பதுளை கொஸ்லந்தை, மீரியாபெத்தை அனர்த்தம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மண்சரிவு ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்ற போதிலும், அவ்வாறான எந்தவொரு எதிர்வு கூறலும் விடுக்கப்பட்டிருக்கவில்லை என்று அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ, அந்த மக்கள் பாதிக்கப்பட்டுவிட்டனர்.அதுமட்டுமன்றி, இன்னும் பல பிரதேசங்களில் அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாத்து அவர்களுக்கு தேவையான காணி மற்றும் வீடுகளை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கவனத்திற் கொண்டு, அம்மக்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படல் வேண்டும். துரதிஷ்டவசமாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகையும் குறைவானதாகும்.
குறித்த பிரதேசத்துக்கு 2011ஆம் ஆண்டில் அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றபோதிலும் அவ்வாறான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிப்பதால், ஏனைய குழுக்களைப் போல் அல்லாது, விசேட குழுவொன்றை நியமித்து துரிதமாக விசாரணை நடத்தப்படல் வேண்டும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment