Tuesday 15 April 2014

புதிய இன வாழையால் பொருளாதார இழப்பு விவசாயிகள் கவலை


புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கெவண்டீஸ் இன வாழைச் செய்கை மூலம் அறுவடை செய்யப்படும் வாழைக்குலை மற்றும் வாழைப்பழத்தைச் சந்தைப்படுத்த முடியாத நிலையால் தாம் பொருளாதார இழப்புக்கு உள்ளாகி இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இளைய வளர்ப்பு முறையில் வெளிமாவட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கெவிண்டீஸ் இன வாழை நாற்றுக்கள் தனியார் நிறுவனங்களால் கவர்ச்சிகரமான விளம்பரத்துடன் யாழ்.மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டன. சிறிய அளவிலான பைகளில் நடுகை செய்யப்பட்டு ஒன்று 125 ரூபாவுக்கு மேல் 175 ரூபா வரையும் விற்பனை செய்யப்பட்டன.

உயரம் குறைவானதும் காற்றுக்கு சாயாததும் நிறை கூடிய குலைகளை தரும் என்ற கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி விவசாயிகள் தமது தோட்டங்களிலும் பலர் வீடுகளிலும் அவற்றை நடுகை செய்தனர். 

ஆனால் அறுவடை செய்யப்படும் கெவண்டீஸ் வாழைக் குலைகளை யாழ்ப்பாணத்தில் நல்ல விலைக்கு விற்க முடியாத நிலையில் செய்கையாளர்கள் உள்ளனர்.
உள்ளூர் கதலி வாழைக் குலையிலும் குறைவான விலையில் ஒரு கிலோ 15 ரூபாவுக்குக் குறைவாகவே விற்கக் கூடியதாக உள்ளது.

கெவண்டீஸ் வாழைப்பழம்  சுவையிலும் மாறுபட்டதாக உள்ளது. இனிப்புத்  தன்மை இவற்றில் மிக மிகக் குறைவு. பழம்  பச்சை நிறம் கொண்டது. சாதாரண வாழைப் பழங்களிலும் பார்க்க நீளமானது. இதனை உள்ளூர் மக்கள் விரும்பிக் கொள்வனவு செய்வதில்லை.

ஆனால் வெளி மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லத் தயங்குகின்றனர். யாழ்.மாவட்டத்தின் வெப்ப நிலை வீச்சு வறட்சிக்கு தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் மிகக் குறைந்த காலத்தில் கெவிண்டீஸ் வாழை குருத்தடைப்பு மற்றும் வெள்ளைக் குருத்து நோய்களுக்கு உள்ளாகி வருவதாகவும் கூறப்படுகின்றது.

யாழ்.மாவட்டத்தில் புதிய பயிர் இனங்களை அறிமுகம் செய்யும்போது மாவட்ட நிலையை கருத்தில் கொள்ளாமலும் விவசாயிகளின் நலனை மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகளை கருத்தில் கொள்ளாமலும், அறிமுகம் செய்யப்படுவதால் விவசாயிகள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாவதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது. 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=855892858515100125#sthash.lI4RvElN.dpuf

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...