SHARE

Sunday, November 30, 2025

வரலாற்றுத் தவறிழைக்காது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம்.

வரலாற்றுத் தவறிழைக்காது இந்த நாட்டை மீண்டும் சிறப்பாகக் கட்டியெழுப்புவோம்

ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க



வரலாற்றில் மிகப்பெரிய  இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம். ஆனாலும் நாங்கள் நிச்சயமாக முன்பு இருந்ததை விட சிறந்த நாட்டைக் கட்டியெழுப்வோம். அதனை பூச்சியத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்ற போதும்  அந்த சவாலை, குறிப்பாக இந்த நாட்டின் அன்பான பிரஜைகளின் அசைக்க முடியாத தைரியத்துடன், இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நாங்கள் ஆணித்தரமாக நம்புகிறோம் என இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க இன்று (2025.11.30) நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேரழிவு நடந்துள்ள  தருணத்தில், நாட்டிற்காக அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் மறப்போம். இனம், மதம், கட்சி அல்லது நிற வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபடுவோம். எமக்கு அரசியல் செய்ய நிறைய நேரம் இருக்கிறது. பாரிய அனர்த்தத்தை  எதிர்கொள்ள அதிக நேரம் கிடையாது. ஒன்றாக இணைந்து  நாட்டைக் கட்டியெழுப்புவோம். நாட்டைக் கட்டியெழுப்பிய பின்னர், தனித்தனியாக அரசியல் செய்ய முடியும். நமது நாட்டின் பிரஜைகள் தொடர்பில் முழுமையான நம்பிக்கை எனக்குள்ளது. நமது நாட்டின் முப்படைகள், பொலிஸார் மற்றும் நமது நாட்டின் அரச சேவை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.

நீண்டகால இலக்குகளை அடையவும், நாடென்ற வகையில்  ஒன்றாக வாழ்வதற்கான வாய்ப்புகளை வரலாறு தவறவிட்டுள்ளது. இந்தத் தடவை  அதனை தவறவிடாது நிறைவேற்றும் உறுதிப்பாடு நமக்கு உள்ளது. இந்த கடினமான நேரத்தில் ஏற்கனவே முன்வந்து எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து நட்பு நாடுகள், அவற்றின் தலைவர்கள், பிரஜைகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் அவர்களின் தொடர்ச்சியான ஆதரவைப் பெற  முறையான பொறிமுறையை நிறுவியுள்ளோம்.

இந்த நாட்டிலுள்ள கைத்தொழிற்துறையினர், தொழிலதிபர்கள், புத்திஜீவிகள் மற்றும் புத்தாக்குநர்கள் தொடர்பில் எனக்கு நம்பிக்கை உள்ளது. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. எங்கள் நட்பு நாடுகள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையுடன், இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இந்த விடயத்தில் நாங்கள் தலையிட்டுள்ளோம். 

முழுமையான உரை கீழே :

"ஒரு நாடென்ற வகையில்  நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம் என்பதையும்  அறிவோம். முழு நாடும் பேரழிவிற்கு உட்படுத்தப்பட்ட  முதல் அனுபவம் இது. நாளாபக்கங்களிலிருந்தும் முழு நாடும் நீரில் மூழ்கி பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில், இது மிகவும் கடினமான ஒரு செயற்பாடாகும். இதனை நாம் வெற்றி கொள்ள வேண்டும்.  இந்த கொடூரமான இயற்கை பேரழிவினால் நமது சிறிய தீவை உலுக்க முடிந்தாலும், இந்த நாட்டு  மக்களின் மனிதநேயத்தையும் உறுதியையும் எந்த வகையிலும் அசைக்க முடியாது என்பதை இது மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

எனது அன்பான பிரஜைகளின் அசைக்க முடியாத தைரியத்துடன், இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நாங்கள் ஆணித்தரமாக நம்புகிறோம். அன்பான பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே, இந்தப் பேரழிவில் இறந்த அனைவரையும் மீண்டும் உயிர்ப்பிக்க முடிந்தால், எந்த சூழ்நிலையிலும் அதைச் செய்வதற்கு நாங்கள் இருமுறை யோசிக்க மாட்டோம். ஆனால் நாம்  யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொள்ள வேண்டும். இழந்தவர்கள் தொடர்பான வேதனை என்றென்றும் எம்முடன் இருக்கும். இறந்தவர்கள் அனைவரும் நமக்கு ஒரு இலக்கம் அல்ல. ஒவ்வொரு உயிருக்கும் ஒரு பெயர், ஒரு முகம் மற்றும் ஒரு கதை உள்ளது. இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது  அனுதாபத்துடன் மட்டும் நின்றுவிடாமல்  அந்த உயிர்களை அந்த குடும்பங்களுக்குத் திரும்பக் கொண்டுவர முடியாவிட்டாலும், ஏனைய அனைத்தையும் வழங்க நாங்கள்  அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அதேபோன்று  காணாமல் போனவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம். இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பலருடைய துன்பத்தைத் தணிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கபலமாக இருப்பதற்காக  முன்வந்த அனைவரையும் நாம் அன்புடன் அரவணைக்கிறோம்.

இயற்கை அனர்த்தங்களை முறையாக கட்டுப்படுத்த முடியாத போதும் ஏற்படக் கூடிய அனர்த்தங்கள் மற்றும் அவசர நிலைமைகளை உரிய வகையில் முகாமைத்துவம்  செய்தல், பழைய நிலைக்கு அல்லது முன்பை விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்பும்  மூன்று செயல்முறைகளின் முக்கியத்துவம் அரசாங்கத்திற்குரியது. அதற்குத் தேவையான மற்றும் சாத்தியமான நடவடிக்கைகள்  எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதனை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம். இந்த அனர்த்தத்தை  எதிர்கொள்ளும் போது, ​​மட்டுப்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் கருவிகளைக் கொண்ட ஒரு நாட்டில், நம்மிடம் உள்ள விலைமதிப்பற்ற மனித வளம் வேறு எதையும் விட மதிப்புமிக்கது என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம். தன்னம்பிக்கை நிறைந்த மற்றும் அனர்த்தத்தின் போது விட்டுச் செல்லாத அனைத்து சந்தர்ப்பங்களிலும் உள்ள மனஉறுதியுடனான எமது நாட்டு பிரஜைகள் தொடர்பில் நாம்  பெருமைப்படுகிறோம்.

நாம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய மறுசீரமைப்பு முன்னெடுப்பு மற்றும் மீளக் கட்டியெழுப்பும்  பணியை எதிர்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அழிவின் அளவை மதிப்பிடுவது மிகவும் பாரதூரமானது. ஆனால், வெள்ளம், புயல் அல்லது ஏதேனும் பேரழிவுக்குப் பின்னர், நம் நாட்டு மக்களின் முதல் பணியாக அனர்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றுவதும், அவர்களுக்குத் தேவையான உடனடி நிவாரணத்தை வழங்குவதுமாகவே உள்ளது. அதற்காக, எங்கள் முழு அரச பொறிமுறையையும் மிகவும் திறமையாக வழிநடத்த முயற்சி செய்தோம். குறிப்பாக, எங்கள் முப்படையினரும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் உயிரை துச்சமாக மதித்து இந்தப் பணியில் துணிவுடன் செயலாற்றினார்கள். அவர்கள்  தொடர்பில் பெருமை அடைகிறோம். 

அதேபோன்று அமைச்சுக்களின்  செயலாளர்கள் முதல் கிராம அலுவலர் வரை முழு அரச பொறிமுறையும் இந்தப் பணிக்காக மிக விரைவாகத் தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு பாரிய பங்காற்றி  வருகின்றனர். அவர்கள் அதை தங்கள் கடமைக்கு அப்பாற்பட்ட ஒரு மனிதாபிமானப் பணியாகப் உணர்ந்து,  அர்ப்பணிப்புடன் தங்கள் பங்களிப்பைச் செய்தனர். அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க ஏராளமான மக்கள் தாமாகவே முன்வந்து பங்களித்தனர். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில் பெரும் மனிதாபிமானத்துடன் அவர்கள்  பங்காற்றினர்.  இந்த நேரத்தில் நாம் அதை நினைவுகூர வேண்டும்.
மேலும், இந்த மீட்புப் பணியில், நமது அயல் நாடுகளும் நட்பு நாடுகளும் எங்களுக்கு பெருமளவு உதவிகளைச் செய்துள்ளன. ஹெலிகாப்டர்கள் மற்றும் நிவாரண மற்றும் மீட்புப் படைகளை வழங்குவதன் மூலம் வெளிநாடுகள் ஏற்கனவே எங்களுக்கு நட்புக் கரம் நீட்டியுள்ளன. நமது நாட்டு மக்கள் சார்பாக நாங்கள் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

சில சுற்றறிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிவாரணம் வழங்குவதில் தடைகளை ஏற்படுத்தியுள்ளன. அந்த சுற்றறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் மாற்றியமைத்து, அவர்கள் எங்கு இடம்பெயர்ந்துள்ளனர் அல்லது எங்கு வசிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் அரசாங்க நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில்  ஒரு திட்டத்தைத் தயாரித்துள்ளோம்.  சில சுற்றறிக்கைகள்  அதிகாரிகளுக்கு  தேவைக்கேற்ப பணத்தைப் பயன்படுத்துவதற்குத் தடைகளை ஏற்படுத்தியுள்ளன. அந்த சுற்றறிக்கைகளை நாங்கள் மாற்றியுள்ளோம். ஒரு பிரதேச செயலாளருக்கு 500 இலட்சம் ரூபா வரை செலவிட அனுமதி அளித்துள்ளோம்.  

மேலும், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  நிதி ஒதுக்கீட்டில்  3,000 கோடி ரூபாய் எங்களிடம் உள்ளது.அதை நாங்கள் பாராளுமன்றத்தின் அனுமதி  இல்லாமல் செலவிட முடியும். அதனை இந்த செயற்பாட்டிற்காக ஒதுக்கியுள்ளோம். மாவட்ட செயலாளர்களுக்கு எவ்வளவு பணம் தேவையோ அதையெல்லாம் வழங்க தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.

2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாவிட்டால்,குறைமதிப்பீட்டின் ஊடாக  மேலும் நிதியை வழங்கலாம். வழங்கியுள்ள நிதியின் மூலம் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு, சுகாதார உதவிகளை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், இந்த அனர்த்த சூழ்நிலை காரணமாக, ஏராளமான அத்தியாவசிய சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அழிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் மின்சார வலையமைப்பு சேதமடைந்துள்ளது.  தகவல் தொடர்பு வசதிகள் அழிக்கப்பட்டுள்ளன. பிரவேச வீதிகள் அழிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பல உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகள் அழிக்கப்பட்டுள்ளன.   உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை துரிதமாக மீளமைக்க  நடவடிக்கை எடுத்துள்ளோம்.அனர்த்தத்தினால்  பாதிக்கப்படாத பகுதி  ஊழியர்கள் இந்த உள்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளுக்கு  பயன்படுத்தப்பட்டுள்ளனர். 

அமைச்சுக்களுக்கு நிறுவனங்களுக்கு வேறு பணிகள் இருந்தாலும் பிரதான பணியாக கருதி இந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைப்பதற்காக நாம் ஏற்கெனவே திட்டமொன்றை தயாரித்துள்ளோம். மின்சார சபை , நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை , தகவல் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை  போன்ற அத்தியாவசிய நிறுவனங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதன் மூலம் தேவையான பங்களிப்பையும் வழிகாட்டுதலையும் நாங்கள் வழங்கி வருகிறோம். அதனால், மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை முழுமையாக செயல்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்.

வீதிகள் மற்றும் பாலங்கள் முதல் பாடசாலைகள் மற்றும் நீர் வசதிகள் வரை  உள்கட்டமைப்பு வசதிகளை சீர்செய்ய  பாரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. சீராகவும் முறையாகவும் எழுந்து நிற்கப்  போராடிக்கொண்டிருந்த ஒரு நாட்டிற்கு இந்த நிலைமை சாதாரண சவாலல்ல. சிறு சுயதொழில் முயற்சி முதல் பாரிய அளவிலான கைத்தொழில்கள் வரை, சிறு தொழில்முனைவோர் முதல் பாரிய அளவிலான தொழில்முனைவோர் வரை,  அனைத்துத் தரப்பினரும் தங்கள் வருமானத்தை இழந்துள்ளன. விவசாயம், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

எனவே, இவை அனைத்தையும் மிக விரைவாக மேம்படுத்துவதற்கு நமக்கு ஒரு துரித திட்டம் அவசியம் . அதனால்தான், இந்த அனர்த்த  சூழ்நிலையை முகாமைத்துவம் செய்து  , விரைவான மற்றும் திறமையான மீள்கட்டமைப்புக்குத் தேவையான சட்டப் பாதுகாப்பு மற்றும் வளங்களை வழங்க அவசரகால நிலையை அறிவித்துள்ளோம். இந்த அனர்தத்தை முகாமைத்துவம் செய்வதற்கும்  , நமது நாட்டை செயற்திறனுடன்  கட்டியெழுப்புவதற்காக அன்றி  வேறு எந்த அடக்குமுறை நடவடிக்கைக்கும் இந்த அவசரகால நிலையைப் பயன்படுத்த மாட்டோம் என்பதை இந்த நாட்டின் பிரஜைகளுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்


இந்த அவசரகாலச் சட்டத்திற்கு அமைவாக , அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தை ஏற்கனவே நியமித்துள்ளோம். அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் மையப்படுத்தியுள்ளோம். அத்தியாவசிய சேவை அலுவலகங்கள் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அனைத்து முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளும் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இந்த அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் மூலம் மிகவும் திறமையான மையப்படுத்தப்பட்ட செயல்பாட்டை மேற்கொள்ள ஒரு திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். அதேபோன்று , நமது நாட்டை முன்பு இருந்ததை விட மிகவும் முன்னேற்றமான நாடாக மாற்ற வேண்டியது எமது அடுத்த பணியாகும். அந்த நோக்கத்திற்காக, புனரமைப்புக்குத் தேவையான நிதியை வழங்க ஒரு நிதியத்தை  நிறுவ எதிர்பார்க்கிறோம்.  அந்த நிதியத்தை நிர்வகிக்க தனியார் துறை, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு , நிதி அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன அடங்கிய கூட்டு முகாமைத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாரிய பொறுப்பை நாம் வழங்கியுள்ளோம்.

நமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான  நிதியை நாம் பல்வேறு வழிகளில் பெற்றுக் கொள்ள முடியும்.  எங்கள் நட்பு நாடுகளுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றி அவர்களின் உதவியைப் பெறுதல், பல்வேறு சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புகொண்டு அவர்களின் உதவியை பெறுதல், உள்நாட்டு வர்த்தகர்கள்  மற்றும் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடி அவர்களின் உதவியை நாடுதல் ஊடாக அதனை பெறலாம். குறிப்பாக   இலங்கைக்கு வெளியே வசிக்கும் இலங்கையர்கள்  உதவியை வழங்க கடுமையாக உழைத்து வருகின்றனர். அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே, இந்த அனர்த்தத்திலிருந்து மீள்வதற்கு ஒரு வலுவான நிதியமொன்றை உருவாக்க வேண்டும்.  

அதேபோன்று  தமது  துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் மீள்கட்டமைப்புக்குத் தேவையான நிதி தொடர்பான ஒழுங்கான பட்டியலைத் தயாரிக்க அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளோம். துல்லியமான தரவு மற்றும் துல்லியமான தகவல்கள் இல்லாததால் ஏற்படும் பாதகங்களை நாங்கள் அனுபவித்துள்ளோம். இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, எங்களுக்கு துல்லியமான தரவு மற்றும் தகவல்கள் அவசியம். அதன் படி அனைத்து அரச நிறுவனங்களும் அதற்காக பணியாற்றி வருகின்றன. 

இந்த துரித அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக  நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். நீண்டகால இலக்குகளை அடையவும், நாடென்ற வகையில்  ஒன்றாக வாழ்வதற்கான வாய்ப்புகளை வரலாறு தவறவிட்டுள்ளது. இந்தத் தடவை  அதனை தவறவிடாது நிறைவேற்றும் உறுதிப்பாடு நமக்கு உள்ளது. இந்த கடினமான நேரத்தில் ஏற்கனவே முன்வந்து எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து நட்பு நாடுகள், அவற்றின் தலைவர்கள், பிரஜைகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் அவர்களின் தொடர்ச்சியான ஆதரவைப் பெற  முறையான பொறிமுறையை நிறுவியுள்ளோம்.

இந்த பேரழிவு நடந்துள்ள  தருணத்தில், நாட்டிற்காக அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் மறப்போம். இனம், மதம், கட்சி அல்லது நிற வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபடுவோம். எமக்கு அரசியல் செய்ய நிறைய நேரம் இருக்கிறது. பாரிய அனர்த்தத்தை  எதிர்கொள்ள அதிக நேரம் கிடையாது. ஒன்றாக இணைந்து  நாட்டைக் கட்டியெழுப்புவோம். நாட்டைக் கட்டியெழுப்பிய பின்னர், தனித்தனியாக அரசியல் செய்ய முடியும். குறிப்பாக இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் நான் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் பணியாற்றி வருகிறேன். நமது நாட்டின் பிரஜைகள் தொடர்பில் முழுமையான நம்பிக்கை எனக்குள்ளது. நமது நாட்டின் முப்படைகள், பொலிஸார் மற்றும் நமது நாட்டின் அரச சேவை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.

இந்த நாட்டிலுள்ள கைத்தொழிற்துறையினர், தொழிலதிபர்கள், புத்திஜீவிகள் மற்றும் புத்தாக்குநர்கள் தொடர்பில் எனக்கு நம்பிக்கை உள்ளது. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. எங்கள் நட்பு நாடுகள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையுடன், இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இந்த விடயத்தில் நாங்கள் தலையிட்டுள்ளோம். நாங்கள் நிச்சயமாக முன்பு இருந்ததை விட சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புகிறோம். அதனை பூச்சியத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்ற போதும்  அந்த சவாலை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

குறுகிய வேறுபாடுகள் இல்லாமல் இந்த கூட்டு முயற்சியில் சேர அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம் . ஒரு தேசிய மற்றும் சர்வதேச திட்டத்தின் மூலம், சிறந்த  ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு நமது மனசாட்சிக்கு அமைவாக  எதிர்பார்க்கும் இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிக்குமாறு கோருகிறேன். எந்த இருளிலும் ஒளி பிறக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த இருண்ட நாட்கள் கடந்து போகும் என்றும் நாங்கள் நம்புகிறோம். எனவே, நாம் ஒன்றாக எழுச்சி பெறுவோம். இந்த கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை  குணப்படுத்துவோம். சுபீட்சமான நாட்டை  உருவாக்குவோம்."

No comments:

Post a Comment

2025 – Where Do We Go from Here?

  Looking Towards 2026 – Where Do We Go from Here? August 12, 2025 By Jerry Haar and  Altuğ Ülkümen The business environment in 2026 will be...