ENB Editorial Poster PerarivaaLan |
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் முதல் முறையாக வியாழக்கிழமை சிறை விடுப்பில் (பரோலில்)* வெளியே வந்தார்.
தமிழக அரசு அவருக்கு 30 நாட்கள் சிறைவிடுப்பு அளித்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் வெளியே வந்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தற்போது 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பேரறிவாளனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டும் உடல்நலமின்றி அவதிப்படும் அவரது தந்தையாரைப் பார்ப்பதற்காகவும் சில நாட்களாகவது சிறைவிடுப்பு அளிக்க வேண்டுமென அவரது தாயார் அற்புதமம்மாள் கோரிவந்தார்.
ஆனால் இந்தக் கோரிக்கையை பேரறிவாளன் அடைக்கப்பட்டுள்ள வேலூர் சிறையின் கண்காணிப்பாளர் நிராகரித்தார்.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து தமிழக அட்வகேட் ஜெனரலின் கருத்தை மாநில அரசு கேட்டது. பேரறிவாளன் மத்திய அரசுச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டிருந்தாலும் அவர் தன் தண்டனைக் காலம் முழுவதையும் அனுபவித்துவிட்டதால், மாநில அரசில் உள்ள பொருத்தமான அதிகாரிகள் அவருக்கான சிறைவிடுப்பு குறித்து முடிவு செய்யலாம் என அட்வகேட் ஜெனரல் தன் கருத்தை அளித்தார்.
இந்நிலையில், அவருக்கு ஒரு மாத காலம் சிறைவிடுப்பு அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள உத்தரவில், "1982-ஆம் ஆண்டின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு விதிமுறைகள் - விதி 19-ன் படி பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு அளிக்கலாம்.
அவர் சிறை விடுப்பில் இருக்கும் காலகட்டத்தில் அவருக்கு கடுமையான போலீஸ் பாதுகாவல் அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1991-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், 26 ஆண்டுகள் கழித்து சிறை விடுப்பு கிடைத்துள்ளது.
இந்த வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் சிலர் இதற்கு முன்பாக சிறைவிடுப்பு பெற்றுள்ளனர் என்றாலும் அவர்களுக்கு சில நாட்கள் மட்டுமே அவ்விடுப்பு கிடைத்தது. முதல்முறையாக இவ்வழக்கின் தண்டனைக் கைதி ஒருவருக்கு ஒரு மாதகால விடுப்பு கிடைத்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது.
இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேரையும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435ன் கீழ் விடுவிக்கப்போவதாக 2014ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
மத்திய அரசின் ஒப்புதலோடுதான் இந்தச் சட்டப்பிரிவைப் பயன்படுத்தி அவர்களை விடுவிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாலும், மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்ததாலும் ஏழு பேரையும் விடுதலை செய்யும் விவகாரம் கிடப்பில் உள்ளது.
======================
* parole
pəˈrəʊl/
noun