எரியும் அனலில்
தேகத்தை உருக்கி
உயிரால் பெருங்கனவை எழுதிய
ஒரு பறவை
அலைகிறது தீராத் தாகத்தில்;
ஒரு சொட்டு நீரில் உறைந்த
நிராகரிக்கப்பட்ட ஆகுதி
வேள்வித் தீயென மூழ்கிறது;
சுருள மறுத்தது குரல்!
அலைகளின் நடுவில் உருகியது ஒளி,
உறக்கமற்ற விழியில் பெருந்தீ,
இறுதிப் புன்னகையில்
உடைந்தது அசோகச் சக்கரம்!
எந்தப் பெருமழையாலும்
தணிக்க முடியாத அனலை
இன்னமும் சுமந்து திரிபவனுக்காய்
ஒருநாள்
எழுமொரு நினைவுத் தூபி, வந்தமரும் ஒரு பறவை
நிறைந்திருக்கும் பூக்கள்
தணியும் அவன் பசி.
தீபச்செல்வன்
25.09.2015
நன்றி மூலம் Global Tamil News