ஹரிஸ்ணவியின் கொலையைக் கண்டித்து நடத்தப்பட்ட கிளிநொச்சி ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முழக்கம்!
|
புங்குடுதீவு மாணவி வித்தியா |
இருப்பவர்கள் இருந்திருந்தால் இதுவெல்லாம் நடக்குமா?
|
ஹரிஸ்ணவி |
ஹரிஸ்ணவியின் கொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!
வித்தியாவின் கொலையினை அடுத்து இலங்கையில் சிறுவர்களுக்கு எதிராக இவ்வாறான ஒரு பாலியல் ரீதியான கொலை இடம்பெறக் கூடாது என்று முழக்கமிட்ட அரசாங்கம், மற்றும் சிவில் சமூகம் சேயாவின் கொலைக்கும் பத்து வயது சிறுவனின் கொலைக்கும் தற்போது ஹரிஸ்ணவியின் கொலைக்கும் என்ன பதில் கூறப்போகின்றது.
இத்தகைய கொடூரமான சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகத்தினை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க போகின்றதா? அல்லது இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் நிகழ பார்த்துக்கொண்டிருக்கப் போகிறதா? அரசே பதில் கூறு என கிளிநெச்சியில் இன்று பொது மக்கள், வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இன்று காலை 9மணியளவில் கிளிநொச்சி பொதுச்சந்தை விவசாய,வர்த்தக சமூகத்தினர் உள்ளிட்ட பலர் டிப்போச் சந்தியிலிருந்து ஊர்வலமாக மாவட்டச் செயலகம் வரை சென்று அங்கு ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றையும் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளித்துள்ளனர்.
நேற்று வித்தியா, சேயா இன்று ஹரிஸ்ணவி நாளையும் தொடருமா?,
பெண்கள் - சிறுவர்களுக்கு பாதுகாப்பில்லையா...?
அரசே சட்டத்தில் பெண்கள் சிறுவர்களுக்கு அதியுச்ச பாதுகாப்பை வழங்கு!,
சிறுமிகளுக்கு எதிரான வன்புணர்வும், கொலையும் தொடர்கதையா...?,
சிறுவர் துஸ்பிரயோகத்தை எதிர்ப்போம்!தடுப்போம்!,
பெண்கள் மீதான வன்முறையாளரை தண்டிப்போம்!,
சிறுவர்களை பாதுகாக்க சட்டத்தை கடுமையாக்கு!,
பாலியல் வன்புணர்வு கொலைகுற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்து!,
சீரழிக்காதே! சீரழிக்காதே! சிறுமிகளை சீரழிக்காதே!
இருப்பவர்கள் இருந்திருந்தால் இதுவெல்லாம் நடக்குமா?
என்ற முழக்கங்களை பதாகைகளாக ஏந்திய வண்ணம் முழங்கினர்.
மேலும் ஹரிஸ்ணவிக்கு நீதி கோரி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள் என வார்த்தைகளில் மட்டும் கூறி விட்டு அவர்கள் மலர்களாக மலரும் முன்னமே மொட்டுகளிலேயே கிள்ளி எறியும் துர்ப்பாக்கிய நிலைக்கு இலங்கை வாழ் சிறுவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கையில் அண்மைக்காலமாக சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் இடம்பெற்று வருவதனை அன்றாடம் ஊடகங்கள் மூலம் அறிந்து கொள்கின்றோம்.
ஆனாலும் அண்மைக் காலங்களில் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதானது எல்லோரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது சிறுவர்களை பாடசாலைகளுக்கும், வெளியிடங்களுக்கும் அனுப்புவதற்கு பெற்றோர்களும், பாதுகாவலர்களும் அதிகம் அச்சப்படக் கூடிய சூழல் இன்று ஏற்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு எதிரான கொடூர பாலியல் வன்புணர்வுகளும், அதன்பின்னரான கொலை சம்பவங்களும் அதிகம் பதிவாகிய வண்ணம் உள்ளன. இதில் மிகவும் கண்டனத்திற்கும், அனைத்து சமூகத்தினரினதும் கொந்தளிப்புக்கும் உட்பட்ட விடயமாக யாழ் மாணவி வித்தியாவின் கொலை. அதனையடுத்து கொட்டகதெனிய சிறுமி சேயா சந்தவமியும், தற்போது வவுனியா மாணவி ஹரிஸ்ணவியும் என சிறுவர்கள் பாலியல் வன்புணர்வுக்குப் பின் கொலை செய்யப்படுவது தொடர் கதையாய் தொடர்கிறது.
|
திருகோணமலை சம்பூரில் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில், பாலியல் வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்டு கல்லில் கட்டபட்டு கிணற்றில் வீசப்பட்ட ஆறு வயது சிறுவன் |
மேலும் திருகோணமலை சம்பூரில் ஆறு வயது சிறுவன் பாலியல் வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்டு கல்லில் கட்டபட்டு கிணற்றில் போட்ட சம்பவமும், 10 வயது சிறுவன் ஒருவனை அத்துருகிரிய பகுதியில் படுகொலை செய்துள்ள சம்பவமும், பொலனறுவை மன்னம்பிட்டிய பகுதியில் 9 வயது சிறுமியை 3 பேர் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியமை என சொல்லிக் கொண்டே போகும் அளவுக்கு நிலைமைகள் மோசமாக்கியுள்ளது.
|
கொட்டகதெனிய சிறுமி சேயா சந்தவமி |
இந்த நிலைமை இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளமை எல்லோரினதும் மத்தியில் அச்சத்தினை தோற்றுவித்துள்ளது. இன்று சிறுவர்களுக்கு எதிரான பாலியல் தொல்லை வன்புணர்வு,ஆபாச படங்களை காட்டுவது, ஏமாற்றுதல், கடத்தல், கொலை செய்தல் போன்ற கொடூரங்கள் சர்வசாதாரணமான நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறு சிறுவர்கள் மீதான கொடூர பாலியல் வன்புணர்வு மற்றும் கொடூர கொலை, துன்புறுத்தல்கள் இடம்பெற போதை பொருள் பாவனையும், ஆபாச இணையத்தளங்களும், பிரதான அம்சமாக மாறியுள்ளன.
ஆனால் இவற்றை கட்டுப்படுத்துவதில் அரச செயற்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை. இவ்விடயங்களில் அரசாங்கம் அசமந்த போக்கிலேயே செயற்படுகிறது.
நாட்டில் சிறுவர் துஸ்பிரயோகத்தினை தடுத்து நிறுத்த எத்தனையோ சட்டங்கள் கொண்டு வரப்பட்ட போதும் அச்சட்டங்கள் கடுமையானதாக இன்மையால் இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் நாட்டின் சட்டமும், பாதுகாப்பும் காணப்படுகிறது.
எனவே அன்பார்ந்த சமூகமே,
நாளை எம் சமூகத்தின் தலைவர்களையும், தலைவிகளையும் பாதுகாக்க இன்றே அணிதிரளுங்கள்!.
சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவிழிப்படையுங்கள்!
ஹரிஸ்ணவியோடு பெண்கள், சிறுவர்கள் மீதான இந்த கொடூரங்கள் முடியட்டும்!