இழப்புகளைக் கணக்கிட ஆணைக்குழு
[ MY ARTICLE PUBLISHED IN SUDAR OLI ON 25-06-2014]
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு முழுமையாக நிவாரணம் வழங்கும், பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாகப் பழைய நிலைக்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், இழந்த சொத்துகள் தொடர்பான பதிவுகள் முறையானவையாக முழுமையானவையாக இருக்கவேண்டும். இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்துக்கு இவ்வாறானதொரு கொடுமை இழைக்கப்பட்டது என்பதற்கு அந்தப் பதிவுகளே சான்றுகளாக அமையும். ஆகவே, ஆவணப்படுத்தல் முக்கியம். இதை நாங்கள் சரியாகச் செய்யவேண்டும். [ M.I.MUBARAK ]
நடந்து முடிந்த கறுப்பு ஜூன் கலவரத்தால் அளுத்கம, பேருவளை மற்றும் தர்ஹா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முஸ்லிம்களின் 600 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட சொத்துகள் சேதமாக்கப்பட்டுள்ளன சூறையாடப்பட்டுள்ளன.
ஆரம்பக்கட்ட கணக்கெடுப்பின் மூலமே இந்தச் சேத விவரம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு நன்கு திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவசரம் காட்டாமல் அமைதியாகக் கணக்கெடுப்பை மேற்கொண்டால் சேதமடைந்த சொத்துகள் 600 கோடி ரூபாவைத் தாண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். இதுதான் உண்மை.
அப்படியாயின், உண்மையான சேத விவரங்களைக் கண்டறிவதென்றால் அந்த சேத விவரங்களை அரசும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்வதென்றால் அரசால் ஒரு நடுநிலையான ஆணைக் குழுவொன்று நியமிக்கப்படவேண்டும். அந்தக் குழுவில் மிதவாத சிந்தனையுள்ள சிங்களவர்களும் முஸ்லிம்களும் அடங்கவேண்டும். அப்போதுதான் உண்மையான சேதவிவரங்களைத் திரட்ட முடியும்.
ஆனால், இப்போது நடப்பது என்ன? பொலிஸார்தான் இந்த சேதவிவரங்களைக் கணக்கெடுக்கத் தொடங்கியுள்ளனர் பொலிஸார் மேற்கொள்ளும் கணக்கெடுப்பு நிச்சயமாக முழுமையானதாக இருக்காது அவர்கள் சேதத்தைக் குறைத்தே கணக்கெடுப்பர் அத்தோடு,இந்தக் கணக்கெடுப்பில் மறைமுகமாகவோ நேரடியாகவோ பேரினவாதிகளின் தலையீடு இருக்கப்போவது நிச்சயம்.
முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் சேதங்களைக் குறைத்து மதிப்பிடுவதன் மூலம்தான் பேரினவாதிகள் நல்ல பிள்ளைகளாகுவர். அந்த மதிப்பீடு அரசுக்கும் சாதகமாகவே அமையும். சேதங்கள் எவ்வளவு குவாக மதிப்பீடு செய்யப்படுகிறதோ அவ்வளவு தூரம் அரசுக்கு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சாதகமான நிலை ஏற்படும்.
இந்தப் பேரழிவு ஏற்படுவதற்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பக்கச்சார்பான செயற்பாடுகளே காரணம் என்று பாதிக்கப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமும் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் நடத்திய பேரினவாதிகளைக் கட்டுப்படுத்தாது அவர்களுக்கு இந்தப் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் ப+ரண பாதுகாப்பு வழங்கினர் என்று பாதிக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த முஸ்லிம்கள் கூறுகின்றனர். அதுபோக, உயிரிழந்த இரண்டு முஸ்லிம் சகோதரர்களும் விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில்தான் உயிரிழந்தனர் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அதுபோக, கலவரம் தொடங்கி மறுநாள் உயிரிழந்த சகோதரர்களின் ஜனாஸாக்களை களுத்துறையிலிருந்து தர்ஹா நகருக்கு எடுத்துச்சென்ற சகோதரர்கள் மீதும் பேரினவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நிலையில், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் முன்னிலையில்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், அத்தாக்குதலைத் தடுக்காது அவர்கள் பார்த்துக்கொண்டு நின்றனர் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரபெரும முஸ்லிம்களைக் காப்பாற்றி அழைத்து வந்துகொண்டிருந்த போது அவர் மீதும், அவர் அழைத்துவந்த முஸ்லிம்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலும் பொலிஸாரும் அதிரடிப் படையினரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் இடம்பெற்றது என்று அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டாரும் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் பேரினவாதிகள், அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் சகிதம் வந்தே தமது வீடுகளையும், கடைகளையும் எரித்தனர் என்பவையாகும். இந்தப் பேரினவாதிகளும் பொலிஸாரும் தங்கள் வீட்டுக்கு வந்து தேநீர் தயாரித்துப் பருகி அங்குள்ள உணவுப்பொருட்களையெல்லாம் உண்டு, குடித்துவிட்டே வீடுகளுக்குத் தீ வைத்தனர் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.
பேரினவாதிகள் வாகனங் களைக் கொண்டுவந்து ஆறுதலாக இருந்து தங்களது சாமான்களை ஏற்றிச்செல்லும் வரை பொலிஸார் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருந்தனர் என்று அந்த மக்களின் வாக்குமூலங்க ளிலிருந்து அறிய முடிகின்றது.
இதுபோக, பொலிஸில் முறைப்பாடுகளைச் செய்வதற்கு முஸ்லிம்கள் செல்கின்றபோது பொதுபலசேனாவுக்கு எதிராக முறைப்பாடுகளைத் தரவேண்டாம் என்று பொலிஸார் தம்மிடம் கூறுவதாகவும் முஸ்லிம்கள் கூறுகின்றனர்.
ஆகவே, இவ்வாறு அனைத்து நிகழ்வுகளையும் வைத்துப் பார்க்கும்போது பொலிஸார் முஸ்லிம்களுக்கு எதிராகவே செயற்பட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது. அவ்வாறானதொரு நிலையில், எவ்வாறு அவர்கள் மேற்கொள்ளும் சேத விவரக் கணக்கெடுப்பு நியாயமானதாக இருக்கப்போகின்றது? இவர்கள் நிச்சயம் குறைத்தே மதிப்பீடு செய்வர்.
அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்க இதயசுத்தியுடன் செயற்படுவது உண்மையென்றால் சிங்கள மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளைக் கொண்ட ஓர் ஆணைக்குழுவை நியமித்து அதனூடாகவே கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் இன்று வேண்டுவது இழக்கப்பட்ட சொத்துகளில் கொஞ்சமேனும் குறையாமல் அப்படியே வேண்டும் என்பதுதான். அவர்களின் கோரிக்கை நியாயமானது. அப்படியாயின், அவர்களின் சொத்துக்களின் கணக்கெடுப்பு சரியாக மேற்கொள்ளப்படவேண்டும். இந்தக் கோரிக்கையையேனும் அரசு தட்டிக்கழிக்காமல் நிவேற்ற முன்வரவேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு முழுமையாக நிவாரணம் வழங்கும், பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாகப் பழைய நிலைக்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், இழந்த சொத்துகள் தொடர்பான பதிவுகள் முறையானவையாக முழுமையானவையாக இருக்கவேண்டும். இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்துக்கு இவ்வாறானதொரு கொடுமை இழைக்கப்பட்டது என்பதற்கு அந்தப் பதிவுகளே சான்றுகளாக அமையும். ஆகவே, ஆவணப்படுத்தல் முக்கியம். இதை நாங்கள் சரியாகச் செய்யவேண்டும்.
[ M.I.MUBARAK ]