SHARE

Sunday, November 30, 2025

டிட்வா புயல் முழுமையாக இலங்கையை விட்டு நீங்கியது

டிட்வா புயல் முழுமையாக இலங்கையை விட்டு நீங்கியது 

30.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி
++++++++++++++++++++++++++++++++++++
இது போன்ற ஒரு தருணத்துக்காகவே காத்திருந்தோம்.
டிட்வா புயல் முழுமையாக இலங்கையை விட்டு நீங்கியது.
+++++++++++++++++++++++++++++++++++++
இன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் சில பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது காற்று சற்று வேகமாக வீசும்.
புயல் எம்மை விட்டு முழுமையாக நீங்கியிருந்தாலும் ஏற்கனவே கிடைத்த மழை காரணமாக இன்னும் மூன்று நாட்களுக்கு ஆறுகளுக்கும் குளங்களுக்கும் நீர் வரத்து இருக்கும்.
குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியாவுக்கு நீர் வரத்து நாளை முதல் குறைவடையும். ஆனால் மன்னாருக்கான நீர்வரத்து எதிர்வரும் 03.12.2025 வரை இருக்கும்.
ஆகவே குளங்களின் வான் பாயும் பகுதிகளை அண்மித்த மற்றும் ஆற்றங்கரையோரங்களில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் தொடர்ந்தும் அவதானமாக இருப்பது அவசியம்.
வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு பகுதி கடல்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
---------------------------------------------------------------------------
ஆனாலும் இந்த புயலோடு தொடர்புடைய வானிலை சார்ந்து இனி அச்சப்பட எதுவுமில்லை.
----------------------------------------------------------------------------
கடந்த சில நாட்களாக கோரத்தாண்டவமாடி, இலங்கையின் காலநிலை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகமான பாதிப்புக்களை ஏற்படுத்திய டிட்வா புயல் தற்போது இலங்கையை விட்டு முழுமையாக வெளியேறி தற்போது தமிழ்நாட்டின் காரைக்காலுக்கு மேற்கே நிலைகொண்டுள்ளது.
இன்னும் ஒரு நாள் டிட்வா இலங்கையில் நிலைத்திருந்தால் மாபெரும் பேரழிவுகள் இலங்கையில் நிகழ்ந்திருக்கும். குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மிகப்பெரும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கும்.
இந்த டிட்வா புயலின் நகர்வில் பல தடவைகள் எனக்கு அதிக அச்சம் இருந்தது. ஏனெனில் அதன் நகர்வு அத்தகையது.
கடந்த 24.11.2025 அன்று தீவிர தாழமுக்கமாக அதன் நகர்வு வேகம் மணிக்கு 9 கி.மீ. ஆக இருந்தது. பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பின் மணிக்கு 11 கி.மீ. ஆக இருந்தது. பின்னர் புயலாக மாறியபோது சிறிது நேரம் மணிக்கு 14 ஆக இருந்தது. பின்னர் மத்திய மலை நாட்டின் செல்வாக்கு காரணமாக மணிக்கு 9 கி.மீ. ஆக குறைந்தது. பின்னர் மணிக்கு 4 ஆகக் குறைந்தது.
உண்மையில் இந்த நேரத்தில் மிகப்பெரும் அச்சநிலை இருந்தது. ஏனெனில் ஒரு புயலின் நகர்வு வேகம் குறைந்தால் அது நிலைத்து நின்று பெரும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும்.
ஆனால் அது மத்திய மலை நாட்டின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு பொலன்னறுவைக்கு வந்த பின் மீண்டும் வேகமெடுத்து மணிக்கு 14 கி.மீ. நகர்ந்தது. பின்னர் மீண்டும் திருகோணமலைக்கு வந்த மீளவும் வேகம் குறைவடைந்து மணிக்கு 8 கி.மீ. ஆகக் குறைந்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு அச்சநிலை ஏனெனில் ஏற்கனவே வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு கனமழை கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் மீளவும் வேகமெடுத்து மணிக்கு 12 கி.மீ என்ற வேகத்தில் கடலுக்குள் சென்றது.
இந்த டிட்வா புயலின் இரண்டு விடயங்களுக்கு இலங்கையின் மத்திய மலைநாடு காரணமாயிருந்தது.
1. புயலின் நகர்வு வேகத்தையும் மையச் சுழற்சியின் வேகத்தையும் கட்டுப்படுத்தியது.
2. மிகக் கனமழை பொழியவும் காரணமாக இருந்தது.
எவ்வாறாயினும் இந்த டிட்வா புயல் இன்னும் ஒரு நாள் இலங்கையில் நிலைத்திருந்தாலும் இலங்கையின் நிலைமை மிக மிக கவலைக்கிடமாக இருந்திருக்கும்.
----------------------------------------------------------------------------
இலங்கையின் நவீன வரலாற்றில் நிகழ்ந்த ஆகப்பெரிய காலநிலை சார் இயற்கை அனர்த்தம் இதுவே.
-----------------------------------------------------------------------------
இது இலங்கையில் அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்திய இரண்டாவது இயற்கை அனர்த்தமாக மாறியுள்ளது. முதலாவது 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி.
-----------------------------------------------------------------------------
ஆனால் பொருளாதாரப் பாதிப்பினை ஏற்படுத்திய இயற்கை அனர்த்தங்களில் இதுவே முதலாவது. ஏனெனில் சுனாமியினுடைய பொருளாதாரப் பாதிப்புக்கள் கரையோரம் சார்ந்து மட்டுமே இருந்தது. ஆனால் டிட்வா புயல் நாடு முழுவதும் பாதித்துள்ளது. இனனும் சில நாட்களில் தாக்க மதிப்பீட்டு அறிக்கை வரும்போது அதனை உணரலாம்.
-----------------------------------------------------------------------------
உயிரிழப்புக்கள் கூட நாம் நினைப்பதை விட மிக அதிகமாக இருக்கவே வாயப்புண்டு.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதனால் 13 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. ஆனால் பில்லியன் கணக்கான பொருளாதார இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இலட்சக்கணக்கான வயல் நிலங்கள், தோட்டங்கள் அழிந்துள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்துள்ளன. இலட்சக்கணக்கான கால்நடைகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 200க்கு மேற்பட்ட குளங்கள் முழுமையாக புனரமைக்க வேண்டும். வீதிகள், பாலங்கள், புகையிரதப்பாதைகள், பொது நிறுவனங்கள் சேதமடைந்துள்ளன.
அனர்த்தத்துக்கு பின்னான நிலைமையிலும் நாம் மிக அவதானமாகவும் பொறுப்போடும் நடந்து கொள்ளவேண்டும்.
திட்டமிட்ட வினைத்திறனான அனர்த்த மீட்பு செயற்பாடுகள் அவசியம். குறுங்கால அனர்த்த மீட்பு செயற்பாடுகளும் நீண்ட கால அனர்த்த மீட்பு செயற்பாடுகளும் ஒன்றுடனொன்று இணைந்த வகையில் அமைய வேண்டும்.
இந்த மிகப்பெரிய அனர்த்தத்திலிருந்து இலங்கையர்கள் அனைவரும் மீண்டெழ வேண்டும். அந்த வல்லமையும் ஆற்றலும் அவர்களுக்கு நிறையவே உண்டு. இறைவனும் இலங்கையர்களோடு துணை நிற்பார்.
- நாகமுத்து பிரதீபராஜா -


29.11.2025 சனிக்கிழமை காலை 8.00 மணி

ஏற்கனவே குறிப்பிட்டபடி டிட்வா புயல் தற்போது சுண்டிக்குளத்தில் மையம் கொண்டு கடலுக்குள் சென்று கொண்டிருக்கின்றது. தற்போது (காலை 8.00 மணி)மையத்தின் 30% மான பகுதி கடலுக்குள் சென்றுள்ளது.

இன்று நண்பகலளவில் முழுமையாக கடலுக்குள் சென்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பேரழிவுகளை ஏற்படுத்திய டிட்வா புயல் இன்றுடன் முழுமையாக இலங்கையை விட்டு விலகும்.

இன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தின் மேற்கு பகுதிகள் சற்று கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

வடக்கு மாகாணத்தின் குளங்களுக்கு இன்றும் அதிக நீர்வரத்து இருக்கும். ஆகவே பெருநிலப்பரப்பின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்.

வடமேல் மாகாணம் இன்று கனமழை யைப் பெறும் வாய்ப்புள்ளது.

மத்திய மற்றும் மேல் மாகாணத்தின் ஒரு சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு வானிலை இன்று படிப்படியாக சீரடையும்.

- நாகமுத்து பிரதீபராஜா -

29.11. 2025 சனிக்கிழமை மாலை 4.45 மணி


2025.11.29 සෙනසුරාදා පෙ.ව. 8.00

දැනටමත් සඳහන් කළ පරිදි, ටිට්වා සුළි කුණාටුව චුන්ඩිකුලම් හි කේන්ද්රගත වී මුහුද දෙසට ගමන් කරමින් සිටී. දැනට (පෙ.ව. 8.00) මධ්යයේ 30% ක් මුහුද දෙසට ගමන් කර ඇත.

අද දහවල් වන විට එය සම්පූර්ණයෙන්ම මුහුද දෙසට ගමන් කරනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.

උතුරු සහ නැගෙනහිර පළාත්වල බොහෝ ප්රදේශවල අද මධ්යස්ථ සිට තද වැසි ඇති වීමට ඉඩ ඇත. විශේෂයෙන් උතුරු පළාතේ බටහිර ප්රදේශවලට තද වැසි ලැබීමට ඉඩ ඇත.

උතුරු පළාතේ ජලාශවලට අද දිනයේදීත් ඉහළ ජල මට්ටමක් ලැබෙනු ඇත. එබැවින්, ප්රධාන භූමියේ පහත් බිම් ප්රදේශවල ජනතාව විමසිලිමත් වීම අවශ්ය වේ.

වයඹ පළාතට අද දින තද වැසි ලැබීමට ඉඩ ඇත.

මධ්යම සහ බටහිර පළාත්වල ප්රදේශ කිහිපයකට මධ්යස්ථ වැසි ලැබීමට ඉඩ ඇත.

අද දිවයිනේ සෙසු ප්රදේශවල කාලගුණය ක්රමයෙන් යහපත් වනු ඇත.

- නාගමුතු ප්රදීපරාජා - 

No comments:

Post a Comment

2025 – Where Do We Go from Here?

  Looking Towards 2026 – Where Do We Go from Here? August 12, 2025 By Jerry Haar and  Altuğ Ülkümen The business environment in 2026 will be...