Monday, 10 March 2014

இந்தியாவுக்குள்ள நிர்ப்பந்தத்தை எம்மால் புரிந்துகொள்ள முடியும்; ஜனாதிபதி

இந்தியாவுக்குள்ள நிர்ப்பந்தத்தை எம்மால் புரிந்துகொள்ள முடியும்; 
புதுடில்லியுடன் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளோம்; ஜனாதிபதி

2014-03-02 05:56:35 | General

ஜெனீவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின்
கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால்
கொண்டுவரப்படவுள்ள பிரேரணை குறித்து எவ்வாறான நிலைப்பாட்டை
எடுப்பதென்பதில் இந்தியாவுக்கு இருக்கக்கூடிய தேர்தல் நிர்ப்பந்தங்களை தான் புரிந்துகொள்வதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.
கொழும்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். 3 வருடங்களின் பின்னர் வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்த ஜனாதிபதி ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் உட்பட பலவிடயங்கள் குறித்தும் பேசினார்.

மனித உரிமைகள் பேரவையில் இந்தியா எவ்வாறு வாக்களிக்கும் என்பது
தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். “எனக்குத் தெரியாது. மார்ச் மாதக்
கூட்டத் தொடர் முடிவடைந்து ஒரு மாத காலத்தில் இந்தியா தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்கவுள்ளது. தமது எதிர்காலத்தையிட்டு சிந்திக்க
வேண்டியவர்களாகவும், வாக்காளர்களின் மனநிலையையிட்டு சிந்திக்க
வேண்டியவர்களாகவுமே அவர்கள் இருப்பார்கள். அவர்களை நாம்
புரிந்துகொள்கிறோம். அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள
வேண்டும்’ என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இருந்தபோதிலும் இந்தியா உட்பட மனித உரிமைகள் பேரவையில் உள்ள
அனைத்து நாடுகளுடனும் பேச்சு வார்த்தை தொடரும் என குறிப்பிட்ட மகிந்த
ராஜபக்ஷ, “இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை மியன்மாரில் நடைபெறவுள்ள மாநாடு ஒன்றில் நான் சந்திக்க உள்ளேன். அத்துடன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியவெளி விவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் 5 நாட்களுக்கு முன்னர் பேசியுள்ளார். நாம் தொடர்ச்சியாக தொடர்பு கொண்ட நிலைமையிலேயே உள்ளோம்.

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் அது மென்மையானதாக
இருந்தாலும் கூட, எமக்கு சங்கடத்தை ஏற்படுத்துபவையாக இருக்கும்.
அ.இ.அ.தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் ஈழம்
அமைப்பதற்காக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் இலங்கைத்

தமிழர்கள் மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என
தெரிவித்துள்ளது தொடர்பாக கேட்கப்பட்ட போது அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, “புலம்பெயர்ந்த தமிழர்கள் இதில் எவ்வாறு பங்கு கொள்ள முடியும்? அவர்கள் இலங்கைப் பிரஜைகள் அல்ல. அவர்கள் வேறு நாட்டுப் பிரஜைகளாகவே உள்ளார்கள். அந்த நாடுகளில் நடைபெறும் சர்வஜன வாக்கெடுப்புகளில் மட்டுமே அவர்கள் பங்குகொள்ள முடியும்’ எனத் தெரிவித்தார்.

போருக்கு பின்னரான நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் சர்வதேச ரீதியாக
விமர்சனங்கள், முன்வைக்கப்படுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு
பதிலளித்த ஜனாதிபதி “எம்மால் முடிந்தளவு சிறப்பாக செய்துள்ளோம்.

இடம்பெயர்ந்த மக்களை நாம் மீளக் குடியமர்த்தியுள்ளோம். அவர்களுக்கு
மின்சாரம், வீதிகள், பாடசாலைகள் என்பன வழங்கப்பட்டுள்ளன. போர்
இடம்பெற்ற பகுதிகளில் 94வீதமான பகுதிகளில் இருந்து கண்ணி வெடிகளை
நாம் அகற்றியுள்ளோம். இந்த நிலையில் எமக்கெதிராக தெரிவிக்கப்படும்
குற்றச்சாட்டுகள் நியாயமற்றவைகளாகும்’ எனக்குறிப்பிட்டார்.

“கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்
அறிக்கைக்கு அமைச்சரவை 2012ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலேயே
அங்கீகாரத்தை வழங்கியது. அதில் உள்ள 280 பரிந்துரைகளையும்
நடைமுறைப்படுத்துவதற்கு எமக்கு பத்தொன்பது மாதங்களே இருந்தன. காணி உரிமை, மொழி போன்றவை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு காலம் எடுக்கும்’ எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அமெரிக்கா இலங்கைக்கு எதிராகச் செயற்படுவது, கலியஸ்கிலே என அறியப்பட்ட குத்துச் சண்டை வீரர் முகமத் அலியுடன் பாடசாலை மாணவன் ஒருவருடன் மோதுவதைப் போன்றது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணைகளை கொண்டு வருவது ஆட்சி மாற்றத்திற்காகவா? என்று கேட்ட போது,
“அவர்களிடம் இரகசிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்று இருக்கலாம். ஆனால், மக்களுடைய ஆதரவு எனக்கு இருக்கும் வரையில் அதனையிட்டு நான் கவலைப்படப் போவதில்லை’ எனத் தெரிவித்தார். 

அமெரிக்கா இலங்கைக்கு எதிராக செயற்படுவது கலியஸ்கிலே என அறியப்பட்ட குத்துச் சண்டை வீரன் முகம்மத் அலியுடன் பாடசாலை மாணவன் ஒருவன் மோதுவதைப் போன்றதெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கை விவகாரத்தில் பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளும் தம்முடைய
உள்நாட்டு தேர்தல் நிர்பந்தங்கள் காரணமாகவே இலங்கை தொடர்பான
நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

இலங்கைக்கு எதிராக சர்வதேச தடைகள் விதிக்கப்படக்கூடிய சாத்தியக்
கூறுகள் தொடர்பாக கேட்கப்பட்ட போது “அவ்வாறான தடைகள் எதனையும்
மனித உரிமைகள் பேரவையால் விதிக்க முடியாது. தனிப்பட்ட நாடுகளே
அவ்வாறான தடைகளை விதிக்க முடியும். ஐ.நா. பாதுகாப்பு சபைகள் மட்டுமே
சர்வதேச தடை ஒன்றுக்கான உத்தரவினை பிறப்பிக்க முடியும்.

அங்குகூட சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் வீட்டோ உரிமைகளை கொண்டுள்ளது.

அவை இலங்கையின் நட்பு நாடுகளாகும்.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தென்னாபிரிக்காவின்
அனுபவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் கேட்கப்பட்டபோது, “இது
தொடர்பாக பேச்சு வார்த்தைகளும் கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்று
வருகின்றன. இரண்டு தரப்பு பிரதிநிதிகளும் மற்றைய நாட்டிற்கு விஜயத்தை
மேற்கொண்டு உள்ளார்கள்’ என ஜனாதிபதி பதிலளித்தார்.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் மத்தியஸ்த முயற்சி ஒன்றை
ஜப்பான் மேற்கொள்கின்றதா? என கேட்கப்பட்ட போது, “எந்தவொரு நாடுமே
மத்தியஸ்தப் பணியை மேற்கொள்ளவில்லை’ என தெரிவித்த ஜனாதிபதி
கடந்தமுறை இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது ஜப்பான் வாக்களிக்கவில்லை என குறிப்பிட்டார்.

இந்த வருடத்தில் திடீர் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்தப்படுவதற்கு திட்டம் ஒன்று உள்ளதா என கேட்கப்பட்டபோது, “என்னுடைய ஆறு வருட பதவிக்கால முடிவில் 2016ஆம் ஆண்டில் தான் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

- See more at: http://www.thinakkural.lk/article.phplocal/gtogmizgit67618ab70731b116340kkrae553f17c11a3bbc87e0b605rggg5#sthash.TK5KfutM.dpuf

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...