SHARE

Wednesday, May 18, 2016

2016 முள்ளிவாய்க்கால் பா!

முட்கள் பாய்ந்த மனங்களென
முள்ளிவாய்க்கால் நினைவுகள்
---------------------------------------------------------------------
உண்ண முடியுதில்லை உறக்கம் வருகுதில்லை
தூங்கா நினைவுகள்
கொடுக்கெனக் கொத்துகின்றன,

மனத்திலே உறுத்துகின்ற மரணக் கோலங்களே
கண்ணுக்குள் ஓடி வந்து கருத்தை நிறைக்கின்றன.

கூர்முள்ளாய் குத்தி குருதி பெருகுகின்ற
மீளாத் துயரங்களே நிரம்பி வழிகின்றன.

நினைவின் வலிகளிலே சக மனிதப் பிராண்டல்கள்.
சுக்குநூறாய் உடைந்த மனம்
பதறிக் கிடக்கையிலே...

கண்ணீரை துடைப்பதற்காய் கைநீட்டியது குற்றமென கண்களையே பிடுங்கியது
காலத்தின் நீதி ஒன்று.

உறுத்துகின்ற நினைவுகளில்  உருக்குலையும் மனங்களிலே
ஆறாத வடுவாக
முள்ளி வாய்க்கால் பேரவலம்
பிணங்கடந்து வந்தவர்கள்
நடைப் பிணமாக வாழ்கின்றார்
பிணங்களுக்கு ஒரு பீடம்
அமைக்க இடமின்றி;

தொட்டிலோடு பிள்ளை உயிர்
பிய்த்தெடுத்த பேய்களதோ
போருடையும் மாறவில்லை
பொல்லா வாளும் மாறவில்லை.

நாங்கள் மட்டும் மாறவேண்டும்
பழையதை மறக்க வேண்டும்
புதியதை நினைக்க வேண்டும்
புலம்பலை நிறுத்த வேண்டும்.

எப்படி முடியும் அந்த வலிகளை மறந்து விட.
காயங்களோ ஆறவில்லை
மருந்துகளும் அவைக்கு இல்லை.

புரையேறிய நினைவுகளாய் எங்கள் உற்றவர்கள்
சிரசுக்குள் நின்றுலவும் பிணக்கோலம்  மறக்குதில்லை.

நினைவுகள் கனக்கும் நெஞ்சத்துக் கனல் தணிய அழுவதைத் தவிர இங்கே
ஆறுதலும் ஏதுமில்லை.

வெற்றிச்செல்வி
14.05.2016

முள்ளிவாய்க்கால் விடுதலைக் கானங்கள்

இந்திய-இலங்கை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல்

இந்திய-இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சனை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல் இரு நாட்டு கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இந்திய...