Tuesday, 4 November 2014

அம்பாந்தோட்டை துறைமுகம் மத்தள விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளே மண்சரிவு ஏற்படக் காரணம்:-



அம்பாந்தோட்டை துறைமுகம் மத்தள விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளே மண்சரிவு ஏற்படக் காரணம்:-
03 நவம்பர் 2014
சன்குகவரதன் - குளோபல்தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:-

அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைப்பதற்காக கடல் தோண்டப்பட்டமைதான் கொஸ்லாந்த, மீரியபெத்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்படக் காரணம் என  ஜனநாயக மக்கள் முன்னணியின் உப செயலாளரும் மேல்மாகாண சபையின் கொழும்பு மாவட்ட உறுப்பினருமான சன் குகவரதன் தெரிவித்தார்.


இதனால் மண்சரிவுக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான வேறு இடங்களில் காணிகளை உடனடியாக வழங்கி அங்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக சன்குகவரதன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது.


அரசாங்கத்தின் திட்டமிடப்படாத அபிவிருத்தித் திட்டங்களினால்தான் மண் சரிவு அபாயங்கள் ஏற்பட்டுள்ளன. அம்பாந்தோட்டை துறை முகத்தை அமைப்பதற்கு கடல் ஆழமாக தோண்டப்பட்டமையும், மத்தள பிரதேசத்தில் சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுமே மீரியபெத்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டமைக்கு காரணம் என சில புவியியலாளர்கள் கூறுவதாக சன் குகவரதன் சுட்டிக்காட்டினார்
.


அரசாங்கத்தின் இந்த முறையற்ற அபிவிருத்தித் திட்டங்களினால் உறவினர்களின் உயிர்களையும் இருப்பிடங்களையும் இழந்து நிற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்ய வேண்டும். 75 சிறுவர் சிறுமியர்கள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். அவர்களை உரிய முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுப்பதுடன் இது தொடர்பான வேலைத் திட்டங்களை பாராளுமன்றத்திலும் ஊவா மாகாண சபையிலும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.
பொது மக்களும், பொது அமைப்புகளும் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களும்; தங்களால் இயன்றளவு நிவாரண உதவிகளை செய்கின்றன. இதனால் அரசாங்கம் தங்களுக்குரிய நிவாரண பணிகளை தட்டிக்கழிக்க முடியாது. கொஸ்லாந்த, மீரியபெத்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்படும் என ஏற்கனவே மக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் மக்கள் அதனை அலட்சியப்படுத்தியதாகவும் அரசாங்கம் கூற முடியாது.


ஏனெனில் மாற்று இடங்களை கையளிக்காமல் வேறு இடங்களுக்குச் செல்லுமாறு எவ்வாறு கூற முடியும் என கேள்வி எழுப்பிய சன் குகவரதன் மக்களுக்கான பொறுப்பில் இருந்து அரசாங்கம் விலகிச் செல்வதாகவும் குற்றம் சுமத்தினார்.


திருகோணமலை சம்பூர் பிரதேசத்திலும் மக்களை பாதிக்கும் வகையில் அணல் மின் நிலையம் நிறுவப்படவுள்ளது. மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் புத்தளம் நுNரைச் சோலையில் அணல் மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களுக்கு எற்பட்ட மற்றும் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் பாதிப்புகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.


அதேபோன்று காலி முகத்திடலுக்கு அருகில்; 233 ஹெக்ரேயர் பரப்பளவு கடற்பரப்பை முடி துறைமுக நகரம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் சீனாவுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. அதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் சூழவுள்ள பிரதேசங்களில் ஏற்படப்போகும் பாதிப்புகள் தொடர்பாக அரசாங்கம் ஆய்வு செய்ததா என்று கேள்வி எழுப்பிய சன் குகவரதன் மக்களைப் பற்றி அக்கறைப்படாத அபிவிருத்தித் திட்டங்கள் யாருக்காக எனவும் கேள்வி தொடுத்தார்.


மக்கள் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத முறையில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். வெளிநாடுகளின் நிதி கிடைக்கின்றது என்பதற்காக சாதாரண குடிமக்களை பாதிக்கும் அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் ஏற்கக்கூடாது. அது அழிவுக்கே வழிவகுக்கும்.


இது தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் சன் குகவரதன் கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...