Thursday, 8 January 2015

``புண்ணில் வேல் பாய்ந்த`` யாழ் பல்கலை மாணவர் புள்ளடி போடக் கோரிக்கை!

கடந்தகால வரலாற்றை கருத்திற்கொண்டு தமிழ் மக்கள் அனைவரும் வாக்களியுங்கள்; 
யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்  

தமிழ் மக்கள் அனைவரும் கடந்த கால வரலாறுகளைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாளை மறுதினம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தநிலையிலேயே யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களுக்கு இந்த அழைப்பை இன்றையதினம் விடுத்துள்ளது.

ஒன்றியம் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் ஜனாதிபதியினைத் தெரிவு செய்யும் தேர்தலானது 8ஆம் திகதி நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தல் தமிழ் மக்களாகிய எமக்கு நிரந்தர அரசியல் தீர்வினைப் பெற்றுத்தரும் என்றோ அல்லது எமக்கான உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் என்றும் நாம் துளியளவும் நம்பவில்லை.

ஏனெனில் இந்த தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும் சிங்கள பௌத்த பேரினவாதம் என்ற கொள்கைகளைப் பின்பற்றுபவர்களாவர்.

இன்று இந்த நாட்டின் தமிழ் மக்கள் சிறந்த அரசியல் தலைமையற்ற ஒரு இருண்ட காலத்தில் சுதந்திரமற்று, உரிமை மறுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

3 தசாப்த கால உரிமைப் போராட்டத்தின் உச்சமாக முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் பல்லாயிரக்கணக்கானவர்கள் காவு கொள்ளப்பட்டதுடன் எஞ்சிய மக்கள் ஏதிலிகளாய் வறுமையில் சிக்கி அன்றாட வாழ்வுக்கே அல்லல்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

இந்தநிலையினை தமக்கு சாதகமாக்கி எமது மக்களையும் இளைஞர் , யுவதிகளையும் , பணம் மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதாக ஆசைவார்த்தைகள் கூறி தேர்தல் காலத்தில் பயன்படுத்தி தங்களுக்கு அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

யுத்தம் முடிவடைந்ததாக அரசு கூறி 5 வருடங்கள் கடந்த நிலையிலும் எமது இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை வழங்க முன்வராதமை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று உள்ளது.

மேலும் எமது பூர்வீக நிலங்களில் குடியேற்றங்களையும் , நில அபகரிப்புக்களையும் செய்து வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் எமது இனத்தின் இருப்பையும் , அடையாளத்தையும் சிதைப்பதுடன் எமது பிரதேசத்தில் இராணுவ கெடுபிடிகளையும் மேற்கொண்டு பொருளாதார ரீதியாகவும் எம்மை நலிவடையச் செய்கின்றது.

இந்தநிலையில் தமிழ் மக்களாகிய நாம் ஜனநாயக ரீதியில் கடந்த கால தேர்தல்களில் எமது ஒருமித்த குரலில் அரசிற்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்தினோம்.

எனினும் தேர்தலில் வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரது ஜனநாயக உரிமை . எனவே அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும். இல்லையேல் எமது வாக்குகள் தவறான முறையில் பயன்படுத்தப்படலாம்.

எனவே தமிழ் மக்கள் அனைவரும் கடந்த கால வரலாறுகளைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment