SHARE

Tuesday, August 11, 2026

ஐக்கிய விவசாயிகள் முன்னணி நடத்தும் இந்திய மறியல் போராட்டம்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் மறியல் போராட்டம்

அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து தாராள வர்த்தக ஒப்பந்தங்களை எதிர்த்தும், விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலையை சட்டமாக்க கோரியும்,விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும், தொழிலாளர் விரோத 4 சட்ட தொகுப்புகளை எதிர்த்தும், மினசாரத்துறையை தனியார்மயமாக்கும் மசோதா 2025, விதை மசோதா 2025 மற்றும் உணவு பாதுகாப்பு சட்டதிருத்த மசோதாவை எதிர்த்தும், கட்டாய நில அபகரிப்பு மற்றும் கார்ப்பரேட் நிலக்குவியலை எதிர்த்தும் ஆகஸ்ட் 10 அன்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி நாடுதழுவிய போராட்டத்தை அறிவித்து தொடர்ந்து நடத்தி வருகின்றது.

இந்திய விவசாயிகள் போராட்ட ஆதரவு இணைய சுவரொட்டி-ENB

ஐக்கிய விவசாயிகள் முன்னணி நடத்தும் அகில இந்திய போராட்டம் வெல்க! 


செய்திகள்:

புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யூ), அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியன சார்பில், புதுச்சேரி காமராஜர் சிலை, மதகடிபட்டு, பாகூர், காரைக்கால் ஆகிய பகுதிகளில் நேற்று சாலை மறியல் நடந்தது.

போராட்டத்தில், புதிய நான்கு தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை முழுமையாக திரும்ப பெற வேண்டும். தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, வேலை பாதுகாப்பு மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

சி.ஐ.டி.யு., தலைவர் தினேஷ்குமார் தலைமையில், காமராஜர் சிலையருகே ஊர்வலம் துவங்கியது. பொது செயலாளர் சீனுவாசன், நிர்வாகிகள் ராமச்சந்திரன், பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

அவர்களை பெரியகடை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின், நிர்வாகிகள் அண்ணா சாலை – காமராஜர் சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

இதே போல், புதுச்சேரியில் தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மறைமலையடிகள் சாலையில் உள்ள பஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொது செயலாளர் அந்தோணி தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அவர்கள் புதுச்சேரி பஸ் நிலையம் நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உருளையன்பேட்டை போலீசார், அவர்களை கைது செய்தனர். இரு இடங்களில் நடந்த போராட்டத்தில் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

 “வெள்ளையனே வெளியேறு!” முழக்கத்துடன் தஞ்சையில் தொழிலாளர்கள்–விவசாயிகள் மறியல்

100 நாள் வேலைத்திட்டத்தை முறையாக செயல்படுத்தி, தொழிலாளர்களுக்கு உரிய வேலை மற்றும் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Written By : என்.நாகராஜன் 11 Aug 2026 

தஞ்சாவூர்:  “வெள்ளையனே வெளியேறு... சுதந்திரப் போராட்ட பாரம்பரியத்தை முன்னெடுப்போம்... இந்தியாவை காப்போம்... இந்திய மக்களை காப்போம்” என்ற முழக்கங்களுடன், மத்திய அரசின் தொழிலாளர், விவசாயி மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சாவூர், பேராவூரணி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சம்யுக்த கிஷான் மோர்ச்சா மற்றும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டத்திலும் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தொழிலாளர் விரோதச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தல்

போராட்டத்தில், தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்கும் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். தொழிற்சங்க உரிமைகளுக்கு முழுமையான உத்தரவாதம் அளிக்க வேண்டும். நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும்.

தொழிலாளர்கள் மீது அமல்படுத்தப்படும் அடக்குமுறை சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உரிய சமூக பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

விவசாயிகளின் கோரிக்கைகள்

விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். விவசாயத்துக்கு தேவையான இடுபொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உரத்தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். பயிர் காப்பீடு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

நில ஆர்ஜிதம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

மேலும், காவிரி நீர் தொடர்பான முக்கிய பிரச்சினையாக கருதப்படும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்டது.

பொதுத்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். தேசிய பணமாக்கல் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

100 நாள் வேலைத்திட்டத்தை முறையாக செயல்படுத்தி, தொழிலாளர்களுக்கு உரிய வேலை மற்றும் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தஞ்சாவூரில் 200 பேர் கைது

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு தொமுச மாவட்ட செயலாளர் கு.சேவியர், ஏஐடியுசி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் ரவி, ஏஐசிசிடியு மாவட்டத் தலைவர் ராஜன், ஹெச்.எம்.எஸ். மாவட்டச் செயலாளர் சின்னப்பன், யூடியூசி மாவட்டத் தலைவர் மோகன்தாஸ், ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகிகள் என்.வி.கண்ணன், ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன், சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் மாலதி சிட்டிபாபு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஏ.மாரியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.அபிமன்னன், என்.சரவணன், எஸ்.செல்வராஜ், மாநகர செயலாளர் எம்.வடிவேலன், தஞ்சை ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராசு, சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் கே.அன்பு மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், அரங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேராவூரணியில் 17 பேர் கைது

பேராவூரணி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம் கண்டன உரையாற்றினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சிதம்பரம், ரவி, சிவனேசன் மற்றும் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

பட்டுக்கோட்டையில் 37 பேர் கைது

பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.வாசு தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, ஒன்றிய செயலாளர் எஸ்.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் கு.பெஞ்சமின், ஒன்றியத் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வன், சிவகாமி, ஓய்வூதியர் சங்கம் சிவ.ரவி, சிஐடியு என்.கந்தசாமி, கட்டுமானத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் காளிதாஸ், மதுக்கூர் அய்யநாதன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 37 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்பான கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. தொழிலாளர் உரிமைகள், விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, பொதுத்துறை பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

 
ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து தேனியில் 8 இடங்களில் மறியல் 400 பெண்கள் உட்பட 1100 பேர் கைது
10 Aug 2026 தீக்கதிர்



ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து தேனியில் 8 இடங்களில் மறியல்

400 பெண்கள் உட்பட 1100 பேர் கைது

தேனி ,ஆக.10-ஒன்றிய பாஜக அரசின் மக்கள்விரோத, தொழிலாளர் விரோத,விவசாயிகள் விரோத திட்டங்களைகைவிட வேண்டும் . நான்கு தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தேனிமாவட்டத்தில் 8 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 400 பெண்கள் உட்பட 1100 பேர் கைது செய்யப்பட்டனர் .

விவசாய விளைபொருட்களுக்கு சட்டபூர்வ குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்க வேண்டும் . விவசாயத் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் . ரூ.700 சம்பளம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு, எஸ்கேஎம் -ஐக்கிய விவசாயிகள் முன்னணி, விவசாயத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஆகஸ்ட் 10 அன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

தேனியில் நடைபெற்ற மறியல்போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் டி. ஜெயபாண்டி தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர்மகாலட்சுமி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் ,விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.கண்ணன்,வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் டி.நாகராஜ் , மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சத்யா ,ஓய்வூதிய சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ராமமூர்த்தி ,சிபிஎம் தேனி தாலுகா செயலாளர்இ. தர்மர்உள்ளிட்ட 87 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கம்பம்

கம்பத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியுதலைவர் வீ. மோகன், ஆட்டோ சங்கர் தலைவர் ஐ பாலகுருநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். மறியல் பேரணியை சிபிஎம் ஏரியாசெயலாளர் கே.ஆர். லெனின்துவக்கி வைத்தார். விவசாயிகள் சங்க செயலாளர் கர்ணன் , மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் நிர்வாகி ரெங்கேஸ்வரன் , வாலிபர் சங்கத் தலைவர் விக்னேஷ் மற்றும் 80 பெண்கள்உட்பட 240 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோம்பை

கோம்பையில் விவசாயிகள் சங்க தேவாரம் ஏரியா செயலாளர் எஸ். சுருளிவேல், பாளையம் ஏரியா செயலாளர் எஸ். லட்சுமணன், விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சி. வேலவன், ஏரியா தலைவர் கே.ஆண்டவர் ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் ஜி .சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் எம். ராமச்சந்திரன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.எம். நாகராஜன், தென்னை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் அம்சராஜ்,கட்டுமான சங்க மாவட்டக்குழு உறுப்பினர் முருகேசன் வேளாங்கண்ணி மற்றும் 131 பெண்கள் உட்பட 196 பேர்கைது செய்யப்பட்டனர்.

ஆண்டிபட்டி

ஆண்டிபட்டியில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் டி.வெங்கடேசன் தலைமை வகித்தார்.விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் கே. எஸ். சந்திரன் உட்பட 160-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.

பெரியகுளம்

பெரியகுளம் கனரா வங்கி முன்பு நடைபெற்ற மறியலுக்கு சிஐடியு செயலாளர் ஆர் .கே. ராமர், விவசாயிகள் சங்கசெயலாளர் டி. நாகராஜ் ,வி.தொச செயலாளர் ஜி. சுப்பிரமணி ஆகியோர் தலைமை வகித்தனர். மறியலில் திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக சிஐடியுபொதுச் செயலாளர் என் .இராமநாதன் ,விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் எம் .வி. முருகன், சிஐடியுமாவட்ட பொருளாளர் சு. வெண்மணி மற்றும் 39 பெண்கள் உட்பட 110பேர் கைது செய்யப்பட்டனர்.

சின்னமனூர்

சின்னமனூர் கனரா வங்கி முன்பு நடைபெற்ற மறியலுக்கு சிஐடியு செயலாளர் முருகேசன், விவசாயிகள் சங்கநிர்வாகி எஸ்.சஞ்சீவிகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.ஆறுமுகம் பேசினார்.விவசாய தொழிலாளர் சங்கமாவட்ட நிர்வாகி ஏ.வி.அண்ணாமலை, சிஐடியு நிர்வாகி ஆர்.பாண்டியன், மற்றும் 88 பெண்கள் உட்பட 121 பேர் கைது செய்யப்பட்டனர்.

போடி

போடி தேவர்சிலை அருகே நடைபெற்ற மறியலுக்கு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச்செயலாளர் எல்.ஆர்.சங்கரசுப்பு, சிஐடியு மாவட்ட நிர்வாகி ஜி.கணேஸ்ராம் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம்தாலுகாச்செயலாளர் சி.முனீஸ்வரன் ஆதரித்துப் பேசினார். விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் எஸ்.கே.பாண்டியன் மற்றும் 75 பேர் கைதாகினர்.

கூடலூர்

கூடலூர் கனரா வங்கி முன்பு நடைபெற்ற மறியலுக்கு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச்செயலாளர் பி. ஜெயராஜ் தலைமை வகித்தார். விவசாய சங்க ஏரியா செயலாளர் சி .மொக்கப் பாண்டி, சிஐடியு டாட்டா ஏசி சங்க செயலாளர் தீனா, வி.தொ.ச கூடலூர் ஏரியா செயலாளர் சலீம் உட்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர்

No comments:

Post a Comment

ஐக்கிய விவசாயிகள் முன்னணி நடத்தும் இந்திய மறியல் போராட்டம்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் மறியல் போராட்டம் அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து தாராள வர்த்தக ஒப்பந்தங்களை...