SHARE

Saturday, December 27, 2014

தேர்தலை புறக்கணிக்கக் கூடாது, மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும்- புத்திசாலி சி.கா.செந்திவேல்

தேர்தலை புறக்கணிக்கக் கூடாது, மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும்- புத்திசாலி சி.கா.செந்திவேல்

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய பகிரங்க அரசியல் கருத்தரங்கில் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் ஆற்றியஉரை.

நாட்டின் ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கும் இனஅடிப்படையில் ஒடுக்கப்பட்டுவரும் தேசிய இனங்களுக்கும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மூலம் விடிவோ விமோசனமோ வரப்போவதில்லை.

அந்நிய சக்திகளின் ஆதரவும் அரவணைப்பும் பெற்று நிற்கும் தரகு முதலாளிய பேரினவாத ஆளும்வர்க்கக சக்திகள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே பிரதான வேட்பாளர்கள் இருவரும் தங்களுக்குள் இரு தரப்பாகி நின்று இத்தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

மகிந்த ராஜபக்சாவும் அவரது சகோதரர்களினதும் குடும்ப சர்வாதிகார ஆட்சி தொடர்வதாலோ அல்லது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிப் பதவியைப் பெற்றுக்கொள்வதாலோ நாடு எதிர்நோக்கி நிற்கும் அடிப்படைப் பிரச்சனைகளுக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கும் தீர்வுகள் கிடைக்கப்போவதில்லை.

அதேவேளை இத்தேர்தலைப் புறக்கணிப்பதோ அல்லது நிராகரிப்பதோ இன்றைய சூழலில் அரசியல் புத்திசாலித்தனமாகவும் அமையமாட்டாது


எனவே உடனடியானதும் தூரநோக்கில் ஆனதுமான விளைவுகளைச் சிந்தித்து மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதையே எமது கட்சி சுட்டிக்காட்டி நிற்கிறது

இவ்வாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி யாழ்ப்பாணம் கொக்குவிலில் நடாத்திய ஜனாதிபதித் தேர்தலும் மக்கள் எதிர்நோக்கும் சவால்களும் எனும் தலைப்பிலான பகிரங்க அரசியல் கருத்தரங்கில் உரையாற்றிய கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் கூறினார்.

கட்சியின் வடபிரதேசச் செயலாளர் கா.செல்வம் கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்ற மேற்படி அரசியல் கருத்தரங்கில் செந்திவேல் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

1978ல் தொடக்கம் நடைமுறையில் இருந்து வரும் அரசியல் அமைப்பையும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினையும் தனது ஆறிலைந்து பாராளுமன்ற பெரும்பாண்மையுடன் ஜே.ஆர் கொண்டுவந்து நிறைவேற்றிய வேளை நாங்களும் ஏனைய இடதுசாரி ஜனநாயக சக்திகளும் அதை வன்மையாக எதிர்த்து நின்றோம்.

அதன் எதிர்கால அபாயங்களையும் ஆபத்துக்களையும் எடுத்துக்கூறினோம.; ஆனால் 36 ஆண்டுகளுக்குப் பின்பும் அந்த நிறைவேற்று அதிகாரத்தின் சர்வாதிகாரப் பிடியில் இருந்து நாடும் மக்களும் விடுபடமுடியாது தத்தளித்து வரும் நிலையே காணப்படுகிறது.

இந்நிலையிலேயே 18வது திருத்தத்தை அரசியல் அமைப்பிற்கு கொண்டு வந்து தனிநபர் குடும்ப சர்வாதிகாரத்தை தொடர்ந்து முன்னெடுக்க மகிந்த ராஜபக்சாவும் அவரது சகோதரர்களும் முனைந்து நிற்கின்றனா.; அதற்காகவே காலத்திற்கு முந்திய தேர்தலை நடாத்தி மக்களை ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை தொடர்வதற்கு நிற்கிறார்கள். அதற்காக பலநூறு கோடி ரூபாய்களை தண்ணீர் போல் இறைத்தும் வருகிறார்கள.;

இக் கோடிகோடியான பணம் எங்கிருந்து. கிடைத்தது எதற்காக செலவிடப்படுகிறது. இதனால் நாட்டு மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது. இவைபற்றி மக்கள் கேள்விகள் எழுப்பி சிந்திப்பது அவசியம். ஏனெனில் நாடும் மக்களும் எதிர்நோக்கியுள்ள அடிப்படை பொருளாதாரப் பிரச்சனைகள் பற்றியோ பிரதான பிரச்சனையாக இருந்துவரும் தேசிய இனப்பிரச்சனை பற்றியோ அதற்கான குறைந்த பட்ச தீர்வு சம்மந்தமாகவோ மகிந்த ராஜபக்சா பேசத் தயாராகவில்லை.

அதற்குப்பதிலாக பயங்கரவாதமும் புலிகளும் வரப்போகிறார்கள் என்றும் நாடு பிரிக்கப்படுவதை அனுமதிக்கப் போவதில்லை என்றும் தாய்நாட்டைக்காக்க தானே தகுதியான தலைவன் என்றும் சிங்கள்மக்கள் மத்தியில் மகிந்தாவும் அவரது அணியினரும் பேரினவாத நச்சுப் பிரசாதத்தைப் பரப்பி வருகிறார்கள்,

அதேவேளை வடக்குக் கிழக்கில் வந்து எவ்வித கூச்சமும் வெட்கமுமின்றி அபிவிருத்தி பற்றி மட்டும் உரத்துப் பேசிச் செல்லுகிறார்கள் குறுக்குவழிகளில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறபல்வேறுபட்ட வேடங்களைப் போட்டு நிற்கிறார்கள் எனவே முழுநாட்டு மக்களும் அதேவேளை தமிழ், முஸ்லீம், மலையகத்தமிழ் மக்களும் நிறைவேற்றுஅதிகாரத்தின் கீழ் குடும்ப ஆட்சியின் பாசிச சர்வாதிகாரத்தை தொடர இடமளிப்பதா என்பதையிட்டு ஆழச்சிந்தித்து செயல்படுவது அவசியமானதாகும்.

அதே வேளை எதிரணி; எனக்கூறிப் பொதுவேட்பாளராக முன்நிறுத்தப்பட்டுள்ள மைத்திரிபாலசிறிசேன எவற்றை சாதிக்கப்போகிறார் என்பதையிட்டு தூரநோக்கில் ஆழச்சிந்திப்பதும் அவசியமானதாகும். அவரைப் பொதுவேட்பாளராக முன் நிறுத்தியவர்கள் எவரும் அரசியலில் புதியவர்கள் அல்லர். அன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைக் கொண்டுவந்து நாட்டின் பொருளாதாரத்தை அந்நியருக்குத் தாரைவார்த்துக் கொடுத்து 17 வருட இருண்ட ஆட்சியை நடாத்திய ஜக்கிய தேசியக்கட்சியும், அந்தஅரசியல் அமைப்பின் கீழ் 11 வருட கால ஆட்சி செய்த சந்திரிகா அம்மையாரும், 30வருட யுத்தத்தை தழிழ் மக்களுக் கெதிராக நடாத்தி இறுதிவெற்றி எனும் பேரழிவுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் இரானுவத் தளபதி சரத்பொன்சேகாவும் நாட்டில் அடிப்படை மாற்றங்களை கொண்டு வரப்போவதில்லை.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தைக் கொண்டு வந்து நல்லாட்சி நடாத்துவோம் என்று கூறுவது தனிநபர் சர்வாதிகாரத்திற்கு பதிலான ஆளும் வர்க்கக் கூட்டு சர்வாதிகாரத்திற்கே ஆகும்.

பாராளுமன்றத்திற்கு அதிகாரம் மாற்றப்பட்டதும் நாட்டின் பிரச்சனைகள் யாவும் தீர்ந்து மக்கள் சுபீட்சமும் சமாதானமும் நிலவும் சொர்க்கபுரியில் வாழ்வார்கள் என்பது வெறும் கனவுலகக் கற்பனையே யாகும்.

எதிரணிப் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள “நூறுநாட்களில்”; புதிய தேசம் எனும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 11 விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமாக கூறியுள்ளவை நிறைவேற்று அதிகாரத்திற்கு பதிலாக பாராளுமன்ற அதிகாரமும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்காவை நியமித்தும் புதிய அரசியல் அமைப்பைக் கொண்டுவந்தும் நாட்டில் நல்லாட்சியை நடாத்துவதேயாகும் என்றே கூறப்பட்டுள்ளது.

ஆனால் நாடு எதிர்நோக்கியுள்ள நாசங்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ள நவகொலனித்துவத்தின் கீழான நவதாரள பொருளாதாரத்தை அகற்றுவது பற்றியோ அதற்குப ;பதிலான திட்டமிட்ட தேசிய பொருளாதாரத்தை முன்னெடுப்பது பற்றியோ துளிஅளவும் கூறப்படவில்லை.

தாராளமய தனியார்மய, உலகமயமாதல் கொள்கை நடமுறைகளால் மக்களின் அன்றாட வாழ்நிலைகள் நாசமடைந்து செல்வது பற்றிப் பேசப் படவேயில்லை. அத்துடன் நாட்டில் 30 வருட யுத்தத்திற்கும், 3 இலட்சம் வரையான வடக்கு கிழக்கு மக்களின் உயிரழிவுகளுக்கும் உடைமையிழப்புகளுக்கும் காரணமான தேசிய இனப்பிரச்சனையின் தீர்வு பற்றி மைத்திரியின் நூறுநாட்களில் புதிய தேசத்திற்கான
கொள்கைத்திட்டத்தில் ஒரு வார்த்தைதானும் பேசப்படவில்லை.

இந்த நாட்டின் சனத்தொகையில் சுமார் 24 சதவீதத்தினரான தமிழ், முஸ்லீம், மலையகத்தமிழ்த் தேசிய இனங்கள் மற்றும் சிறுபான்மையினர் பற்றியோ அவர்கள் எதிர்நோக்கி நிற்கும் பிரச்சனைகள் பற்றியோ மைத்திரியின் புதிய தேசக்கொள்கை கள்ள மௌனத்தையே கொண்டுள்ளது அதன் அர்த்தம் சிங்கள பௌத்த பேரினவாதமேயாகும். இவைபற்றி ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் சிந்திக்கவேண்டியவர்களாகவே உள்ளனர்.


கடந்த 9வருடங்களில் இரண்டு தடவைகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து சகல வளங்களையும் அதிகாரத்தையும் தமதாக்கி ருசிகண்ட பெரும் அடக்கு முறைப் பூதமாகவே மகிந்த ராசபக்சா இருந்து வருகிறார். அவரை மீளவும் அதிகாரத்திற்கு வராது மறிப்பதற்கும் வீழ்த்துவதற்கும் பாராளுமன்ற ஜனநாயகத்தின் பேரில் புதிய அடக்குமுறை ஆட்சியை நடாத்துவதற்கு மைத்திரி என்ற மற்றொரு வகைப் பூதம் முன்நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்விரு அடக்குமுறைத் தரப்புப் பூதங்களுக்கும் பின்னால் அந்நிய மேலாதிக்க சக்திகளும், பல்தேசிய கம்பனிகளும், பெருவணிக நிறுவனங்களும், முதலீட்டு வங்கிகளும் அணிவகுத்து நிற்கின்றன. இந்நிலையில் மகிந்த ராசபக்ச சகோதரர்களின் குடும்ப ஆட்சி வீ;ழ்த்தப்படவேண்டும் என்பதில் நியாயம் இருப்பினும் அடுத்து ஆட்சியில் அமரப்போகும் மைத்திரி – ரணில் எதிரணி கூட்டணியானது மக்களை விரைவாகவே ஒடுக்கி நிற்கும் என்பதில் ஜயம் இருக்கமுடியாது.

எனவே இத்தேர்தலில் இவ்விரு தரகு முதலாளிய பேரினவாத தரப்புகளுக்கும் அப்பால் ஒருசக்தி மிக்க இடதுசாரி முற்போக்கு அணியொன்று உழைக்கும் மக்களையும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி மாற்று அரசியல் மார்க்கத்தை காட்டுவதற்கு முன்வந்திருக்க வேண்டும். அதனை வற்புறுத்தி அதற்கான முன்முயற்சியில் எமது கட்சி முன்நின்று செயல்பட்டபோதும் அதனை செயல்படுத்த முடியாமைப் போனமை
இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகளின் பலவீனமேயாகும் என்பதனைச் சுட்டிக்காட்ட வேண்டியே உள்ளது.

இருப்பினும் எதிர்காலத்தில் இத்தகைய முயற்சிகள் வெற்றி பெற்று மாற்று அரசியல் பாதையில் பயணிக்கவேண்டியது நம் எல்லோர் முன்னாலும் உள்ள அரசியல் கடமையாகும் என்றும் கூறினார்.

மேற்படி கருத்தரங்கில் சட்டத்தரணி சோ.தேவராஜா,தாயகம் சஞ்சிகையின் ஆசிரியர் க.தணிகாசலம் இளைஞர் முன்ணனியின் த.பிரகாஸ் ஆகியோரும் உரையாற்றினர்.

No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...