![]() |
``சரித்திரபூர்வ திஸ்ஸ ராஜமகா விகாரை`` இராணுவம் கட்டியமைத்து பராமரித்து வரும் விகாரையில் எழுதப்பட்டுள்ள வாசகம். |
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு சிறிலங்கா பொலிஸாரினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் ஒன்றரை வருடத்தின் பின்னர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி 2023 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டத்தின்போது பலாலி சிறிலங்கா காவல்துறையினரால் அராஜகமான அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டு சட்டவிரோத கைதுகள் இடம்பெற்றிருந்தது.
இதனையடுத்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ் பிராந்திய காரியாலயத்தில் எட்டுப் பேரினால் சிறிலங்கா காவல்துறையினருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஆயினும், காரணம் எதுவுமின்றி, குறித்த முறைப்பாட்டு கோவைகள் யாழ் பிராந்திய காரியாலயத்திலிருந்து கையேற்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை காரியாலயத்தால் விசாரணை எதுவும் நடைபெற்றிருக்கவில்லை.
இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு காரியாலயத்தில் இன்றைய நாள் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை வருடங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்படாதிருந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடு குறித்து நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது இலங்கையின் மனித உரிமைகள் குறித்த விடயதானத்தில் உரையாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியிருந்த நிலையிலேயே இந்த விசாரணை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத மாற்று மத ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆரம்பித்த போராட்டம், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீதான தாக்குதலுக்கு எதிரான,மனித உரிமைப் போராட்டமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பிடத்தக்கது:
தையிட்டி, ஒடுக்கும் சிங்கள தேசத்தின் பெரும்பான்மை மக்களின் மதமான பெளத்தமத வழிப்பாட்டுத் தலம் அமைக்கப்பட்டதோடு சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்.
இந்த இடத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பெளத்த தலம் இருந்ததாக இராணுவம் கூறுகின்றது.
இலங்கையில் பெளத்தத்தை பாதுகாப்பது தனது தலையாய கடமை என்று அரசியல் அமைப்புச் சட்டம் கூறுகின்றது.
அநுரா கும்பலின் புதிய ஆட்சி பெளத்த சாசன பாதுகாப்பு அமைச்சை தானும் உருவாக்கி தான் பிக்கு முன்னணி என்பதை நிரூபித்து வருகின்றது.
மறுபுறம் இந்த விகாரை அமைக்கப்பட்ட காணியின் உரிமையாளர் அதற்குரிய சொத்துரிமைப் பத்திரத்தோடு -உறுதியோடு- அலைகின்றார்.
இது ஒரு இடத்தில் ஒருவர் காணியில் மட்டும் நடக்கவில்லை, ஈழம் எங்கணும்- தமிழர் பூமி- எங்கணும் நிகழ்கின்றது.
இன்று நேற்றல்ல 1948 முதல் அரசின் திட்டமாக ஆயுத முனையில் நிகழ்த்தப்பட்டுவருகின்றது.
இது சடுதியாக மனித உரிமைப் போராட்டமாக மாறியுள்ளது!
அரசியல் உரிமைகளை அடக்கி ஒடுக்குபவர்களுக்கு `மனித உரிமை` மிகச் சிறந்த பதுகாப்புக் கவசம் ஆகிவிட்டது.
இது மக்களின் விடுதலைக்கு உதவாது. அரசியல் -தேசிய சுயநிர்ணய உரிமை- முழக்கத்தைத் தரம் தாழ்த்தி போராட்டத்தை மழுங்கடிக்கவே உதவும்.🔺
No comments:
Post a Comment