள் சகல உரிமைகள், அதிகாரங்களுடனும் தங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்புகளோடு தமிழகத் தமிழர்கள் வாழ்கிறார்களோ அப்படி - இலங்கையிலும் நம் தமிழ் மக்கள் வாழ வேண்டும். அப்படி ஒரு சூழலை ஏற்படுத்த இலங்கை அரசுக்குத் தேவையான அழுத்தங்களைச் சர்வதேச சமூகம் மூலம், குறிப்பாக இந்தியா மூலம் கொடுக்கவைக்க வேண்டும். இந்தப் பணியை இந்தியத் தமிழரும் புலம்பெயர் தமிழரும் முன்னெடுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
இலங்கையில், எம் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், அதற்கு இந்தியாவில் வாழும் எம் ஆறு கோடித் தமிழ்ச் சகோதரர்களின் பலம் மிக முக்கியமானது. அதற்கு, தமிழகத்திலிருந்து எழும் குரல் ஒருமித்த குரலாக இருக்க வேண்டும்.
நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால், தமிழகத்திலோ இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள் பிரிந்துகிடக்கின்றன. இன்னமும் ‘மீண்டும் புலிகள் வருவார்கள்’ என்று சொல்லி, மக்களை ஏமாற்ற நினைப்பவர்களின் குரலும் புலிகளை விமர்சிப்பவர்களை இனத் துரோகியாகக் கட்டமைப்பவர்களின் குரலுமே ஓங்கி ஒலிக்கிறது...
யதார்த்தத்தைப் புறக்கணித்து நாங்கள் சிந்திக்கவோ, செயல்படவோ முடியாது. புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் அஸ்திவாரம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியில், அக்கிரமங்களில் இருந்தது; அவர்களுடைய போராட்டம் நியாயப்படுத்தக்கூடியதாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் முழுமையாக அதே நியாயத்துடன்தான் அவர்கள் செயல்பட்டார்கள் என்பதை உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் புலிகள் தடைசெய்யப்பட்டார்கள்; முடக்கப்பட்டார்கள்.
இதன் தொடர்ச்சியாகவே இலங்கை அரசால் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது. தமிழர் பகுதி முழுமையாக இலங்கை ராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இந்த யதார்த்தத்தை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் எண்ணம் என்னவென்பதை கால் நூற்றாண்டுக்குப் பின்னர் நடைபெற்ற மகாண சபைத் தேர்தலில் தெளிவாக வெளிப்படுத்தி -யிருக்கிறார்கள். எம் மக்களின் இன்றைய தேவை இன்னொரு போரோ, போராட்டமோ அல்ல; அமைதியான வாழ்க்கை. ஆகையால், யதார்த்தத்தின் அடிப்படையில் சிந்திக்க வேண்டும் என்று எல்லோரையும் கேட்டுக்கொள்கின்றோம்.
ஒரு முரண்பாட்டைக் கவனித்தீர்களா? இலங்கை அரசும் புலிகள் மீண்டும் தலையெடுப்பார்கள் என்கிறது; தமிழீழ ஆதரவாளர்களும் புலிகள் மீண்டும் தலையெடுப்பார்கள் என்கிறார்கள்…
ஆமாம். இலங்கை அரசு இதை ஏன் சொல்கின்றது, அதன் நோக்கம் என்னவென்றால், தமிழர்களை என்றைக்கும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்காகவே சொல்கின்றது. அந்தச் சூதுக்கு நாம் பலியாகக் கூடாது.
இப்போதைய சூழலில் இந்தியாவிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
யுத்தம் முடிந்த சமயத்தில் ஒரு நிரந்தரத் தீர்வுக்கான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டது. ‘13-வது அரசியல் சாசனத்தைத் திருத்தி, கட்டியெழுப்பி அதன் மூலமாக அர்த்தபுஷ்டியான, ஆக்கபூர்வமான அதிகாரப்பகிர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்’ என்று இந்தியா சொன்னபோது, ‘அப்படி ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை இலங்கை அரசு கொடுத்தது. இந்திய அரசுக்குக் கொடுக்கப்பட்ட இதே விதமான வாக்குறுதி ஐ.நா. சபையின் பொதுச்செயலருக்கும் இலங்கை அரசால் கொடுக்கப்பட்டது.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றுதற்கான அழுத்தங்களை இலங்கை அரசுக்குக் கொடுப்பது இந்தியாவின் பொறுப்பு என்று நினைக்கின்றோம். இந்திய அரசை அதை நோக்கி இந்தியத் தமிழர்கள் வழிநடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
சரி, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தேர்தலில், உங்கள் அமைப்பின் வெற்றி எல்லோராலும் யூகிக்கப்பட்ட நிலையிலும்கூட, நீங்கள் ஏன் முதல்வர் பதவிக்கு உங்களை முன்னிறுத்திக்கொள்ளவில்லை?
விக்னேஸ்வரன் ஓர் அறிவாளி, அனுபவசாலி, உச்ச நீதிமன்ற நீதியரசராக இருந்து எல்லோர் மதிப்பையும் பெற்றவர். அவரைவிடவும் வேறு எவரும் முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவர் அல்ல; நான் உட்பட.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் முரண்பாடுகள்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அடிப்படைக் கொள்கையில் எங்களுக்குள் எந்த முரண்பாடும் இல்லை. ஏனைய முரண்பாடுகள் என்பவை பல கட்சிகள் சேர்ந்திருக்கும் ஓர் அமைப்புக்குள் ஜனநாயக யதார்த்தம்தானே? ஆனாலும், எல்லா முரண்பாடுகளையும் தாண்டி எங்கள் மக்கள் நலனையே பிரதானமாகக் கொண்டு நாம் என்றும் உழைக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
புலிகள் காலத்தில் கிழக்கு மகாணத் தமிழர்கள், வடக்கு மாகாணத் தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் இடையே ஒரு மனப்பிளவு ஏற்பட்டது. இப்போது அதைச் சீரமைப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறீர்களா?
அப்படியான ஒரு பிளவு இருப்பதாக நான் கூற மாட்டேன். நானே கிழக்கைச் சேர்ந்தவன்தானே? அதனால், யாழ்ப்பாணத்தில் எனக்குத் தொடர்பு இல்லையா என்ன? வடக்கோ, கிழக்கோ, தமிழ் பேசும் முஸ்லிம்களோ… இன்றைக்கு நாங்கள் ஒரு மக்கள். எங்களுக்குச் சமமான உரிமை வேண்டும். அந்த ஒற்றுமை முக்கியம் என்பதை முழுமையாக உணர்ந்திருக்கிறோம்.
வலிகாமத்தில் நடைபெற்ற போராட்டதின்போது, ‘எம் மக்களுக்கு ஒன்றும் செய்ய இயலாதவனாக இருக்கிறேன்’ என்று சொல்லிக் கண்ணீர்விட்டீர்கள். இந்த வயதில் இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு உங்களுக்கே அரசியல் நம்பிக்கை கேள்விக்குள்ளாகும் சூழலில், நாளை பிறக்கும் ஒரு குழந்தை எந்த நம்பிக்கையில் இலங்கையில் வளரும் என்று நினைக்கிறீர்கள்?
நான் கலங்குபவன் இல்லை. ஆனாலும், அந்தத் தருணத்தில் எம் மக்களைப் பார்த்தபோது, அவர்கள் துயரத்தைப் பார்த்தபோது என்னையும் மீறி உடைந்துபோனேன். அது போகட்டும். எந்த ஓர் இனமும் காலங்காலத்துக்கு ஒடுக்கப்பட்டுக் கிடந்ததாகவே வரலாறு கிடையாது. நிச்சயமாக எமது மக்கள் விமோசனத்தை அடையும் ஒரு காலம் பிறக்கும். அந்த நம்பிக்கை என்னிடத்திலும் எம் மக்களிடத்திலும் நிறையவே இருக்கின்றது. அந்த நம்பிக்கையை எம் பிள்ளைகளிடத்திலும் விதைப்போம்.
தொடர்புக்கு: samas@kslmedia.in, நன்றி: தி இந்து